ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!

நூல் அறிமுகம்:

நினைவுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை. அப்படி தன் நினைவலைகளில் பதிந்துள்ள மனிதர்கள், நிகழ்வுகள், இடங்கள் இவற்றையெல்லாம் தொடர்ந்து முகநூலில் பதிவு செய்து வந்திருக்கிறார் எழுத்தாளர் நாறும்பூநாதன்.

அந்த அழகிய நினைவலைகளைக் கோர்த்து உருவானது தான் யானை சொப்பனம் என்ற இந்த நூல்.

நேர்த்தியாய் அமைந்த அட்டைப்படம் நூலை எடுத்து வாசிக்க வைக்கத் தூண்டும். எடுத்து நூலை வாசிக்க தொடங்கிவிட்டால், நூலை முழுவதும் வாசிக்காமல் வைக்க முடியாதபடி, எழுத்தாளரின் எழுத்துநடை நம்மை கட்டிப்போடும்.

நினைவுகளில் மூழ்கி எடுத்த நிஜம் என்பதால் இந்த எழுத்துக்கள் உயிர்ப்போடு இருக்கின்றன.

யானைச் சொப்பனம், என் ஆசிரியர், ஊக்கு, பிள்ளையார் எறும்பு, முழு பரிட்சை லீவு, வேகாத முறுக்கு, கிராம போன் ரெக்கார்டும் சங்கர் அண்ணாச்சியும், கந்தையா அண்ணனும் தென்னகத்து ஜேம்ஸ்பாண்டும், வாழ்த்து அட்டைகள், எனது பால்யம், கடம்பூர் போளி, ஆச்சியின் சுருக்குப்பை… இந்த கட்டுரைகள் எல்லாம் வாசிக்கும்போது, நம் சிறு வயது நினைவுகளில் நம்மையும் பயணிக்க வைக்கும். குதூகலிக்க வைக்கும்; கண் கலங்க வைக்கும்..

நிறைய நிறைய தன்னலம் கருதாத மனிதர்கள் நமக்கு அறிமுகமாவார்கள். திருநெல்வேலியில் ரயில்வே ஸ்டேஷன் கட்டும் போது அங்கு சாலை வசதி இல்லாததால் தனக்கு சொந்தமான இடத்தை இலவசமாக கொடுத்து சாலையும் போட்டுக் கொடுத்த தங்க மீரான் முகமது கனி, (சுருக்கமாக தமு),

இவருக்கு இலக்கியத்தின் மேல் காதல் வரவைத்த ஆசிரியர் படிக்கராமு அய்யா, தெய்வு அத்தான், பல்லக்கில் பவனி வந்த ஆதீனங்களுக்கு நடுவே, அதைத் துறந்த குன்றக்குடி அடிகளார், கணபதி ஆச்சி, நெல்லையின் பெருமிதமாய் வாழ்ந்த செந்தில் செல்வகுமரன் தொல்லியல் ஆய்வாளர், இலக்கியமும் அரசியலையும் இணைத்து பேசும் மிகச் சிறந்த அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரி, இசைத் தட்டு சங்கர் அண்ணாச்சி,

கந்தையா அண்ணன், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அயோத்திதாச பண்டிதர், எழுத்தாளர் காஞ்சனா ஜெயத்திலகர் அவர்களின் அம்மா டாக்டர் திருப்பதி ராமாபாய் பொன்னுத்துரை,, ரசிகமணி டி கே சி, புகழ்பெற்ற கர்ணாமிர்த சாகரம் என்ற இசை நூலை எழுதிய ஆபிரகாம் பண்டிதர், ஆதர்ச திரைப்பட இயக்கம் ஜோதி விநாயகம்,

ஆங்கில பேராசிரியர் சங்கரன் குட்டி மேனன், கதை சொல்லி சுந்தரவடிவேலு, ஓவியர் வள்ளிநாயகம், லத்திக்கம்புகள் காலை பதம் பார்த்தாலும், பாலதண்டாயுதம் போன்ற இயக்கத் தோழர்களை காட்டி கொடுக்காத ஜேக்கப் வாத்தியார், காருக்குறிச்சி அருணாச்சலம் பிள்ளை, தமிழறிஞர் சி சு மணி, பேராசிரியர் டேவிட் பாக்கியமுத்து, ஓவியர் ராமலிங்கம்,

சேர்மன் மகாராஜன், கிராவின் புகழ்பெற்ற கதையான கதவு உருவாக காரணமான விவசாயி ரங்கசாமி, பாடலிங்கம் அண்ணாச்சி, தாழையூத்து சங்கரன், அங்கயர் கன்னி, புதுமைப்பித்தன், தமிழறிஞர் கா.சு .பிள்ளை…….. கூடவே இவருடைய நண்பர்கள்…

நெல்லையைப் பற்றி எத்தனை சுவாரசியமான பலரும் அறிந்திடாத தகவல்கள் அத்தனையும் இந்த நூலில் அறிந்து கொள்ளலாம்.

ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.

*****

நூல் : யானைச் சொப்பனம்
ஆசிரியர் : நாறும்பூநாதன்
பதிப்பகம் : நூல்வனம்
பக்கங்கள் : 174
விலை : ₹120.00

You might also like