காவல்துறை எதை, எதைத்தான் தாங்கும்?

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தில் அக்டோபர் 11-ம் தேதி காணாமல் போய் இதுவரை தேடப்பட்டு வரும் 7 வயது சிறுமி குறித்து பேசாத ஊடகங்கள் குறைவு.

காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் சமூக வலைதளங்களும் தினமும் இதே பிரச்சனையை அலசி ஆராய்ந்து காயப்போட்டு வருகின்றன.

அரசும் காவல்துறையும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி முடித்துவிட்டது அதிமுக.

31ம் தேதி திமுக மகளிரணியும் தன் பங்கிற்கு போராட்டத்தை நடத்த இருக்கிறது.

இங்குள்ள அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் முன்வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு காவல்துறை மீது தான் இருக்கிறது.

பலரும் காவல்துறையின் செயல்பாடு குறித்து அவரவர் சார்ந்த அரசியல் பார்வையோடு குற்றஞ்சாட்டுகிறார்கள்.

திமுக எம்.பி.யான கனிமொழி காவல்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் காவல்துறைக்கும் எந்தளவுக்கு பொறுப்பு இருக்கிறது என்று பார்க்கலாம்.

அந்த சிறு கிராமத்தில் அதிகாலை வேளையில் அந்தச் சிறுமி காணாமல் போனதாக யூகிக்கப்பட்டாலும் அன்று காலை நேரத்திற்கு பிறகு தான் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிறகு அடுத்தடுத்து ஊடகங்கள் அங்கு குவிய ஆரம்பித்த பிறகு, ஏறத்தாழ 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள், கிணறுகள், புதர் மண்டிய காட்டுப்பகுதிகள் என்று எல்லாவற்றிலும் காவல்துறையினர் பெரியதொரு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான செல்போன் இணைப்புகளுக்கு வந்த அழைப்புகள் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன.

சந்தேகப்படும்படியான பல்வேறு நபர்கள் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு, காணாமல் போன சிறுமியின் தாயாரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணைகள் நடந்தும் அவர்களுடைய பேச்சில் முரண் வெளிப்பட்டதே ஒழிய எந்தவொரு தடயமும் சிக்கவில்லை.

ஆனால், இதுவரை சிறுமியின் தாயாரை தங்களது வழக்கமான விசாரணைக்கு போலீசார் உட்படுத்தவில்லை. 

அந்தப் பெண்ணும் தொடர்ந்து வெவ்வேறு ஊடகங்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரிகள் வரை பலரை இதற்கென நியமித்தும் இதுவரை க்ளூ கிடைக்காமல் தவித்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறது காவல்துறை.

இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் பல அலைச்சல்களைச் சந்தித்தும் அவர்கள் மீதுதான் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன.

துப்பு கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுத்தும் எந்தப் பலனையும் தரவில்லை.

இதுவரை விசாரணை சரியான இலக்கு பிடிபடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

விரைவில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடலாம். காணாமல் போன சிறுமியின் உண்மையான நிலை தெரியவரலாம்.

காவல்துறை மீது இந்தளவுக்கு குற்றச்சாட்டும் திமுகவும் அதிமுகவும் தங்களது ஆட்சிக் காலத்தில் சில முக்கியமான வழக்குகளை எப்படி எதிர்கொண்டிருக்கின்றன?

உதாரணமாக திமுக அமைச்சரவையில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்த கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு.

2012, மார்ச் 29-ஆம் தேதி திருச்சியில் காலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு, காவல்துறையின் வெவ்வேறு விசாரணை அடுக்குகளுக்கு அந்த வழக்கு சென்று விசாரிக்கப்பட்டாலும் இதுவரை அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா?

அதிமுக, திமுக ஆட்சி என்று ஆட்சி மாறினாலும் விசாரணைக்கு முடிவு வரவில்லையே அது ஏன்? என்ற கேள்வியை இன்றைக்கு கேள்வியெழுப்பும் கட்சிகள் எழுப்புவர்களா?

அதைப்போலவே 2017ம் ஆண்டியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா சம்மந்தப்பட்ட கொடநாடு எஸ்டேட்டிலேயே மர்மமான முறையில் கொள்ளையும் சில கொலைகளும் நடந்தாலும் அதில் சிலர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டாலும்

இதுவரை ஆட்சி மாறியும் கூட அதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து முடிந்து உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் அகப்பட்டிருக்கிறார்களா?

முன்னாள் முதல்வரின் வீட்டிலேயே நடைபெற்ற இத்தகைய முக்கியமான வழக்கு ஏன் உரிய முறையிலும் உரிய காலத்திலும் விசாரிக்கப்படவில்லை என்கிற கேள்வி இன்றைக்கு போராட்டம் நடத்துகிற எந்தக் கட்சியாவது கேட்டிருக்கிறதா?

இவை தவிர இதுவரை தமிழகத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் எவ்வளவோ இருக்கின்றன.

ஒரு வழக்கு விரைவில் நடந்து விரைவில் விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், தமிழக காவல்துறையைப் பாராட்டுகிறவர்கள் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் என்று வருகிறபோது காவல்துறையைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்படி காவல்துறை மீது பொதுவெளியில் குற்றச்சாட்டு எழும்போது காவல் துறையினரால் பதிலுக்குப் பதிலாக பேச முடியாத நிலையே தற்போது நீடித்து வருகிறது.

எவ்வளவுதான் தாங்கள் ஆட்டுவிக்கப்பட்டாலும் மன உளைச்சலுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டாலும் பல்வேறு அலைச்சல்களில் அலைகழிக்கப்பட்டாலும் காவல் துறையினரால் மனப்புழுக்கத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாத நிலைதான் தற்போதும் இருக்கிறது.

இந்த சமயத்தில் சமூகவலைதளங்களில் காவல்துறையினருக்கு சங்கம் அமைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என்கிற குரல்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

அப்படி ஒரு சங்கம் அமைந்தால் சங்கத்தின் மூலம் தங்களது எதிர்வினையை பொதுவெளியில் சொல்ல முடியும்.

ஆனால், காவலர்களை தங்களது ஏவலுக்குப் பயன்படுத்துகிற எந்தவொரு அரசும் அவர்களது ஜனநாயக ரீதியான உரிமையைக் கொடுப்பதில்லை. சங்கம் அமைப்பதற்கான உரிமையைக் கூட அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில், ஒன்றை முக்கியமாகச் சொல்லவேண்டும். இந்தியாவிலேயே காவல்துறைக்கென சங்கம் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான்.

அதற்குப் பிறகு அப்படி சங்கம் உருவாவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. 1953-ல் காவல்துறையினர் தங்களது உரிமைகளுக்காக ஒன்றுகூடி போராட்டத்தையே முன்னெடுத்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து 1979-ல் காவல்துறையினருக்கான குறைந்தபட்ச உரிமைகளுக்காக குரலெழுப்புவதும் நிகழ்ந்தாலும் இதுவரை அவர்கள் சங்கமாக ஒன்றுதிரள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், அவர்களும் தபால் மூலம் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்றுவரை அதேநிலைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது.

எதிர்வினை ஆற்ற வாய்ப்பு அளிக்கப்படாத அவர்களை நோக்கித் தான் பல்வேறு கட்சியினரின் விரல்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன.

– லியோ

You might also like