‘ரோர்சாக்’ – பேயைத் துரத்தும் நாயகன்!

ஒரு படம் என்ன வகைமை என்று அறிந்துகொள்வதே தனி சுகம். அந்த வகைப்பாட்டுக்குள் உட்படாமல் வெவ்வேறு வகைமைகளின் கலவையாக ஒரு திரைக்கதை நகர்ந்து, அது நம்மை சுவாரஸ்யப்படுத்தினால் இன்னும் ஆனந்தம்.

மம்முட்டி நடித்து தயாரித்துள்ள ‘ரோர்சாக்’ பார்க்கையில், அப்படியொரு உற்சாகம் நம்மை தொற்றிக் கொள்கிறது.

மிகச்சிறியதொரு கதைக்களம், மிகச்சில பாத்திரங்கள் என்றிருந்தாலும், நன்கு தெரிந்த கதை முடிச்சு எந்த இடத்தில் விடுபடப் போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிறவைத்த விதத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.

பேயை துரத்தும் கதை!

தனது மனைவி சோபியாவை காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவிக்கிறார் லூக் ஆண்டனி (மம்முட்டி). மலைப்பாங்கான இடமொன்றில், அவர் நிறுத்தியிருந்த கார் சேதமுற்றிருக்கிறது.

கார் இருந்த இடத்திற்கு அருகிலுள்ள கிராமத்தினர் லூக்கின் தேடுதல் வேட்டைக்கு துணையாக இருக்கின்றனர். நாட்கள் ஆக ஆக, அந்த விஷயத்தை விட்டுவிட்டு அவரவர் விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்குகின்றனர்.

ஆனால், பாலன் (மணி ஷோரனூர்) எனும் முதியவர் மட்டும் லூக்கின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இறந்துபோன தன் மகன் திலீப் கட்டி பாதியில் நின்றுபோன வீட்டை லூக்கிடம் விற்கவும் தயாராகிறார்.

லூக் கொடுத்த பணத்தை எடுத்துச் செல்லும் பாலன் பாதி வழியில் காணாமல் போகிறார்.

சில நாட்கள் கழித்து அவரது சடலம் மட்டுமே கிடைக்கிறது. பணம் கிடைக்கவில்லை.

பாலனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் லூக், அந்த வீட்டில் ஒரு முகமூடி அணிந்த மனிதனைக் காண்கிறார்.

துபாயில் லூக் வசித்தபோது அவரது வீட்டில் கொள்ளையடித்துவிட்டு கர்ப்பிணியாக இருந்த சோபியாவைத் தாக்கியவரும் அதே மனிதன் தான்.

யார் அந்த முகமூடி மனிதன்? துபாயில் வசித்த சோபியா காணாமல் போய்விட்டார் என்று சொல்லி, அவரை கேரளாவில் லூக் தேடுவது ஏன்? முகமூடி மனிதனைத் தேடும் நோக்கில் லூக் என்னவெல்லாம் செய்கிறார்? இதற்கான விடையாக விரிகிறது ‘ரோர்சாக்’கின் இரண்டாம் பாதி.

முகமூடி அணிந்த அந்த மனிதன் ஒரு பேய் என்பதுதான் இந்த கதையிலுள்ள மாபெரும் திருப்பம்.

பேயை லூக் துரத்துகிறார் என்பதனை முதலிலேயே சொல்லிவிடுவதால், இதைவிட பெரிய திருப்பம் என்ன வந்துவிடப் போகிறது என்றே பார்வையாளர்களுக்குத் தோன்றும்.

அதையும் மீறி இக்கதையில் அமானுஷ்யத்தையும் மனோவியலையும் புகுத்திய வகையில் கவனம் ஈர்த்திருக்கிறது கதாசிரியர் சமீர் அப்துல் – இயக்குனர் நிஸாம் பஷீர் கூட்டணி.

புதிய அனுபவம்!

இந்த படத்தில் மம்முட்டி நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால், இதில் அவரது முகம் மெலிந்து தாடை எலும்புகள் வெளியே தெரிகின்றன என்பதை சொல்லித்தான் தீர வேண்டும்.

அதனால், அவரை ஒரு நடுத்தர வயது கணவராக ஏற்க மனம் தயங்குகிறது. அவரது நடிப்பு மட்டுமே அதனை மறக்கடிக்கிறது.

மாமியார் மருமகளாக வரும் பிந்து பணிக்கர், கிரேஸ் ஆண்டனி இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். இருவரது பாத்திரங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதுதான் இக்கதையின் சிறப்பம்சம்.

போலீஸ்காரராக வரும் ஜகதீஷ், தனது நீண்ட நெடிய அனுபவத்தின் உதவியோடு வெகுலாவகமாக அப்பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கான பாத்திரம் ஷராபுதீனுக்கு வாய்த்தாலும், போதுமான அளவுக்கு அவருக்கு ‘ஸ்கோப்’ இல்லை என்பதே உண்மை.

இவர்கள் தவிர்த்து வில்லன்களாக வரும் ஆசிப் அலி, சஞ்சு சிவ்ராம் உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்டவர்கள் இக்கதையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

‘வாடா.. வாடா..’ என்று பேயை அழைக்கும் நாயகன் பாத்திரம் புதிதல்ல என்றாலும், அதை மட்டுமே மையமாக கொண்டு கதை பின்னுவது நிச்சயம் புதிது.

