மும்முனைப்போட்டி நிலவும் தெலுங்கானா!

ஆளும் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்லுமா?

நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அடுத்த மாதம் 13 -ம் தேதி ஒரே கட்டமாக இங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவில் இருந்து பிரித்து, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி கொடுத்த பின்னர், முதல்முறையாக காங்கிரஸ் வென்றுள்ளது.

கடந்த தேர்தலில் மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் டி.ஆர்.எஸ்.கட்சி வென்றது. (இப்போது பி.ஆர்.எஸ் கட்சி)

அடுத்தபடியாக, பாஜக நான்கு இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் கிடைத்தன.

மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வழக்கம்போல் வென்றது. 1999-ம் ஆண்டு முதலே, ஐதராபாத், இந்த கட்சியின் கோட்டையாகவே உள்ளது.

மும்முனை போட்டி

தெலுங்கானா மாநிலத்தில் சிறிதும், பெரிதுமாக 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. பெரும்பாலான கட்சிகள் மக்களவைத் தேர்தலில் குதித்துள்ளன.

ஆனால் உண்மையான போட்டி காங்கிரஸ், பாஜக மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேதான். மூன்று கட்சிகளுமே 17 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, வழக்கம்போல் ஐதராபாத் தொகுதியில் தனித்து களம் இறங்கி உள்ளார்.

கே.சந்திரசேகர் ராவ்

தெலுங்கானா மாநிலத்தை பற்றி எழுத வேண்டுமானால், முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவுக்கு, கால் பகுதியாவது ஒதுக்க வேண்டும்.

அந்த மாநிலம் உருவாக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவர் அவர்.

தெலுங்கானா எனும் தனி மாநிலம் உருவானது முதல் கடந்த நவம்பர் மாதம் வரை அவர் தான் தெலுங்கானா முதலமைச்சராக இருந்தார்.

இளைஞர் காங்கிரஸ் கட்சியில், தனது பொது வாழ்க்கையை ஆரம்பித்த அவர், தெலுங்கு தேசம் கட்சியில் கொஞ்சகாலம், தங்கி இருந்து விட்டு, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் கட்சியை சொந்தமாக ஆரம்பித்தார்.

2 முறை தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சராக அசைக்க முடியாத பலத்தோடு இருந்தவரை, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டமன்ற தேர்தல் வீட்டுக்கு அனுப்பியது.

அப்போது முதல் இவருக்கும் இவரது கட்சிக்கும் இறங்குமுகம் தான். அவரது நம்பிக்கைக்குரிய ஆட்கள் எல்லாம், வரிசை கட்டி, காங்கிரசில் சேர்ந்து விட்டனர்.

பலமுறை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தேர்தலில் வென்றுள்ள சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மகன் கே.டி.ராமராவ், மகள் கவிதா ஆகியோரும் எம்.பி.க்களாக இருந்துள்ளனர்.

இந்த முறை அவரது குடும்பத்தில் யாருமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

பிரதமர் கனவில் மிதந்த சந்திரசேகர் ராவ், அதற்கான முதல் கட்ட ஏற்பாடாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என்று கூட மாற்றினார். கடைசியில் எம்.பி. தேர்தலில் கூட அவரால் நிற்க முடியாத சூழல்.

யாருக்கு வெற்றி ?

தெலுங்கானாவில் இப்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆட்சி பொறுப்பை ஏற்று சில மாதங்களே ஆவதால், காங்கிரசுக்கு எதிர்ப்பு அலை ஏதும் கிடையாது.

பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெல்லும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

பாஜகவுக்கு 4 தொகுதிகளும், பி.ஆர்.எஸ். கட்சிக்கு 3 தொகுதிகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், தெலுங்கானா இருந்தபோது, தெலுங்கு தேசம் கட்சி பலமாக இருந்தது.

ஆனால் இப்போது தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு தளங்கள் இல்லை. தலைவர்களும் கிடையாது.

இதனால்,எஇந்த முறை தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை.

சட்டசபைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள, காங்கிரஸ் போராடுகிறது.

கடந்த முறை வென்ற இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. சந்திரசேகர ராவுக்கு, இந்த தேர்தல் வாழ்வா? சாவா ? போராட்டம்.

ஜுன் மாதம் 4-ம் தேதி ஓட்டு எண்ணும் வரை, அங்குள்ள மக்கள் போல் நாமும் காத்திருப்போம்.

– பி.எம்.எம்.

You might also like