அன்பில் மகேஷ் கைது எழுப்பும் சில கேள்விகள்!

பலரும் எதிர்பார்த்தபடியே கைது செய்யப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் கல்வி நிறுவனங்களில் அவர் முறைகேடாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை யாரிடம், எப்போது கொடுத்தோம் என்பது வரை பல விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைக்காத குறையாகச் சொல்லி தீர்த்துவிட்டார்கள் தனியார் பள்ளிகளுக்கான சங்க நிர்வாகிகள்.

தற்போது ஊடகங்களில் சொல்லப்படும் தொகையைவிட கூடுதலாகவே இருந்தது அந்த சங்க நிர்வாகிகள் கொடுத்ததாகச் சொன்ன தொகை.

அவற்றிற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்கள்.

இப்படி வெளிப்படையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில், எப்போது அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள்.

வழக்கமாக ஆளுநர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திராவிட மரபில் வந்தவரான அன்பில் மகேஷ் அவரே பிடிபடும் நிலையில், ஆளுநரின் அனுமதி கிடைத்துவிட்டதா? என்று கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதற்குள் அவரது தரப்பில் நீதிமன்றத்தில் முன் ஜாமின்பெற முயற்சித்தபோது, அன்பில் மகேஷின் வழக்கில் பல அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதால், முன் ஜாமின் தர முடியாது என்று மறுத்த நிலையில்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார் அன்பில் மகேஷ்.

கைது செய்யப்பட்டதும் காவல்துறையின் வழக்கமான விசாரணை முடிந்து செல்லும்போது, அவர் சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம் என்று அறிவித்திருக்கிறார்.

திமுக தலைவரான மு.க.ஸ்டாலினும் இந்த கைதை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினோ கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளிப்படையாக எந்த வழக்கையும் எதிர்கொள்வோம் என்று அறிவித்திருந்தார்.

தற்போது அவர்கள் சொன்னபடியே தவெக அரசு நடவடிக்கை எடுத்ததும் ஊழல் செய்ததற்கான ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டபோது, ஏன் அதை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக விமர்சனம் செய்கிறது?

திமுக சார்பாக ஊடகங்களில் பேசும் சிலர் நீதிமன்றம் முன்ஜாமின் தர மறுத்ததை ஏன் விமர்சிக்கிறார்கள்?

முன்பு பெங்களுர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தண்டனை விதித்தபோது நீதிவென்றதாக உச்சிமுகர்ந்த திமுக இப்போது மட்டும் ஏன் குரலை மாற்றிப் பேசுகிறது?

 அடுத்து தவெக பக்கம் வருவோம்.

தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தனக்கு முன்னால் மூன்று ஃபைல்கள் இருப்பதாகச் சொல்லிவந்த முதல்வர் விஜய், அந்த ஃபைல்களின் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

அன்பில் மகேஷ் மாதிரியே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

வழக்கமாகச் சொல்லப்படும் ஆளுநர் அனுமதி என்று சொல்லப்படுகிற தடைக் கற்களைத் தாண்டி திமுகவினர் மீது மட்டுமல்ல, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது விஜய் எப்போது நடவடிக்கை எடுப்பார்?

அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் கட்சிப் பாகுபாடுகளை மீறி நடவடிக்கை எடுக்கிறார் என்பது உறுதிப்படும்.

அப்படி உறுதிப்படுத்துகிற வேலையைத் தொடர்ந்து செய்வாரா முதல்வர் விஜய்?

திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் தயங்கவில்லை.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நள்ளிரவிலும் கலைஞரை கைது செய்ய அதிமுக தயங்கவில்லை.

அந்த விதத்தில், முதல்வர் விஜய்க்கு திமுகவும் அதிமுகவும் முன்னோடிகளாக இருக்கிறபோது, ஊழல் கறைபடிந்தவர்களின் மீது பாராபட்சமற்ற நடவடிக்கையை விஜய் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பரந்துபட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா முதல்வர் விஜய்?.

  • நாகன்
You might also like