மெட்ராஸ் பெயரின் முதலெழுத்தை இனிஷியலாக வைத்துக் கொண்ட எம்.கே.ராதா!

எம்.கே.ராதா சென்னை மயிலாப்பூரில் 1910 நவம்பர் 20-ல் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம்.

ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர புருஷன்’ என்று அழைக்கப்பட்ட எம்.கே. ராதா சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்து தலைநிமிர்ந்து நின்றவர். அவர் பெயரின் முன்னெழுத்தில் உள்ள எம். மெட்ராஸைக் குறிக்கிறது.

தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, எம்.ஜி.ஆருடன் நடித்து வந்தார். 1936-ல், எஸ்.எஸ்.வாசனின் இயக்கத்தில் வெளியான, சதி லீலாவதி படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அந்த படத்தில் எம்.ஜி.ஆர். சிறு வேடத்தில் நடித்தார். பின் மாயா மச்சீந்திரா, துளசிதாஸ், வனமோகினி உள்ளிட்ட படங்களில் எம்.கே.ராதா நடித்தார்.

கடந்த 1948-ல் வெளியான ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் அவரே கதாநாயகன்.

ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் எம்.கே.ராதா கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து இரட்டை வேடங்களில் நடித்தார்.

சந்திரலேகாவுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு பல சமூகக் கதைகளிலும் நடித்து சாதனை படைத்தார் ராதா.

கம்பீரமான ராஜா வேஷங்களில் அசத்திய இவர் ‘சம்சாரம்’ என்ற படத்தில் சாமானிய மனிதனாக, நாடக பாணி நடிப்பின் தாக்கம் இல்லாமால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.

வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950களில் நிலைமையே வேறு.

தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால கட்டத்தில், இவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் பெற்ற முன்னணி நாயகன். அதுவும் ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல; 1941-ல் தொடங்கி 1954 வரை சுமார் 13 ஆண்டுகள்.

அரசு ஊழியர்களே மாத ஊதியமாக ரூ.100 பெற்று வந்த காலத்தில், ராதாவுக்கு மாத ஊதியமாக ரூ.300 வழங்கிய ஜெமினி ஸ்தாபனம் அவரைத் தங்கள் நிறுவனத்தின் நிரந்தர நடிகராக வைத்திருந்தது.

50 படங்களில் நடித்திருக்கும் இவர் மீது அளப்பரிய பாசமும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை விழா ஒன்றில் எம்.கே. ராதாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார்.

மத்திய அஞ்சல் துறை ராதாவின் உருவப் படத்தை அஞ்சல் உறையில் வெளியிட்டு கவுரவம் செய்தது.

1973-ல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றார். 1985 ஆகஸ்ட் 29ல் காலமானார். அவரின் நினைவு தினம் இன்று.

– நன்றி: வெங்கட் ரமணி முகநூல் பதிவு

You might also like