முதலமைச்சரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கிய தங்கை!

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியின் பிடியில் இருந்து, ஆந்திராவை மீட்டு அந்த மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை அரியணையில் ஏற்றியவர். விமான விபத்து ஒன்றில் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்தார்.

அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, முதலமைச்சர் நாற்காலி மீது ஒரு கண். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அவரை முதலமைச்சராக்க மறுத்துவிட்டது.

இதனால் காங்கிரசில் இருந்து வெளியேறிய ஜெகன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.  தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து, ஆந்திர முதலமைச்சர் ஆகிவிட்டார்.

இந்த கால கட்டத்தில் மத்திய காங்கிரஸ் அரசு, ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா எனும் புதிய மாநிலத்தை உருவாக்கி இருந்தது.

ஐதராபாத்தில் சும்மா இருந்த ஜெகனின் தங்கை ஷர்மிளா, ’ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா காங்கிரஸ்’ எனும் கட்சியை சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கினார்.

வியாபாரம் ஆகவில்லை. இதனால் கடந்த ஜனவரி மாதம் தனது கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரசில் சேர்ந்தார் ஷர்மிளா.

சூட்டோடு சூடாக அவரை, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தியது, டெல்லி மேலிடம். அப்போது முதல் அண்ணனும், முதலமைச்சருமான ஜெகன் மோகனை வறுத்தெடுப்பதையே முழு நேரத் தொழிலாக வைத்துள்ளார், ஷர்மிளா.

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் கடப்பா தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு 132 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார். இன்னொரு முக்கிய தகவலையும் அதில் அவர் பகிர்ந்துள்ளார்.

அண்ணன் ஜெகன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோரிடம் இருந்து 100 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக அவர் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணத்தை எப்போது வாங்கினார்? இதற்கு வட்டி ஏதும் உண்டா? என்பன போன்ற விவரங்கள் அதில் இல்லை.

தன் மீது 8 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் ஷர்மிளா, பிரமாண பத்திரத்தில் தெளிவு படுத்தி உள்ளார்.

ராகுல் – பினாராயி மோதல்

காங்கிரசும், இடதுசாரிகளும் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும், கேரளாவில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் அந்த கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் வசை பாடிய நிலையில், தலைவர்களே நேரடியாக மோதி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிரங்கமாக மோதி இருப்பது, காங்கிரஸ் தலைவர் ராகுலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தான்.

இந்த மோதலுக்கு தூபம் போட்டவர் ராகுல்தான்.

அண்மையில் அங்கு பிரச்சாரம் செய்த ராகுல், ’’பாஜக அல்லாத இரண்டு முதலமைச்சர்களை, மத்திய அரசு கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளது. ஆனால் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய ஏஜென்சிகள் (ஐடி, ஈடி), கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கைது செய்யாமல் ஏன் விட்டு வைத்துள்ளது?’ என கொளுத்திப் போட்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த பினராயி விஜயன், ’நாங்கள் கைதுக்கு அஞ்சியவர்கள் இல்லை – அவசர நிலையின் போது, உங்கள் பாட்டி இந்திரா காந்தி, கம்யூனிஸ்டுகளை ஒன்றரை ஆண்டுகள் ஜெயிலில் வைத்திருந்தார் – ராகுலின் மைத்துனர் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சிபிஐ-க்கு பயந்து, பாஜகவுக்கு 175 கோடி ரூபாய் கொடுத்துள்ளது’’ என விளாசித் தள்ளி விட்டார்.

ராகுல் – பினராய் இடையேயான மோதல், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

– பி.எம்.எம்.

You might also like