மக்கள் பணத்தை மீட்டு மக்களிடமே கொடுப்போம்!

ராகுல்காந்தி உத்தரவாதம்

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சமூக நீதி கருத்தரங்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது. இதனைப் பார்த்து பிரதமர் மோடி பயந்துள்ளார்.

நாட்டில் உள்ள பெருந்தொழிலதிபர்களின் பதினாறு லட்சம் கோடி ரூபாய் (1,60,00,00,00,00,000) கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். பிரதமர் தள்ளுபடி செய்த பணத்தை தொழிலதிபர்களிடம் இருந்து மீட்டு நாட்டில் உள்ள 90 சதவிகித மக்களுக்கு பகிர்ந்தளிப்போம்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி, “பெரும் செல்வந்தர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தள்ளுபடி செய்த பதினாறு லட்சம் கோடி ரூபாயை (1,60,00,00,00,00,000)  வைத்து, 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் விகிதம் கிடைக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கலாம் அல்லது 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் விகிதம் உதவித் தொகை கொடுத்து அவர்களின் வாழ்க்கை போக்கை மாற்றியிருக்க முடியும்; 10 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்து எண்ணற்ற தற்கொலைகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்;  அடுத்த 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 என்ற விலையில் நாட்டு மக்களுக்கு சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்; 3 நிதியாண்டிற்கான ராணுவ  செலவீனங்களை மேற்கொண்டிருக்கலாம்; தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பட்டபடிப்பு வரை இலவசமாக கல்வியைக் கொடுத்திருக்கலாம். நரேந்திர மோடியின் இந்த குற்றங்களை நாடு மன்னிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

#Loksabha  #Narendra_Modi  #Parliament_Election_2024 #Rahul_Gandhi #காங்கிரஸ் #பாஜக #மோடி  #ராகுல்காந்தி #தொழிலதிபர்கள் #bjp #congress

You might also like