தோ அவுர் தோ பியார் – அசத்தும் வித்யா பாலன், பிரதீக் காந்தி!

வித்யா பாலன். கவர்ச்சியாகத் தோன்றுவதோடு பாத்திரத்தோடு பொருந்தும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தும் இந்தி நடிகைகளின் வரிசையில் ஸ்ரீதேவி, ஜெயபிரதா, மாதுரி தீட்ஷித், ஜுஹி சாவ்லாவுக்கு அடுத்த இடத்தை அடைந்தவர்.

திருமணமான பிறகு அண்ணி, அக்கா, அம்மா வேடங்களில் நடிப்பது அல்லது விஜயசாந்தி பாணியில் ஆக்‌ஷன் படங்களில் இடம்பெறுவது என்றில்லாமல் சவாலான பல வேடங்களை ஏற்பவர். அதனாலேயே வித்யா பாலனுக்கு என்று தனிப்பட்ட முறையில் பலர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

அவர்களைத் திருப்திப்படுத்த, அவர் கலாட்டாவும் குதூகலமும் கொப்பளிக்கும் பாத்திரங்களை ஏற்றாலே போதும். அப்படியொரு பாத்திரம் வித்யா பாலனுக்கு ‘தோ அவுர் தோ பியார்’ படத்தில் கிட்டியுள்ளதைக் காட்டியது அதன் ட்ரெய்லர்.

கூடவே, திருமணத்திற்கு வெளியேயான காதல் காரணமாக ஒரு தம்பதிக்குள் பிளவு ஏற்படுவதாக அதன் கதை வடிவமைக்கப்பட்டிருந்ததையும் சொன்னது.

சரி, படம் எப்படியிருக்கிறது?

திருமணத்திற்குப் பிறகான பந்தம்!

அனிருத் பானர்ஜி (பிரதீக் காந்தி) – காவ்யா கணேசன் (வித்யா பாலன்) இருவரும் மும்பையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர்.

ஊட்டியிலுள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் தற்செயலாகச் சந்தித்த இவர்கள் இருவரும் மூன்றாண்டு காலக் காதலுக்குப் பிறகே கல்யாணத்தில் இணைந்திருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு இடையேயான நெருக்கம் மெல்ல விட்டுப் போகிறது. பாடுவதில், இசையமைப்பதில் ஆர்வம் கொண்ட அனிருத், தனது தந்தையின் தக்கை ஆலையை நிர்வகிக்கச் சென்றபிறகு எந்திர கதியில் வாழத் தொடங்கியதும் அதற்கொரு காரணம்.

இடைப்பட்ட காலத்தில் விக்ரம் சேகல் (செந்தில் ராமமூர்த்தி) எனும் என்ஆர்ஐ புகைப்படக் கலைஞரைக் காதலிக்கிறார் காவ்யா. நோரா (இலியானா) எனும் நடிகையைக் காதலித்து வருகிறார் அனிருத்.

விக்ரம், நோரா இருவருமே தமது காதல் இணையின் திருமண முறிவை எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றாற் போல அனிருத் – காவ்யா தம்பதி நீதிமன்றத்தை நாடுகிறது.

இந்த நிலையில், ஒருநாள் காவ்யாவின் தாத்தா இறந்ததாகத் தகவல் வருகிறது.

அந்த நேரத்தில், தன் கர்ப்பமாக இருப்பதாகச் சந்தேகம் எழுந்ததாகத் தெரிவிக்கிறார் நோரா. அதனை எதிர்கொள்வதில் இருந்து தப்பிக்க, காவ்யா உடன் ஊட்டிக்குப் பயணிக்கிறார் அனிருத்.

உண்மையைச் சொன்னால், பத்தாண்டுகளுக்கு முன்னால் காவ்யாவை அழைத்துக்கொண்டு வந்தபிறகு அனிருத் ஊட்டி பக்கமே செல்லவில்லை. அதனால், அங்கிருக்கும் காவ்யாவின் உறவினர்கள் அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைகின்றனர். ஆனால், காவ்யாவின் தந்தை (தலைவாசல் விஜய்) மட்டும் கோபம் குறையாமல் இருக்கிறார்.

வந்த இடத்தில், பழைய நினைவுகள் தன்னையுமறியாமல் அனிருத்திடம் இயல்பைத் தூண்டிவிடுகின்றன. நகைச்சுவை, கலாட்டா, கும்மாளம் நிறைந்தவராக அவர் ஆகிறார். வெகுநாட்களுக்குப் பிறகு அதை ரசிக்கத் தொடங்குகிறார் காவ்யா.

