தொ.ப-வின் நாள் மலர்கள் குறித்தூ பெருமாள் முருகன் விமர்சனம்
தமிழிலக்கியப் பாடத் திட்டத்தில் ‘இக்கால இலக்கியம்’ என்றொரு தாள் உண்டு. இளங்கலையிலும் முதுகலையிலும் முதற்பருவத்தில் இத்தாளை வைத்திருப்பார்கள். நிர்பந்தம் ஏற்பட்டால் தவிர இப்பாடத்தை நான் எடுக்க மாட்டேன்.
நவீன இலக்கிய எழுத்தாளனாக இருக்கிறீர்கள், நீங்கள்தானே இப்பாடத்தை நடத்த வேண்டும் எனச் சக பேராசிரியர்கள் கேட்பதுண்டு.
‘நான் எழுதுபவன். நீங்கள் படிப்பவர்கள். இப்படியாவது நவீன இலக்கியத்தை வாசியுங்கள்’ என்று சிரித்தபடி சொல்லிக் கடந்துவிடுவேன்.
உண்மையில் அப்பாடத்தை எடுத்து நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. கற்பிப்பதற்கு வாகில்லாத பகுதிகளும் நூல்களுமே அதன் அலகுகளில் இடம்பெற்றிருக்கும். நவீன இலக்கியத்தைப் போலிசெய்யும் நூல்கள் அவை.
பாடத்திட்டத்தில் வைத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காகத் தமிழாசிரியர்களே சில நூல்களை எழுதியிருப்பர். அவற்றைத் தம் செல்வாக்கால் எப்படியாவது உள்ளே நுழைத்துவிடுவர்.
கற்பிக்கவும் கற்கவும் ஏற்பில்லாத இத்தகைய நூல்களின் முகத்தில் விழிக்க மனமில்லாமல்தான் அப்பாடத்தைத் துறந்திருக்கிறேன்.
இளங்கலைப் பட்ட வகுப்புப் பயிலும் எல்லாத் துறை மாணவர்களுக்கும் ‘பொதுத்தமிழ்’ உண்டு.
ஏதேனும் ஒன்றோ இரண்டோ வகுப்புகளுக்கு அப்பாடத்தைக் கற்பிக்கச் சென்றுதான் ஆக வேண்டும். நான்கு பருவத்திற்கும் பொதுத்தமிழ் இருக்கும்.
ஒவ்வொரு தாளிலும் ஐந்து அலகு. ஓரலகில் நவீன இலக்கியப் பாடநூல் ஒன்று முழுமையாக வைக்கப்பட்டிருக்கும். கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், நாடகம் எனப் பருவ வரிசைக்கிரமம் இருக்கும்.
பொதுத்தமிழ்ப் பாடத்திட்டத்தில் ஒரு நூலை நுழைக்கக் கடும்போட்டி நிலவும். இளங்கலை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் உரிய பாடத்திட்டம் என்பதால் அதில் இடம்பெற்றால் பெரிய எண்ணிக்கையில் விற்பனை இருக்கும்.
பாடத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு மாறாது. விற்பனை ஜோராக இருக்கும். ஆகவே இதில் பலவகை ஊழல்கள் நடக்கும்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலருக்கு அவர்கள் பெறும் ஊதியம் போதுவதில்லை. ஆகவே கூடுதல் வருமானம் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட மாட்டார்கள். அவற்றில் ஒன்று பாடத்திட்டத்திற்கு நூல்கள் எழுதுவது.
பாடத்திட்டத்திற்கெனக் கட்டுரைத் தொகுப்புகளையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்ட பேராசிரியர்கள் பலருண்டு. தம் செல்வாக்கையும் தொடர்புகளையும் பயன்படுத்தி வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலும் பாடத்தில் வைக்கும் நுட்பம் பிடிபட்டவர்கள் அவர்கள்.

அந்நூல்கள் வகுப்பறையோடு முடிந்துவிடும். பின்னர் பழைய புத்தகக் கடைகளில் மட்டும் கிடைக்கும்.
ஆனால், அவை பல லட்சம் வருமானம் கொடுத்த பொக்கிஷங்கள் என்பது வெளியுலகில் யாருக்கும் தெரியாது. காலாவதியான எழுத்தாளர்கள் எழுதிய பொருத்தமற்ற நூல்களும் பாடத்திட்டத்திற்குள் நுழையும்.
அது பதிப்பகத்தார் செய்யும் திருவினை. சில பதிப்பகத்தார் இந்தப் பாடத்திட்ட வாய்ப்பைப் பல்லாண்டுகளாகத் தம் கையில் வைத்திருக்கின்றனர்.
