கடந்த அக்டோபர் 2 ம் தேதி மாலை முதல் நல்லிரவைக் கடந்த நேரம் வரை, புரிசை மண்ணில் கழிந்த ஒவ்வொரு கணமும் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற அனுபவமாக மட்டும் அமையவில்லை.
தமிழரின் கலை மரபோடு நேருக்கு நேர் நிகழ்ந்த ஓர் உளப்பயணமாக விரிந்தது.
கலைமாமணி புரிசை கண்ணப்பத் தம்பிரான் நினைவு நாடக விழா, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2ஆம் நாள் புரிசை கிராமத்தில் பாரம்பரியத் தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைகளோடு நடைபெறுவது வழக்கம்.
நானும் சில ஆண்டுகளாக இம்மண்ணில் அரங்கேறும் நாடகங்களையும், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்த்துக் கலைகளையும் நண்பர்களுடன் கண்டு வந்திருக்கிறேன்.
அவ்வகையில் புரிசை எனக்குப் புதிதான கலைநிலம் அல்ல. ஆனால், நேற்றைய இரவு மனதுக்குள் ஏற்படுத்திய நிறைவு, முந்தைய அனுபவங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.
அந்த மகிழ்ச்சி மேடையில் நிகழ்ந்த கலைகளால் மட்டும் உருவானதல்ல.
கலை நிலத்தில் மீண்டும் சந்தித்த மனிதர்கள், கால இடைவெளிக்குப் பிறகு செய்யாறு, ஆரணி, காஞ்சிபுரம், சென்னை என பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்து புதுப்பித்த நட்பு முகங்களில் தெரிந்த அன்பு, பகிர்ந்து கொண்ட உரையாடல்கள் என அனைத்தும் அந்த இரவின் அனுபவத்தை இன்னும் ஆழமாக்கின.

விழாக்கோலம் :
விழாவின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் வாழ்நாள் சாதனை விருது, பெரியமேளம் கலைஞர் திரு மு.முனுசாமி அவர்களுக்கு வழங்கப்பட்ட தருணம், ஒரு கலைஞரின் நீண்டகால உழைப்பையும் கலை வாழ்வையும் சமூக நினைவில் நிலைநிறுத்தும் பண்பாட்டு நன்றியாக அமைந்தது.
அதன்பின் அரங்கேறிய “How are things…?” என்ற சமகால நடன நிகழ்வு, உடலே ஒரு மொழியாக மாறும் தருணங்களை உருவாக்கியது.
ப்ரீத்தி அத்ரேயாவின் உடல்மொழியில், சொற்கள் இல்லாமலும் கலை எவ்வாறு தன் பொருளை உருவாக்கிக்கொள்கிறது என்பதை உணர முடிந்தது.
பெரியகுளம் அரங்கில் நிகழ்ந்த சேய்யூர் தோல்கட்டை இருளர் கலைக்குழுவின் பழங்குடி இசை, புரிசையின் கலைவெளிக்கு இன்னொரு ஆழத்தைச் சேர்த்தது.
அதன் தொடர்ச்சியாக வந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வேறுவேறு கலை உலகங்களுக்குள் அழைத்துச் சென்றன.
இரவு ஏழு மணியளவில் அரங்கேறிய “நீடு துயில்” தனிநபர் நாடகம், ஒரே உடலும் ஒரே குரலும் எத்தனை பரிமாணங்களில் ஒரு நாடக உலகை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தியது.
அதன்பின் நிகழ்ந்த ஜிக்காட்டம், அதன் தாளமும் உடலசைவும் நாட்டுப்புறக் கலைக்குரிய உயிர்ப்பை வெளிப்படுத்தின.
மராத்தி–ஆங்கில மொழிகளில் அரங்கேறிய “லாவண்யவதி” மொழியைக் கடந்த நிகழ்த்துக் கலையின் சாத்தியத்தைத் திறந்து காட்டியது.
தொடர்ந்து நிகழ்ந்த ”மல்லர் கம்பம்” உடல் வலிமை, சமநிலை, ஒருங்கிணைப்பு, துணிவு ஆகிய அனைத்தையும் ஒரே காட்சிக்குள் திரட்டி பார்வையாளர்களை ஈர்த்தது.
பின்னர் வந்த “முன்னடியோர்” அந்த இரவின் கலைப் பயணத்தில் மேலும் ஒரு புதிய தடத்தைப் பதித்தது.

நேரம் நள்ளிரவை நெருங்கியும் புரிசையின் கலைத்தீ அணையவில்லை.
“பதினெட்டாம் போர்” எனும் தெருக்கூத்து, நள்ளிரவைக் கடந்தும் உயிர்ப்புடன் தொடர்ந்தபோது, தலைமுறைகள் கடந்து வந்த தெருக்கூத்தின் மூச்சு இன்னும் இந்த மண்ணில் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
கண்ணப்பத் தம்பிரானின் நினைவையும், தெருக்கூத்தின் உயிரையும் தாங்கிக்கொண்டு, தமிழரின் பல்வேறு நிகழ்த்துக் கலை வடிவங்களையும் ஒரே விழா வெளியில் சந்திக்கச் செய்த புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றத்தின் பணியை இந்நேரத்தில் மனமாரப் பாராட்டுகிறேன்.
பத்மஸ்ரீ டாக்டர் பி.கே.சம்பந்தன் அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த மரபு தலைமுறைகளைக் கடந்து பயணிப்பது, ஒரு கலை மரபைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பெரிய பணியாகத் தெரிகிறது.
அது ஒரு சமூகத்தின் நினைவையும், அதன் கலை உணர்வையும், அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பாதுகாக்கும் பணியாகும்.
நிகழ்வுகளுக்கிடையில் உணவு பகிர்ந்து, பரிமாறி, உடன் அமர்ந்து உண்ட தோழர்களின் அன்பும் இந்த இரவின் நினைவுகளில் தனியிடம் பெற்றது.
ஒரு நீண்ட கலை இரவில் உணவு என்பது உடலுக்கான தேவையாக மட்டும் இல்லாமல், உறவைப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு மொழியாகவும் மாறுகிறது.

அன்போடு உணவைப் பகிர்ந்தும் பரிமாறியும் கொண்ட அனைத்து தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இத்தனை நேரம் நீண்ட கலை நிகழ்வுகளுக்கிடையே பங்கேற்ற அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளை அக்கறையோடு செய்த விழாக் குழுவினருக்கும் என் உளமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.
உடன் இந்தக் கலைப் பயணத்தில் துணைநின்ற கலைஞர்கள், கலைக்குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பயிற்றுநர்கள்,
பங்கேற்ற குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் அரங்கின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உயிர் கொடுத்த அனைவருக்கும் என் அன்பான நன்றியும் பாராட்டுளும்
அன்றிரவு புரிசையில் இருந்து திரும்பும்போது, நான் பார்த்த நிகழ்ச்சிகளை மட்டும் என்னுடன் எடுத்துவரவில்லை.
சில முகங்கள், சில குரல்கள், சில தாளங்கள், சில அசைவுகள், சில நினைவுகள் என அனைத்தையும் சுமந்துகொண்டே திரும்பினேன். இதுவே ஒரு கலைநிகழ்வின் அனுபவமாக அடையாளம் போல.
– மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.
