காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

வழக்கத்தைவிட மாறாக பல விதத்தில் முரண்பட்ட கூறுகளுடன் நடந்து கொண்டிருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல்.

பல வினோதங்களை தற்போது வெவ்வேறு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் பார்க்க முடிகிறது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஒரு தேர்தல் ஆணையர் பதவி விலகியதிலிருந்தே தேர்தல் ஆணையம் குறித்த சர்ச்சைகள் அதிகம் அடிபட ஆரம்பித்துவிட்டன.

புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஏழு கட்டங்களாகத் தேர்தல் பல்வேறு மாநிலங்களில் இதுவரை இல்லாத வித்தியாசத்தன்மையுடன் பிரித்து, தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு சாதாரண பொதுமக்களை சோதனையிடுகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து இங்கு வருகிற டூரிஸ்டர்கள் கூட இந்த சோதனைகளுக்கு தப்பவில்லை.

ஆனால், பெரும்பான்மையான பெருந்தொகைகள் எடுத்துச் செல்லப்பட்டு பிடிபட்ட போதும் இதுவரை சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பொருந்தும்.

மேற்குவங்கம் உள்ளிட்ட தேர்தல் நடைமுறையின்போது வன்முறை வெடித்திருக்கிறது. வேறு சில மாநிலங்களும் இது சார்ந்த குளறுபடிகள் நடந்தேறி இருக்கின்றன.

மணிப்பூர் போன்ற பெரும் கொந்தளிப்பை ஒரு கட்டத்தில் வெளிப்படுத்திய மாநிலத்தில் தேர்தல் புறக்கணித்திருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

தேர்தல்கள் நடத்தை விதிமுறைகள் சாதாரண மக்களுக்கு பொருந்தும் என்றால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு எந்த அளவில் பொருந்தும் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.

பலரும் தேர்தல் வரம்பை மீறி, தேர்தல் விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு பேசுகிறார்கள்.  மற்ற மதம் சார்ந்தவர்கள் மீது கடுமை காட்டுகிறார்கள்.

இது தேர்தல் விதிமுறைக்கு முரணான ஒன்று என்றாலும் பிரதமர் மோடி உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் சாதி குறித்தும், மதம் குறித்தும் விமர்சித்திருக்கிறார்கள்.

அப்படி விமர்சித்த சிலர் மீது விதித்த சில கட்டுப்பாடுகளை பிரதமர் உள்ளிட்ட இவர்கள் மீது தேர்தல் ஆணையம் எடுக்கத் துணியவில்லை. இதையும் மீறி தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமான வாக்குப் பதிவு எந்திரத்தின் மீதே தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கிற அறைகளில் திடீரென்று கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் போய் அதை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

இதே மாதிரி பறந்துபட்ட விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைக்கு நாம் ஜூன் 4-தேதி வரை வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குபவர்களையும் தான் நம்ப வேண்டியிருக்கிறது.

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.

You might also like