பாடத்திட்டக் குழுவில் இருப்போரை உரியவகையில் கவனித்தல் அவர்களுக்குக் கைவந்த கலை. கல்லூரிகளின் தமிழ்த்துறைகளுக்கு எல்லா வகைச் சலுகைகளையும் தந்து அவர்களோடு நல்லுறவைப் பேணும் சந்தைத் தந்திரம் கற்றவர்கள்.
பாடநூல் புத்தகச் சந்தைக் கருமாந்திரம் எப்படியோ போகட்டும். கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் ஏற்ற நூலாக இருந்துவிட்டால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினையில்லை. அப்படி அமைவது அரிதினும் அரிது.
2001ஆம் ஆண்டு எங்கள் பல்கலைக்கழகத்தில் அப்படியோர் அரிய காரியம் நடந்தது. தொ. பரமசிவன் எழுதிய ‘நாள் மலர்கள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு பாடநூலாக வைக்கப்பட்டது.
பொதுத்தமிழ்க் கற்பித்தலின் நோக்கத்தை உணர்ந்து எழுதப்பட்ட நூல் அது. அந்நூல் பாடத்தில் இருந்த மூன்று ஆண்டுகளும் எனக்குக் கொண்டாட்டமாக இருந்தது. கற்பித்தலை மகிழ்ச்சியாக மேற்கொள்ள முடிந்தது.
மாணவர்கள் முகத்தில் உற்சாகத்தையும் அறிவார்ந்த பெருமிதத்தையும் காண முடிந்தது. தமிழிலக்கியம் அல்லாத பிறவற்றை முதன்மைப் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்குப் பொதுத்தமிழ் வகுப்பு இளைப்பாறல் தரும்.
இருக்கையில் இறுக்கத்துடன் அமர்ந்திருக்க வேண்டியதில்லை. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையலாம்; சிரிக்கலாம்; கொஞ்சம் பேசலாம். இந்தச் சுதந்திர உணர்வை எல்லைக்குள் வைத்தபடி பாடத்தை நடத்த வேண்டும்.

சற்றே இடம் கொடுத்தால் தமிழாசிரியரைக் கேலிக்குரியவர் ஆக்கிவிடுவார்கள். ஆசிரியர் மீதான மதிப்பு எப்படியிருக்கிறதோ அதற்கேற்பவே பாடத்தின் மீதும் மதிப்பிருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களை ஒரே வகுப்பறையில் ஒருங்கிணைத்துப் பெருங்கூட்டத்திற்குப் பொதுத்தமிழ் நடத்தும் நிர்பந்தமும் உண்டு.
இந்த நடைமுறைப் பிரச்சினைகளையும் கருத்தில்கொண்டு பாட நூல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அப்படியானால் சுவையான கற்பித்தலுக்கு ஏற்றமாதிரி நூல் தேவை. அது அறிவூட்டுவதாகவும் பார்வையை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தொ.ப. எழுதிய நூல் ‘நாள் மலர்கள்.’
‘17 வயதிற்கு மேற்பட்ட மாணவன் பல துறையியல் சார்ந்த அறிவுத்திறத்தை அமைத்துக் கொள்வதில் தமிழ்ப்பாடநூல்களும் எழுத்தாளர்களும் போதிய அக்கறை செலுத்தியதாகச் சொல்ல முடியாது.
இலக்கியங்கள் உணர்த்தும் பல்வகை விழுமியங்களோடு நிகழ் சமூகத் தேவை பற்றிய சிந்தனைகளும் நம்முடைய இளைஞர்களுக்குத் தேவை.
இத்தகைய எண்ணங்களை அவர்கள் நெஞ்சில் ஊன்றும் வகையில் இக்கட்டுரை நூல் ஒரு சிறு முன்முயற்சியாகும்’ என்று இந்நூலின் முன்னுரையில் தொ.ப. குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தமிழுக்கான பாட நூல் எத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் தெளிவுடன் எழுதப்பட்டது இது.

‘நாள் மலர்கள்’ என்னும் தலைப்பில் பாரதிதாசன் நூல் (1978, பூம்புகார் பிரசுரம்) ஒன்றுண்டு. அவரது இறப்புக்குப் பிறகு தொகுக்கப்பட்ட நூல் இது.
