‘ஈர நிலம்’ என்பது நம்மையும் அறியாமல் தானாகப் பிணைத்துக் கொண்ட இரு வார்த்தைகள். ‘கல் நெஞ்சமா உனக்கு’ என்று கேள்வி கேட்பது எத்தனை இயல்போ, அதே அளவுக்கு ‘நிலத்தில் மீதமிருக்கும் ஈரம்’ என்பதும் வர்ணிப்புக்கு உதவும்.
கவித்துவத்திற்கு மட்டும் அதனைப் பயன்படுத்திவிட்டு, யதார்த்தத்தில் புறந்தள்ளும் வழக்கம்தான் இன்னும் சில ஆண்டுகளில் நம்மைச் சிக்கலில் ஆழ்த்தக் காத்திருக்கிறது.
அப்படியென்ன அழிவு வந்துவிடப் போகிறது? வேறொன்றுமில்லை, இந்த பூமியில் உள்ள ஈரநிலங்கள் வேகவேகமாக அழிந்து வருகின்றன.
இதனைக் கேட்டவுடன், ஈரநிலத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதா என்ற கேள்வி எழலாம். அது இயல்பு.
எது ஈரநிலம்?

‘அந்த இடத்துல எந்நேரமும் சகதியா கிடக்கும்’ என்று சில ஊர்களில் சொல்வார்கள்.
‘புதைகுழி இருக்கும் ஜாக்கிரதை’ என்று எச்சரிப்பதும் சில வேளைகளில் நிகழும்.
சாதாரணமாக நீர் தேங்கியிருக்கும் நிலப்பகுதிகளில் மண்ணின் இயல்பு ரொம்பவே நெகிழ்ந்திருக்கும் என்பதை அவ்வார்த்தைகளில் இருந்து உணர முடியும்.
கடலோர ஈரநிலங்கள், உள்நாட்டு ஈரநிலங்கள் என்று இதனை இருவகையாகப் பிரிக்கிறது மேற்கத்திய உலகம்.
பெயருக்கு ஏற்றாற்போல கடலோரப் பகுதிகளில் காணப்படுபவை என்றும், உள்நாட்டில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள நிலங்கள் என்றும் இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.
கடற்கரையோரத்தில் உள்ள முகத்துவாரப் பகுதிகளில் சிலர் மீன் பிடிக்கக் காத்திருப்பதையும் வலம் செல்லும் வெளிநாட்டுப் பறவையினங்கள் கொத்துக் கொத்தாகத் திரிவதையும் நாம் கண்டிருப்போம்.
கடலில் இருந்து வெகுதூரம் விலகியிருக்கும் இடங்களிலும் கூட இந்த ஈரநிலங்களைக் காணலாம்.
மரங்கள், புதர்கள், புற்களின் வளர்ச்சியையும் அடர்த்தியையும் கொண்டு இந்த ஈரநிலங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.

இவற்றால் பல்வேறு தாவரங்கள், விலங்குகள் வாழ்வு பெறுகின்றன.
பறவைகள், மீன்கள், தாவும் இனங்கள், பாலூட்டிகள் என்று பலவித உயிரினங்கள் இந்த ஈரநிலப் பகுதியில் வாழ்கின்றன.
நீரைத் தூய்மைப்படுத்துதல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், கார்பன் சேமிப்பு, பருவநிலை பாதிப்புகளை மிதப்படுத்துதல், பல்லுயிர் பெருக்கம் போன்றவற்றைச் செயல்படுத்துகின்றன இந்நிலங்கள்.
இவை அனைத்தையும் ஈரநிலங்கள் என்கிறோம். ஆங்கிலத்தில் இவற்றுக்குப் பல பெயர்கள் இருந்தாலும், தமிழில் பேச்சு வழக்கில் ‘சதுப்பு நிலம்’ என்றே குறிப்பிடுகிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பெருவளர்ச்சியின் காரணமாக, உலகிலுள்ள பல்வேறு ஆதார அமைப்புகள் சிதைவை எதிர்கொள்வது போன்று ஈரநிலங்களும் பாதிப்புற்று வருகின்றன.
பெரும் பாதிப்பு!
உலகிலுள்ள முக்கியமான சதுப்பு நிலப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பு குறித்து பேசத் தொடங்கினால், உடனே அமேசான் காடுகள் குறித்து யோசிப்போம்.
மாறாக, நாம் தினமும் புழங்கும் இடத்தைச் சுற்றி ஈரநிலங்கள் இருக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
ரயிலில், பேருந்தில் பயணிக்கையில் பல இடங்களில் மழை பெய்து பல நாட்களாகியும் ஈரம் தேங்கியுள்ள இடங்களைப் பார்த்திருப்போம்.
சில ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் கான்கிரீட் தூண்கள் உதவியோடு ஒரு கட்டடம் கம்பீரமாகக் காட்சியளிப்பதைக் கண்ட அனுபவமும் நமக்கு உண்டு.
1700-ம் ஆண்டு தொட்டே ஈரநிலங்கள் மீதான பாதிப்பு இருந்து வருகிறது. உண்மையைச் சொன்னால், தற்போது காடுகளை விட மூன்று மடங்கு வேகத்தில் ஈரநிலங்களை இழந்து வருகிறது இந்த உலகம்.
1970ஆம் ஆண்டு முதல் இப்போது வரை இந்த உலகிலுள்ள ஈரநிலங்களில் 35 சதவிகிதத்தை இழந்திருக்கிறோம். மனித ஆக்கிரமிப்பே அதற்கான முக்கியக் காரணம்.
சாக்கடையாக அவ்விடத்தை மாற்றுவது, விவசாயம் மற்றும் கட்டடப் பணிகளுக்காக அவற்றை கல்லும் மண்ணும் கொண்டு நிறைப்பது, பருவநிலை மாற்றங்கள், ஆக்கிரமிப்பு செய்யும் இதர உயிரினங்களால் இந்த நிலை ஏற்படுகிறது.

