அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

ஜனநாயகக் கடமையாற்றிய மோடி, கார்கே

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இதனை தொடர்ந்து, 3-ம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ‘‘தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது அவசியம் – வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் – இரண்டு கட்ட தேர்தலை சுமுகமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

முன்னதாக, வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலம் கல்புர்கியில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவிற்கு பின் பேசிய கார்கே, “கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் செய்த தவறுக்காக இப்போது வருந்துகின்றனர் – இந்த முறை காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்” என்று கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் உள்ள சைஃபை கிராமத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் ஆகியோர் வாக்களித்தனர்.

சின்ன சின்ன சம்பவங்கள்

மேற்குவங்க மாநிலத்தில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அங்குள்ள ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தனஞ்செய் கோஷ் போட்டியிடுகிறார்.

அவர் ஜாங்கிபூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படை வீரர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

நேற்று தேர்தல் நடைபெற்ற 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

– மு.மாடக்கண்ணு

You might also like