மும்பை திரும்பிய பிறகும் அந்த ஈர்ப்பு குறைவதாக இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் காதல் கொள்கின்றனர். அதனை மீண்டும் மீண்டும் நுகரும் நோக்கில் தங்களது காதல் இணையிடம் பொய்களை அள்ளிவிடுகின்றனர். அது, பிரிவை நோக்கிச் சென்ற தம்பதிகள் இடையே இறுக்கத்தை அதிகமாக்குகிறது.

ஆனால், அதை சுக்குநூறாக உடைப்பது போல இரு நிகழ்வுகள் நடக்கின்றன. விக்ரம் பற்றிய உண்மை அனிருத்துக்குத் தெரிய வருகிறது. ’நான் தான் அனிருத்தின் காதலி’ என்பதை காவ்யாவுக்கு உணர்த்துகிறார் நோரா.

அதன்பிறகு என்னவானது? அனிருத் – காவ்யா தம்பதி பிரிந்தார்களா, இல்லையா என்பதைச் சொல்கிறது ‘தோ அவுர் தோ பியார்’ படத்தின் மீதி.

திருமண பந்தத்தில் இருந்து விடுபடத் துடிக்கும் ஒரு தம்பதி இடையே காதல் முளைப்பதை மையமாக வைத்துச் சுழல்கிறது இதன் திரைக்கதை. கூடவே, காதலைத் தாண்டிய ஏதோ ஒரு இணைப்பிழை இருந்தால் மட்டுமே ஒரு ஜோடி என்றென்றும் இணைந்திருக்கும் என்று சொல்கிறது.

அசாஸல் ஜேக்கப்ஸ் இயக்கிய ‘தி லவ்வர்ஸ்’ படத்தைத் தழுவியது இப்படம். 2017-ம் ஆண்டு வெளியானது.

வித்தியாசமான காட்சியாக்கம்!

மரண வீட்டை முன்வைத்து ’நெத்தியடி’, ‘எம்டன் மகன்’, ‘ஏ1’ உட்படப் பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. ‘தோ அவுர் தோ பியார்’ படத்தில் ஊட்டியில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவராக வித்யா பாலன் காட்டப்பட்டிருக்கிறார்.

தொடக்கத்தில் வரும் ஐந்தாறு காட்சிகள் வறட்சியாக, வெறுமையாக இருக்கின்றன. அடுத்து வருபவையும் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றும் நேரத்தில், ‘மாப்பிள்ளை சார் எப்படியிருக்கீங்க’ என்று நாயகியின் வீட்டில் வேலை செய்யும் டிரைவர் புள்ளி அறிமுகமாகிறார்.

பிறகு, பிரதீக் காந்தி பேசும் வசனங்கள், தரும் பாவனைகள் அனைத்தும் நம்மில் சிரிப்பை வரவழைக்கின்றன. அது போதாதென்று தனது ‘டாமினேஷன்’னை காட்ட ஆரம்பிக்கிறார் வித்யா பாலன்.

இதில் பிரதீக் காந்தி, வித்யா பாலன் இருவருமே தமது பாத்திரங்களை உணர்ந்து பொருத்தமாக நடித்துள்ளனர்.

உண்மையைச் சொன்னால் இருவருமே அசத்தியிருக்கின்றனர்.

‘பானர்ஜி’ என்று வித்யா விளிப்பதும், பதிலுக்கு ‘கணேசன்’ என்று பிரதீக் சொல்வதும், ‘காதல் சடுகுடு’வாகத் தெரிகின்றன.

அதேநேரத்தில், ‘எந்நேரமும் கணேசன் கணேசன்னு சொல்லிக்கிட்டு.. செக்யூரிட்டி கார்டை கூப்பிடுற மாதிரி இருக்கு’ என்று வித்யா பாலன் உதிர்க்கும் வசனம் நம்மவர்களை நிச்சயம் புண்ணாக்கும்.

தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த நட்சத்திரமாக, இதில் தலைவாசல் விஜய் நடித்துள்ளார். அவரைப் போலவே, இதர கலைஞர்களும் நல்லதொரு நடிப்பைத் தந்துள்ளனர்.

வித்யாவின் காதலராக வரும் செந்தில் ராமமூர்த்தியை, இதற்கு முன்னர் ’ஷோர் இன் தி சிட்டி’ படத்தில் பார்த்திருப்போம். கட்டுடல் நாயகனான அவர், இதில் மென்மையாக வசனம் பேசி நடித்துள்ளார்.