அதற்கேற்ப காட்சியாக்கமும் புத்துணர்வைத் தர வேண்டும். அந்த வகையில், நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு திரையில் ஒவ்வொரு பிரேமிலும் இருண்மையை நிரப்ப மெனக்கெட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு பனிப்பிரதேசத்து வாழ்க்கை போல, படம் முழுக்க சாம்பலும் நீலமும் கலந்த வண்ணம் இழையோடியிருப்பது அழகு.

கிரண் தாஸின் கூர்மையான படத்தொகுப்பும், காட்சிகளின் வீரியத்தைக் கூட்டும் வகையில் அமைந்துள்ள மிதுன் முகுந்தனின் பின்னணி இசையும் திரைக்கதையில் பரபரப்பை மேலும் அதிகரிக்கின்றன.

ஷாஜி நடுவில் கையாண்ட கலை வடிவமைப்பு, ரோர்சாக்கின் கதைக்களத்தை உள்வாங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மிக முக்கியமாக, மலைப்பிரதேசத்தில் அரைகுறையாக கட்டப்பட்ட ஒரு வீட்டோடு துபாயில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ‘இண்டர்கட்’டில் காட்டுவதும் அது அபாரமாகப் பொருந்திப் போவதும் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.

கொஞ்சம் ஹாரர், நிறைய த்ரில்லர், இடையிடையே மெலிதாக ஆக்‌ஷன், அமானுஷ்யம் என்றிருக்கும் ‘ரோர்சாக்’, எந்த வகைப்பாட்டிலும் முழுதாக அடங்காமல் புதிய காட்சி அனுபவத்தை தருகிறது.

அதேநேரத்தில், ‘பழிக்குப் பழி’ வகையறா ட்ரீட்மெண்டிலும் இக்கதை அமைந்திருக்கிறது.

இக்கதையை சமீர் அப்துல் வடிவமைத்த விதமும், அதனைத் திரையில் காட்டிய இயக்குனர் நிஸாம் பஷீரின் எண்ணவோட்டமும்தான் புதிய அனுபவத்துக்கு வித்திட்டிருக்கிறது.

வழக்கமான கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு, மனோதத்துவ முறையில் மிக நுணுக்கமான வசனங்களோடும் காட்சியமைப்போடும் கூடிய இத்திரைக்கதை ‘ஸ்லோமோஷனில்’ நகர்வதாகத் தோன்றக்கூடும். அது மட்டுமே, இப்படத்தைக் காண்பதற்கான தடைக்கல்.

திலீப் ரசிகர்கள் கவனத்திற்கு..!

ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமென்பவர்களுக்கு ‘ரோர்சாக்’ நிச்சயம் பொருந்தாது.

அதேநேரத்தில், ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற கருத்தைப் பதிய வைத்த வகையில் அறம் புகட்டும் பாடமாகவும் அமைந்துள்ளது.

ஒருவர் குற்றவாளி ஆவதற்கு வளர்ப்பு, சூழல், பொருளாதார சிக்கல்கள் என்று பல காரணங்கள் இருந்தாலும், தீயதை செய்யாதே என்று சொல்லி திருத்தும் அன்னை அதனைத் தடுக்கும் முக்கியக் காரணமாக இருப்பார்.

அந்த வகையில், இப்படத்தில் பிந்து பணிக்கர் ஏற்ற சீதா பாத்திரம் ‘படையப்பா’வில் வரும் நீலாம்பரிக்கு இணையானது.

இக்கதையில் திலீப் என்ற பாத்திரம் லூக் தேடும் நபராக இடம்பெற்றுள்ளது. அவர் கட்டிய வீட்டின் முன்பகுதியில் உள்ள ‘திலீப்’ஸ் ஹெவன்’ எனும் பலகையில் ‘திலீப்’ எனும் பெயரை மட்டும் சுத்தியல் கொண்டு பெயர்த்துவிட்டு அவ்வீட்டுக்குள் லூக் நுழைவதாக ஒரு ஷாட் உண்டு.

அந்த ஷாட்டும் சரி, திரைக்கதையின் வெவ்வேறு இடங்களில் ‘திலீப்’ என்ற பெயர் வரும்போதும் சரி, மனதுக்குள் மலையாள நடிகர் திலீப்பின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதே காரணத்தால், மலையாள திரையுலகில் கேள்விக்குறியான திலீப்பின் இடம் குறித்து பூடகமாக இப்படம் பேசுவதாகவும் சர்ச்சைகள் எழலாம்.

மம்முட்டி, மோகன்லால் உட்பட மலையாள நடிகர்கள் பலரோடு நெருக்கமானவராக திலீப் இருந்தபோதும், இப்படியொரு கேள்வி எழுவது தேவையற்ற ஆணிதான்.

அது தெரிந்தும் அப்படியொரு பெயரை படக்குழுவினர் தேர்ந்தெடுத்திருப்பது நிச்சயம் ஆச்சர்யமூட்டும் விஷயம்.

தமிழில் வெளியான ‘நானே வருவேன்’ போன்ற நேரடியான கதை சொல்லல் இதில் இல்லாவிட்டாலும், ஒரு நல்ல ‘ஹாரர் த்ரில்லர்’ ஆகவே அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

புத்துணர்வூட்டும் ஒரு காட்சியனுபவத்தைக் காணத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ரோர்சாக்’ ஒரு விருந்து என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like