– தாய் தலையங்கம்
அண்மையில் நடந்த சில வாரங்களாக தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 12 மணி நேர வேலைத்திட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்திருக்கிறது (சமாளிக்கப்பட்டிருக்கிறது).
தமிழ அரசு தற்போது அந்தத் திட்டத்தை வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலில் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பதற்கான ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே மசோதா வாபஸ் பெறப்பட்டு இருப்பது ஒரு சாரார் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது.
அதே சமயம் ஒரு குறிப்பிட்ட தொழிலாளர்கள் நலன் சார்ந்த ஒரு மசோதாவை கூடுமான விவாதங்கள் இன்றி தமிழக அரசு நிறைவேற்ற முற்பட்டதும்,
தற்போது சர்ச்சை எழுந்தப்பின் அதை வாபஸ் பெற்றதும் ஏன் என்கின்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கின்றன.
முக்கியமாக தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்களிடம் எழுந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இருப்பவர்களிடமிருந்தும் எதிர் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
உண்மையில் இந்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்ற முற்பட்டதுக்கு யார் காரணம்? எந்த ஒரு தூண்டுதலின் பெயரில் யாருடைய நலனுக்காக இந்த மசோதாவை நிறைவேற்றுதற்கான முயற்சி நடந்தது?
இதனால் அதிகப்பட்சமாக பாதிக்கபடக்கூடியவர்கள் தொழிலாளர்கள்தான் என்பதை மீறி இந்த மசோதாவை நிறைவேற்றதற்கான முன் முயற்சிகள் எப்படி நடந்தன? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது அதே மசோதா வாபஸ் பெறப்பட்ட நிலையிலும் நீடிக்கின்றன.
திராவிட இயக்கங்கள் துளிர்விட்ட காலங்களில் நடத்தப்பட்ட நாடங்களில் அந்த மேடைக்கான படுதாவில், ‘திராவிட பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்கின்ற முழக்கம் முன்வைக்கப்பட்டிருக்கும்.

பொதுவுடைமைக் கட்சியினர் 8 மணி நேரத்தை வலியுறுத்திய ஒரு முழக்கத்தை முன்வைத்து மே தினக் கொண்டாதத்தை நடத்தினாலும்கூட திராவிட இயக்கங்களும் இதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றன.
திராவிட இயக்கம் சார்ந்த தொழிற்சங்கங்களும் இதை வலியுறுத்தி வந்திருக்கின்றன.
திராவிட இயக்கங்கள் வலுவாக தமிழகத்திற்கு கால் பதிப்பதற்கு திராவிட, திமுக சார்ந்த தொழிற்சங்களும் ஒரு முக்கியமான காரணம்.
முக்கியமாக ஈரோடு, கோயம்பத்தூர் போன்ற பெரு நகரங்களில் திமுக தொழிற்சங்கங்களுக்கு செல்வாக்கு அதிகம்.
1960கள் துவங்கி 80கள் வரைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த மனநிலை, கார்ப்பரேட் கம்பெனிகள் வருகைக்கு பிறகு சற்று மாற ஆரம்பித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்குக்கு முதலிடம் தரப்பட்டது.

இந்தப் போக்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் சரி, பாஜக ஆட்சியில் இருந்தபோதும் சரி, தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் இதே மனநிலை தான் வெளிப்பட்டிருக்கிறது.
நிறுவன நலன்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் கருவிகளாக மத்திய, மாநில அரசுகள் மாறி வருகின்றன என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதைத்தான் திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது. தற்போது பல்வேறு விதமான சலசலப்பு எழுந்த பின் தன்னுடைய அணுகுமுறையை மாற்றி அந்த மசோதாவை வாபஸ் வாங்கி இருக்கிறது.
உலகமயம் என்பதன் தற்போதைய அசலான அர்த்தம் கார்ப்பரேட்மயம் தான். தொழிலாளர்கள் நலன்களும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் இதன் பின்னணியில் பின்னொதுக்கப்படுவது ஒரு நாட்டில் மட்டும் நிகழ்வதல்ல, கிட்டத்தட்ட சர்வதேச விதியாக இருக்கும் நிலையில் தான் 12 மணிநேர வேலைக்கான மசோதாவையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
பொதுவாக நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் தற்போதைய மாறிவரும் உலகலாவிய அரசியல் சூழ்நிலையில் முழுக்கப் பெரு நிறுவனங்களின் வணிக நோக்கங்கள் முன்நிறுத்தப்படும் நிலையில்,

அது தொடர்பான ஒரு மசோதா ஏன் நிறைவேற்றப்படுகிறது என்பதற்கான மூலத்தையும் பார்க்கவேண்டிய அவசியமாகிறது.
இது தொழிலாளர்களு மட்டுமல்ல ஆட்சி செய்யும் அரசுக்கும் அதை நிறைவேற்ற முயலும் அதிகாரிகளுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.
மக்கள் நலனே மகேசன் நலன் என்று அடிக்கடி முழுங்கும் கட்சிகள் இதை பரிசீலிப்பது நாட்டுக்கும் நல்லது, தொழிலாளர்களுக்கும் நல்லது, ஆட்சிக்கும் நல்லது.