வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!

ஆர்மேனிய ஓவியக் கண்காட்சி குறித்து கவிஞர் பிருந்தா சாரதி!

சென்னையில் ஆர்மேனியன் தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ளது அந்தத் தெரு. அங்கு பழமையான ஆர்மேனியன் தேவாலயமும் இருக்கிறது.

இதையெல்லாம் ஒரு செய்தியாக மட்டுமே நான் அறிந்திருந்தேன் இத்தனை நாள். இரண்டு நாட்களுக்கு முன்பு கவிஞர் மனோகரி மதன் ஒரு ஓவியக் கண்காட்சிக்கு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்.

சென்னையில் இத்தனை வருடங்கள் இருந்தபோதும் அங்கே சென்றபோதுதான் இவற்றையெல்லாம் நான் பார்த்தேன்.

பழமை மாறாமல் தேவாலயத்தை மிகத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரித்து வருகிறார்கள். அங்கு இருக்கும் மேரியின் ஓவியம் ஆர்மேனியாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்று கூறினார் தேவாலயத்தை பராமரிக்கும் நண்பர்.

அந்த ஓவியக் கண்காட்சி மனோகரி மதனின் மருமகள் மரி வரைந்த ஆர்மேனிய ஓவியங்கள். அவர் ஓர் ஆர்மேனியனர். ஆர்மேனியா உலகின் பழமையான நாடுகளில் ஒன்று.

இயேசு பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அந்நாட்டுக்கு வரலாறு இருக்கிறது. அதன் கட்டடக் கலை உலகின் கலைச்செல்வம்.

அந்நாட்டின் ஓவியங்கள் நீண்ட மரபை கொண்டவை. அந்நாட்டின் கார்பெட், கைவினைப் பொருட்கள் போன்ற கலைச் செல்வங்கள் உலகத்தின் கலை பொக்கிஷங்கள்.

ஓவியக் கண்காட்சி நடைபெற்ற ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.

ஓவியங்களை பார்த்ததும் தன் நாட்டுக்கு சென்றுவிட்டதுபோல ஒவ்வொரு ஓவியத்தை பற்றியும் விளக்கிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

ஓவியர் சொல்லி அதை விருந்தினர்கள் கேட்பது என்ற மரபில் இருந்து மாறுபட்டு சிறப்பு விருந்தினர் அந்த ஓவியங்களைப் பற்றிச் சொன்னபோது தாய் நாட்டின் மீது ஒரு மனிதனுக்குப் பொங்கிவரும் காதலை உணரமுடிந்தது.

மனோகரி மதன், தான் வரைந்த ஓர் ஓவியத்தை எனக்குப் பரிசளித்தார். பிரசாந்தும் ஓவியம் வரைவார் என்று சொன்னார். பிரசாந்த் ஏற்கனவே ஒரு நூலாசிரியர்.

ஆளுமைத்திறன் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னிடமும் ஒரு பேட்டி எடுத்து அதைக் கட்டுரையாக்கி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலில் சேர்த்து இருந்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்டதன் மூலம் அந்த நாளில் மட்டுமல்ல என் வாழ்விலும் மேலும் சில வண்ணங்கள் கலந்தன. வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like