வாழ்ந்து பார்க்கத் தெரியவில்லை!

வாசிப்பின் ருசி:

இவன் தோட்டத்தில்
புல்லும் இருக்கிறது
பனியும் இருக்கிறது
ஒன்று சேர்த்து
பனித்துளி செய்யத்
தெரியவில்லை

இவன் வானத்தில்
வெயிலும் இருக்கிறது
மழையும் இருக்கிறது
ஒன்று குழைத்து
வானவில் வரையத்
தெரியவில்லை

இவன் கடலில்
அலையும் இருக்கிறது
கரையும் இருக்கிறது
ஒன்று கலந்து
கடந்துபோகத்
தெரியவில்லை

இவன் எதிரே
இன்பமும் இருக்கிறது
துன்பமும் இருக்கிறது
இரண்டையும் இணைத்து
வாழ்ந்து பார்க்கத்
தெரியவில்லை!

– நா.முத்துக்குமார்

You might also like