ரேபரேலி, அமேதியில் வேட்பாளர் யார்?

உற்சாகம் இழந்த உ.பி. காங்கிரசார்!

முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் உள்ள தொடர்பு, 75 ஆண்டு வரலாற்றை உள்ளடக்கியது.

அந்தக் குடும்பத்தில் இருந்து நேரு, இந்திரா, ராஜீவ், சஞ்சய், சோனியா, ராகுல், மேனகா , வருண் ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு எம்.பி.ஆனவர்கள்.

கடந்தத் தேர்தலில் சோனியா, மேனகா, ராகுல், வருண் ஆகியோர் உ.பி.யில் களம் இறங்கினர். இந்த முறை இந்த நிமிடத்தில், நேரு குடும்பத்தில் இருந்து மேனகா காந்தி மட்டுமே, உத்தரபிரதேசத்தில் போட்டியிடுகிறார்.

சுல்தான்புர் மக்களவைத் தொகுதியை, மேனகாவுக்கு பாஜக தலைமை வழங்கியுள்ளது. அவரது மகன் வருண், அங்குள்ள பிலிபட் தொகுதியில் பாஜக வேட்பாளராக மூன்றுமுறை போட்டியிட்டு ஜெயித்தார். அவருக்கு இந்த முறை சீட் கொடுக்கவில்லை.

சோனியா போட்டியில்லை

ரேபரேலி தொகுதியில் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும், சோனியா காந்தி இந்த முறை தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் .

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா அண்மையில் தேர்வு செய்யப்பட்டாலும் கூட, முதுமையும், அவரது உடல்நலமும், தீவிர அரசியலில் ஈடுபடும் நிலையில் இல்லை.

இதனால் ரேபரேலி தொகுதியில் நிற்க அவர் மறுத்துவிட்டார்.

வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கும் ராகுல்காந்தி, கடந்த தேர்தலில் தோற்றுப்போனார்.

இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவர், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வென்றதால், அவர் எம்.பி.யாக நீடிக்கிறார்.

காங்கிரசில் யார் வேட்பாளர்?

80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிதான் ’பெரிய அண்ணன்’.

‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, 17 தொகுதிகளை அகிலேஷ் ஒதுக்கியுள்ளார். இதுவரை முடிந்த இரண்டுகட்ட தேர்தலில், உ.பி.யில் 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ், ரேபரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளுக்கு இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்த இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவுசெய்ய, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இரு தினங்களுக்கு முன் டெல்லியில், கட்சியின் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தியது.

சோனியாகாந்தியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். சோனியா பலமுறை ஜெயித்த ரேபரேலியில் பிரியங்காவையும், அமேதியில் ராகுலையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தினர். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

யார் வேட்பாளர் ? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கார்கேயிடம் ஒப்படைத்து, இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அமேதிக்கு செல்லும் ராகுல்

ரேபரேலியில் பிரியங்கா நிற்பாரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அவர் இன்னும் இரண்டு நாட்களில் அமேதி செல்ல உள்ளார். அதன் பின்னர் ராகுல், அமேதி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

உற்சாகம் இல்லை

நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால், கட்சி தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.

உ.பி.யில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய்ராய், மேலிட பொறுப்பாளர் அவினாஷ் சந்திரா ஆகியோரிடம் தேர்தல் கூட்டங்களுக்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை வெறும் 6 கூட்டங்களை மட்டுமே நடத்தியுள்ளனர். 

‘’உ.பி.யில் காங்கிரஸ் பிரச்சாரம் சரியாக நடக்கவில்லை. அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை” என குறைபட்டு கொள்ளும் காங்கிரசார்,

“இந்த தொகுதிகளில் ராகுல், பிரியங்கா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வேண்டும் – இருவரும் அயோத்திக்குச் சென்று ராமரை தரிசனம் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்” என்று தெரிவித்தனர்.

இரு நாட்களில் நல்ல முடிவு வரும் காத்திருக்கிறார்கள், உ.பி.மாநில கதர் சட்டைக்காரர்கள்.

– மு.மாடக்கண்ணு

You might also like