‘அன்றன்று கிடைத்த செய்திகளைச் சுற்றியோ தம் கருத்தைக் கவர்ந்த நிகழ்ச்சிகளை நினைவுறுத்தியோ பாவேந்தர் புனைந்த பாடல்கள், அவர் நெஞ்சத் தோட்டத்திலே பூத்த ‘நாள் மலர்கள்’ ஆகும்’ என அந்நூலுக்கான பெயர்க்காரணத்தை அவரது மகன் மன்னர் மன்னன் குறிப்பிட்டுள்ளார்.
அன்றன்று பூத்த மலர்களே ‘நாள் மலர்கள்.’ அவை மலர்ச்சியின் பொலிவு கொண்டவை. நறுமணப் பரவல் தரும் தேன்மது நிறைந்தவை. கண்டதும் மகிழ்வூட்டுபவை. பாவேந்தரின் நூலுக்கு அமைந்த அத்தலைப்பைப் பாடநூல் ஒன்றுக்குச் சூட்டியது மிகவும் பொருத்தம்.
இத்தொகுப்பில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாள் மலர்தான். மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வாகாக ஒவ்வொரு கட்டுரையிலும் பல்வேறு தகவல்கள் உள்ளன.
அத்துடன் கூடுதல் தகவல்களைச் சொல்வதற்கான இடைவெளிகள் உள்ளன. ஒவ்வொன்றும் புத்தம்புதிது. நேற்றுச் சொன்னதைப்போல இன்றைக்குச் சொல்ல வேண்டியதில்லை. கல்வெட்டுகள் தொடர்பாக ஒருநாள் பேசினால் அடுத்த நாள் கம்பனைப் பற்றிப் பேசலாம்.
முதல்நாள் இதழியல் குறித்துக் கண்டால் மறுநாள் மதுரை மாநகர் வரலாற்றைக் காணலாம். இலக்கியத்தையும் சிற்பத்தையும் இணைக்கும் கட்டுரை இலக்கிய உணர்வை மட்டுமல்ல, சிற்பத்தைக் காணும் விதத்தையும் பயிற்றுவிக்கிறது.
தமிழ் இலக்கியப் பெரும்பரப்பைச் சில கட்டுரைகள் தழுவிச் செல்கின்றன. அரசியல், மொழிபெயர்ப்பு, அறிவியல் தமிழ், இதழியல், அகராதி, சிற்பம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் கட்டுரைகள் அறிமுகப்படுத்துகின்றன.
நூல் முழுவதுமாக ஊடாடும் பார்வை தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு செல்வங்களை அறிந்து துய்த்தல் என்பது. தமிழ்ப் பெருமை பேசுவதாகவோ வெறும் தகவல் அடுக்காகவோ எந்தக் கட்டுரையும் இல்லை.
ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்களும் பார்வையும் இயைந்திருக்கின்றன. மதுரை மாநகரம் பற்றிய கட்டுரை வரலாற்றில் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாக அது தொடர்ந்து விளங்கிவருகிறது என்னும் பார்வையை முன்வைக்கிறது.
தமிழக வரலாற்றில் இடையறாது தொடர்ந்து பதிவுபெற்றுள்ள நகரங்கள் மதுரையும் காஞ்சிபுரமும்தான் என்னும் முக்கியமான தகவலைக் கட்டுரை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறது.
இந்த ஒரேஒரு தகவலைக் கொண்டு மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், தமிழ்விடுதூது, மதுரைக் கலம்பகம் எனப் பல நூல்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இயலும்.
இந்த நூலைக் கற்பித்த காலமான 2001–2002ஆம் கல்வியாண்டின் முதல் மூன்றாண்டுகள் என் நினைவில் நன்கு பதிந்திருக்கின்றன. பொதுத்தமிழ்ப் பாடத்திற்கு மொத்தம் தொண்ணூறு வகுப்புகள்.

ஆசிரியர் பற்றாக்குறையால் வாரத்திற்கு இரண்டு மணிநேரம் குறைந்துவிடும்.
முதலாண்டு மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து வகுப்புக்கு வருவதற்குள் ஒருமாதம் கடந்துவிடும். அதற்கான மணிநேரங்களும் போய்விடும்.
ஆசிரியர் எடுக்கும் விடுப்பு எல்லாம் கணக்கிட்டால் இப்பாடத்தை நடத்த அதிகபட்சம் ஐம்பது மணிநேரம் கிடைத்தால் பெரிது.
ஒவ்வொரு அலகுக்கும் பத்து மணிநேரம் எனக் கொள்ளலாம். ‘நாள் மலர்கள்’ நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் இரண்டு மணிநேரம் வேண்டும் என்பது என் கணக்கு.