போலவே தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஒருகாலத்தில் கவர்ச்சிப் பதுமையாக வலம் வந்த இலியானா, இதில் படுசூப்பராக நடித்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து சுமார் இரண்டு டஜன் பாத்திரங்கள் திரையில் அவ்வப்போது தலைகாட்டுகின்றன.

கார்த்திக் விஜய்யின் ஒளிப்பதிவு, ரொம்பவே ‘கூலான’ இடத்திற்குச் சென்று வந்த உணர்வை உருவாக்குகிறது.

படத்தொகுப்பாளர் பர்த்ரோய் பர்ரெட்டோ, தயாரிப்பு வடிவமைப்பாளர் ஷைலஜா சர்மா, ஒலி வடிவமைப்பாளர் மந்தர் குல்கர்னி, ஆடை வடிவமைப்பாளர் வீரா கபூர் மற்றும் பின்னணி இசை தந்துள்ள சுபஜித் முகர்ஜி உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அபிஷேக் – அனன்யா, லாஸ்ட் ஸ்டோரிஸ், தி லோக்கல் ட்ரெய்ன் உள்ளிட்ட குழுக்கள் இதில் பாடல்களைத் தந்துள்ளன.

சுப்ரோதிம் சென்குப்தா, அம்ரிதா பக்சி, இஷா சோப்ரா ஆகியோர் இதில் கதை, திரைக்கதை, வசனத்தைக் கையாண்டுள்ளனர். அவர்களது வேறுபட்ட பார்வையே இப்படத்திற்குப் புத்துயிர் தந்துள்ளது. வசனங்களில் பெரும்பாலானவை குத்தீட்டிகளாகத் தென்படுகின்றன.

’வயதுவந்தோருக்கான சில நகைச்சுவைகள்’ சில ரசிகர்களின் தயக்கங்களை வெகு எளிதாக உடைத்தெறிகின்றன.

போலவே, இயக்குனர் ஷிர்ஷா குஹா தாகுர்தாவும் வித்தியாசமான காட்சியாக்கத்தின் வழியே இந்தக் கதையைப் புதுமையானதாக மாற்றியிருக்கிறார்.

ஏற்றுக்கொள்வது கடினம்!

திருமண பந்தத்திற்கு வெளியே கணவனும் மனைவியும் இன்னொரு இணையைத் தேடுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வது கடினம்.

காரணம், எதிர்பாலினத்தவரின் பார்வையில் இக்கதையை அணுகுவது இயலாத காரியம்.

அதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் அனிருத், காவ்யா பாத்திரங்களைப் படைத்துள்ளது ‘தோ அவுர் தோ பியார்’.

ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இறப்புவீட்டில் சடலத்திற்கு அருகே நாயகனும் நாயகியும் முத்தமிட்டுக் கலவியில் ஈடுபட முனைவதாக, இதிலொரு காட்சி உண்டு. அதுவே இடைவேளையாகவும் அமைந்துள்ளது.

அதன்பிறகு ரசிகர்களின் புன்னகையையும் சேர்த்தாற் போல ஒளிர்ந்தன தியேட்டரில் இருந்த விளக்குகள்.

அந்தக் காட்சி புதிதல்ல என்றபோதும், அது நம்மில் புத்துணர்வை ஏற்படுத்துவது உறுதி. அது போன்ற ஒன்றைப் படத்தின் முடிவிலும் கிடைக்கச் செய்கிறார் இயக்குனர் ஷிர்ஷா குஹா தாகுர்தா.

கசப்புச் சுவைக்கு நடுவே இனிப்பை ருசி கண்ட நாக்குகள் துள்ளியாடுவதைப் போல, இப்படம் ‘பீல்குட்’ உணர்வைத் தருகிறது. அதனை விரும்புபவர்கள், லாஜிக் குறைகளை மூளைக்கு ஏற்றிக்கொள்ளாமல் ‘தோ அவுர் தோ பியார்’ படத்தை ரசிக்கலாம்.

  • மாபா

#Do_Aur_Do_Pyaar_movie_Review #Vidya_Balan #Pratik_Gandhi #செந்தில்_ராமமூர்த்தி #இலியானா #அனிருத் #தலைவாசல்_விஜய் #இயக்குனர்_ஷிர்ஷா_குஹா_தாகுர்தா #senthil_ramamoorthy# iliyana #thalaivasal_vijay #director_shirsha_guha_thakurta  #பிரதீக்_காந்தி #வித்யா_பாலன்

You might also like