காவிரிபோல கரைபுரண்டோடிய கலைத்திறனை ஓவியங்களில் வைத்திருந்த தன்னிகரற்ற ஓவியக் கலைஞர் இளையராஜா.
ரியலிஸ்டிக் எனப்படும் தத்ரூப ஓவியங்களில் பெண்களைக் காலத்தால் அழியாத தேவதைகளாக மாற்றிய படைப்பாளி. போர்ட்ரைட் வரைவதில் மிகச்சிறந்த படைப்பாளுமை பெற்றவராக உலகத் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.
கும்பகோணம் அருகிலுள்ள செம்பியவரம்பல் என்ற கிராமத்தில் பிறந்த இளையராஜாவுக்கு ஐந்து அண்ணன்கள். ஐந்து அக்காக்கள். பெரிய குடும்பத்தில் பதினோராவது பையனாக பிறந்த அவர், சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பணியாற்றிய ஓவியர் மனோகரால் அடையாளம் காணப்பட்ட இளையராஜா, தன் தனித்திறனால் ரியலிஸ்டிக் ஓவியங்களில் மிகக் குறுகிய காலங்களில் கலையுலகில் தனித்துவம் பெற்றார்.
மாணவப் பருவத்திலேயே ஓவிய உலகின் கவனத்திற்கு வந்த இளையராஜாவின் பெண்கள் நிறைந்த ரியலிஸ்டிக் படைப்புகள் தனி கவனத்தைப் பெற்றுத்தந்தன.
திராவிடப் பெண்கள் என்ற தலைப்பிலான அவரது படைப்புகள் இன்றும் கூகுள் தேடலில் நிறைந்திருக்கின்றன.
முற்றத்தில் பூ கட்டும் பெண், கோயிலில் பூக்கூடையுடன் நிற்கும் பெண், கோலமிடும் பெண், அடுப்படியில் புகை ஊதும் பெண் என அசாத்திய திறனைக் காட்டியிருப்பார் இளையராஜா.
தூரிகையால் வரையப்பட்ட சித்திரங்களா அல்லது புகைப்படங்களா என்று கேட்கும் அளவுக்குத் தத்ரூபமானவை. அந்த ஓவியங்கள் ஆனந்த விகடனில் வெளிவந்து தமிழர்கள் வாழும் பரப்பெங்கும் பரவிப் புகழ்பெற்றன.
பள்ளியில் படிக்கும்போதே ஓவிய ஆசிரியரால், கல்லூரி ஓவியர் மனோகரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவன் இளையராஜா, பின்னாளில் மிகச் சிறந்த கலைஞனாக மாறியதற்குப் பின்னால் கடும் உழைப்பும் கலையின் மீதான தீராத தாகமும் மறைந்திருக்கிறது.
மறைந்த இளையராஜாவைப் பற்றிப் பேசினால் அவரது தோழர் மனோகரின் குரல் உடைகிறது.
“கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான பயிற்சியில் இருக்கும்போதே, சக மாணவர்களுக்குக் கற்றுத்தரும் அளவுக்கு அவன் ஓவியத்தில் சிறப்பாக இருந்தான்.
நான் சொல்லிக் கொடுத்த ஓவிய நுட்பங்களை மற்றவர்களைவிட மிக எளிதாக உள்வாங்கினான்” என்று தன் மாணவன் இளையராஜா பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார் மனோகர்.
அமெரிக்காவுக்கு சிவபாலன், இளையராஜா ஆகிய இருவருடன் சென்றுவந்த அனுபவத்தைப் பேசும் அவர், “ஸ்பாட் பெயிண்டிங் செய்யும்போது அங்கிருந்த அமெரிக்கர்கள் அவன் வரைவதைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இளையராஜா வரையும் வேகத்தையும் அழகையும் பார்த்துவிட்டு மனந்திறந்து பாராட்டினார்கள். இன்றும் அந்தக் காட்சி மனசில் ஈரமாய் இருக்கிறது” என்று நெகிழ்கிறார்.
மிக நெருங்கிய தோழரான ஓவியர் சிவபாலனுக்குப் பேச முடியவில்லை. “எதைப் பற்றிப் பேசுவது என்று திகைப்பாக இருக்கிறது. எத்தனை நினைவுகள். தனித்துவமாக வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு அவன் ஒரு முன்னோடியாக இருந்தான்” என்று உருக்கமாகப் பேசுகிறார் சிவபாலன்.
இளமையான தூரிகையால் மனித மனங்களில் மகிழ்ச்சியைத் தூவிய உன்னத கலைஞன் இளையராஜா திடீர் மின்னல்போல மறைந்துவிட்டாலும், எப்போதும் அந்த ஓவியப் பெண்களின் கண்களில் ஒளியாக அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.
பா.மகிழ்மதி