பூமிப்பந்தில் ஈரநிலங்களின் பரப்பு என்பது 6 சதவிகிதம் என்றபோதும், அவற்றில் 40 சதவிகிதத்திற்கும் மேலான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன என்பதை அறியும்போது நம்மால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.
அத்தகைய நிலங்களின் பரப்பு குறைவதால், அந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் அருகி வருகின்றன.
என்ன செய்யலாம்!
அழிவொன்று நிகழும்போது, முடிந்தவரை அதனைத் தள்ளிப்போடுவதும், மெல்ல அதனைத் தடுத்து நிறுத்துவதும் தான் எளிய வழிகளாக இருந்து வருகின்றன.
அப்படிப் பார்த்தால் நமது சூழலமைப்பையும் பல்லுயிர் பெருக்கத்தையும் நன்னீர் கிடைப்பதையும் பருவநிலையைப் பாதிப்புறாமல் காப்பதையும் செயல்படுத்த ஈரநிலங்களைக் காப்பது மிக முக்கியம்.
அதனைக் கருத்தில் கொண்டே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று ‘உலக ஈரநிலங்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று ஐநா பொதுச்சபையில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதற்கும் முன்னர், 1971-ல் ஈரானில் உள்ள ராம்சார் எனுமிடத்தில் ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது; பின்னர், அதன் தலைமையகத்தின் சார்பில் 1997-ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஈரநிலங்கள் அழிவைத் தடுத்து, அவற்றைக் காப்பதுதான் இதன் நோக்கம் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
தற்போது இந்தியாவிலுள்ள ராம்சார் இடங்களின் எண்ணிக்கை 75-ல் இருந்து 80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், லாங்க்வுட் சோழா வனம் ஆகியன அந்த ஐந்தில் அடங்கும்.
2024-ம் ஆண்டுக்கான உலக ஈரநிலங்கள் தின கருப்பொருளாக ‘ஈரநிலங்கள் மற்றும் மனித நல்வாழ்வு’ என்பது கைக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால், கண்ணில்படும் ஈரநிலங்கள் அனைத்தையும் காப்பதும், அதற்கான முயற்சிகளை வெளிப்படுத்துவதும் மிக முக்கியம். மக்களும் அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, அதனைக் காக்க முன்வர வேண்டும்.
– உதய் பாடகலிங்கம்
#மரங்கள் #ஈரநிலங்கள் #புதர்கள் #புற்கள் #தாவரங்கள் #விலங்குகள் #பறவைகள் #மீன்கள் #பாலூட்டிகள் #பல்லுயிர்_பெருக்கம் #சதுப்பு_நிலம் #அமேசான்_காடுகள் #விவசாயம் #பருவநிலை_மாற்றங்கள் #கரைவெட்டி_பறவைகள்_சரணாலயம் #லாங்க்வுட்-சோழா_வனம் #ஈரநிலங்கள்_மற்றும்_மனித_நல்வாழ்வு #tree #plants #animals #fish #wetlands #Ramsar #save wetlands