எம்.ஜி.ஆருடன் இறுதிநாட்களில் பயணித்த ஹண்டே!

நூற்றாண்டு காணும் தலைவர் குறித்த சுவாரஸ்ய குறிப்புகள்

செஞ்சட்டைப் போராளிகளான நல்லகண்ணுவும், சங்கரய்யாவும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழ்ந்த தமிழக அரசியல் தலைவர்கள்.

அந்த ஆளுமைகள் பட்டியலில் தன்னையும் பதிவு செய்துகொள்ள காத்திருக்கிறார் டாக்டர் ஹண்டே.

ஆம். அவருக்கு அடுத்த மாதம் 17 ஆம் தேதி நூறு வயது. இப்போதும் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனது மருத்துவமனையில் சுறுசுறுப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதி, டாக்டர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை வாய்ந்த ஹண்டே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின், இறுதி நாட்களில் அவருடன் பயணித்தவர்.

மூதாதையர்கள் மங்களூர் என்றாலும் தமிழகம்தான் ஹண்டேயை சீராட்டி, பாராட்டி வளர்த்தது. கோவையில் 1927-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி பிறந்தார்.

மருத்துவக் கல்வி படிக்கும் காலகட்டத்திலேயே ஹண்டேக்கு அரசியல் ஆர்வம் உண்டு. ஆனாலும், நேரடியாக அவர் அரசியலில் குதித்தது – 1964-ம் ஆண்டில்தான்.

அப்போது எம்.எல்.சி. எனப்படும் சட்டமன்ற மேலவைத் தேர்தலில் சென்னை பட்டதாரிகள் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார். அப்போது அவர் டாக்டர். அந்தத் தொகுதியில் ஹண்டே 1990 வாக்குகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார்.

அவர் தோற்கடித்தது, சாமான்ய ஆட்களை அல்ல. பெரும் ஆளுமைகள் நிறுத்திய வேட்பாளர்களை அந்தத் தேர்தலில் சுதந்திரா கட்சியின் தலைவரான மூதறிஞர் ராஜாஜி, சேஷாத்திரி என்பவரை களத்தில் இறக்கி இருந்தார். அவர் வாங்கிய ஓட்டுகள் -500.

திமுகவின் பிதாமகன் பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் தம்பி அறிவழகனை, தனது முகமாக நிறுத்தினார். அவருக்கு 400 வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் ஆதரவோடு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருப்பதிராச்சாரி போட்டியிட்டார், பெற்ற வாக்குகள் 45 மட்டுமே. ஹண்டேக்கு அவரே எதிர்பார்க்காத வெற்றி.

ராஜாஜியின் அழைப்பின் பேரில் அவரது சுதந்திரா கட்சியில் சேர்ந்தார். பூங்காநகர் சட்டமன்றத் தொகுதியில் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் சுதந்திரா கட்சி வேட்பாளராக நின்று வாகை சூடினார், ஹண்டே.

காலச்சக்கரம் அவரை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைத்து வைத்தது. பல முக்கிய தருணங்களில், எம்.ஜி.ஆர். ஆலோசனை கேட்கும் நிலைக்கு உயர்ந்தார், ஹண்டே.

1977. எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்து தனி ஆளாக தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட ஆண்டு.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நடிகர் ஐசரி வேலனை களம் இறக்கி இருந்தார் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் அந்தத் தொகுதி அதிமுகவுக்கு சாதகமாக இல்லை.

ஹண்டேயேயையும், ஜேப்பியாரையும் அழைத்து, ஆர்.கே.நகரில் இருந்து நீங்க இருவரும் வெற்றிச் செய்தியைக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார்.

இருவரும் ஆர்.கே. நகரை வலம் வந்தனர். தெருத்தெருவாக சுற்றினர். அந்த தேர்தலில் ஐசரி வேலன் வெற்றியை எம்.ஜி.ஆரிடம் சமர்ப்பணம் செய்தார் ஹண்டே.

கலைஞரை எதிர்த்து களம் கண்ட ஹண்டே :

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து அண்ணாநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கினார், ஹண்டே. அவர் வெற்றியின் முனையில் இருந்தார்.

ஆனால், இறுதிச் சுற்றில் 699 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை ஹண்டே ஏற்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததைச் சுட்டிக்காட்டி, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரினார்.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர். ஹண்டேயிடம், ‘கருணாநிதி ஜெயித்ததாகவே இருக்கட்டும் – இந்த விவகாரத்தில் நீங்கள் வேறு எந்த முயற்சியையும் எடுக்க வேண்டாம்’ என கேட்டுக்கொண்டார். அதனை ஹண்டேயும் ஏற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இரு முறை சுகாதார அமைச்சராக இருந்தவர், ஹண்டே.

அப்பல்லோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றபோது, அவருடனேயே இருந்தவர் ஹண்டே. எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்த செய்திகளை தினமும் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றபோதும் அவருடன் இருந்தவர் ஹண்டே.

  • பாப்பாங்குளம் பாரதி.

#நல்லகண்ணு #Nallakannu #சங்கரய்யா #Sankaraiah #டாக்டர்ஹண்டே #DrHVHande #புரட்சித்தலைவர் #PuratchiThalaivar #எம்ஜிஆர் #MGR #ஹெச்விஹண்டே #HVHande #ஹண்டே #Hande #பேரறிஞர்அண்ணா #PerarignarAnna #அன்பழகன் #Anbazhagan #அறிவழகன் #Arivazhagan #அதிமுக #ADMK #ஐசரிவேலன் #IshariVelan #காங்கிரஸ் #Congress #பெருந்தலைவர்காமராஜர் #PerunthalaivarKamarajar #ஜேப்பியார் #Jeppiaar #திமுக #DMK #கலைஞர்கருணாநிதி #KalaignarKarunanidhi

You might also like