மனதை விசாலமாக்கும் பயணங்கள்!

சமீபத்தில் ஒடிசாவுக்குச் சென்றுவந்த பயண அனுபவத்தை சுருக்கமாக பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் கார்குழலி.

அந்த சுவாரசியமான பயணம் இதோ…

இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மும்பையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்குப் போனதைத் தவிர வட மாநிலங்களுக்கு இதுவரை பயணம் செய்ததில்லை.

கொனார்க் கோவிலைப் பார்க்கும் உந்துதலில் ஒடிஷாவுக்குப் போக முடிவுசெய்தேன்.

பத்துப் பதினைந்து உதிரிச் சொற்களுக்கு மேல் இந்தி தெரியாது. அதிலும் தக்க நேரத்தில் சரியான வார்த்தை மறந்து போகும்.

சேர்ந்தாற்போல நாலு வார்த்தை கோர்வையாகப் பேசினால் எதிரில் இருப்பவர் மண்டையைச் சொறிவார், மரியாதைக்காக ‘ஹான்ஹ் ஹான்ஹ்’ என்பார்.

விளக்கிச் சொல்ல அதற்கு மேல் நமக்கும் இந்தி தெரியாது.

அபிநயம் பிடித்து ஜாடை காட்டி ஆங்கிலம் கலந்து என்று எப்படியோ சமாளித்து விட்டேன்.

இதற்கே ‘உனக்கு இந்தியெல்லாம் தெரியுமா’ என்று குடும்பத்தினரின் கிண்டல் வேறு.

அவர்கள் யாருக்கும் ஒரு வார்த்தைகூட தெரியாது என்பது தனிக்கதை.

மக்களை அவர்களின் வாழ்விடங்களில் சந்திக்கும்போது அவர்களின் மென்மையான பக்கத்தையும் உள்ளுறையும் மனிதத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இவர்களையா நம்மூரில் எள்ளலும் இளக்காரமும் கொண்ட பெயர்களைச் சொல்லி அழைக்கிறோம் என்று வருத்தம்கொள்ள வைத்தது.

நான்கு நாட்களில் எத்தனையோ சிறிதும் பெரிதுமான அனுபவங்கள்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். பயணங்கள் நம் மனதையும் பார்வையையும் விசாலமாக்குகின்றன, புதிய திறப்புகளைச் செய்கின்றன.

முன்முடிவுகளையும் மதிப்பீடுகளையும் களைந்து நமக்குள் படிந்துபோன பழைய கோட்பாடுகளையும் காலாவதியான கருத்துகளையும் புனரமைத்துக்கொள்ள உதவுகின்றன.

You might also like