அதற்கு வாய்க்கவில்லை. ஆகவே சில கட்டுரைகளுக்கு மட்டும் இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ஒவ்வொரு மணிநேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் திட்டமிட்டுக் கொண்டேன். இந்நூலைக் கற்பிக்க ஏறத்தாழப் பதினைந்து மணிநேரம் எடுத்திருப்பேன்.
‘கல்லெழுத்துகள்’ முதல் கட்டுரை. இது தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளைப் பற்றியது.
கல்வெட்டு அறிமுகம், அவை வரலாற்று ஆவணமாகும் முக்கியத்துவம், தமிழக வரலாற்றுக்கு அவை செய்திருக்கும் பங்களிப்பு ஆகியவற்றை எல்லாம் விரிவாக எடுத்துரைப்பேன்.
அதில் அதியமான் பற்றி வரும் பகுதியை நன்றாக விரிக்கலாம். கட்டுரையைச் சுவையாக எடுத்துச்சொல்ல சில கூறுகளும் அதிலேயே இருக்கின்றன.
கல்வெட்டில் இடம்பெறும் ரசனையான பாடல் ஒன்றைத் தொ.ப. எடுத்துக் காட்டுகிறார்.
அதை விளக்கும்போது கல்வெட்டிலிருந்து விலகி இலக்கியக் கற்பித்தலுக்கு மாறிவிடலாம். கல்வெட்டு பற்றிப் பேசுவது வறட்சியானது என்னும் பொதுப்பார்வையைத் தேர்ந்துகொள்ளும் தகவல்கள், அவற்றைக் கோக்கும் முறை முதலியவற்றால் எளிதாக மாற்றிவிடுகிறார்.
அது கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் ஆர்வமூட்டுவதாகிறது. கட்டுரைகள் காலத்தால் நவீனத்தன்மை கொண்டிருக்கின்றன.
கம்பராமாயணத்தில் பாத்திர அறிமுகம் பற்றிய கட்டுரை, இன்றைய காலத்தில் அறிமுகங்கள் அமையும் விதம் பற்றியும் அவற்றை மேற்கொள்ளல் தொடர்பான விவாதத்தை முன்னெடுப்பதாகவும் இருக்கிறது.
உமர்கய்யாம் கவிதை ஒன்றின் மூன்று தமிழ் மொழிபெயர்ப்புகளை எடுத்து ஒரு கட்டுரையில் ஒப்பிடுகிறார். மொழி, சொல் தேர்வு, கவிதைக் கூறுகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை நவீன காலத்தோடு தொடர்புறுத்தும் கட்டுரை இது.

இவை மாணவர்களோடு உரையாட வழிவைத்திருப்பவை. இந்நூலைப் பாடம் நடத்தும்போது விளக்கிப்பேசுதல், வினாவுதல், உரையாடல், விவாதித்தல் முதலிய கற்பித்தல் கூறுகளை எல்லாம் கையாண்டு வகுப்பை இனிமையாக்க முடிந்தது.
இறுதியில் பத்து நிமிடம் மாணவர்களை வாசிக்கச் செய்வதைக் கட்டாயம் செய்வேன். திருத்தமாக வாசிக்கப் பழகுதல் தேவை. அது மட்டுமல்ல, சுயமாக வாசிக்கும் பழக்கத்தை அது உருவாக்கும்.
இவ்விதம் மூன்றாண்டுகள் பொதுத்தமிழ்ப் பாடம் கற்பித்தலை உற்சாகமானதாக மாற்றிய இந்நூல் என் நினைவிலிருந்து அகலவில்லை. இதைப் பாடநூலுக்கானது என்று மட்டும் சுருக்கத் தேவையில்லை.
பொதுவாசகரும் ஈடுபாட்டுடன் வாசிக்கலாம். எந்தக் கட்டுரையும் ஏமாற்றாது. தொ.ப.வுக்கே உரிய அடையாளங்கள் கட்டுரைகளில் மிளிர்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றைப் பருந்துப் பார்வையில் காட்டும் நூலாகப் பொதுவெளியில் இதைச் சுட்ட விரும்புகிறேன்.
*
நூல் விவரம்:
நாள் மலர்கள்
ஆசிரியர்: தொ. பரமசிவன்
விலையடக்கப் பதிப்பு: ரூ. 75
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/u0ba8u0bb3-u0baeu0bb2u0bb0u0b95u0bb3_1136/
அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0BS3X1FVN/
மின்நூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0BS9LQ8R6/