சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.
இதில் முதற்கட்டமாக என்.மாலா, எஸ்.சௌந்தர் ஆகிய இருவரையும் கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து அவர்கள் ஏற்கனவே பதவியேற்றுவிட்டனர்.
இந்நிலையில் சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த இரண்டு நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இருவருக்கும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்பிறகு புதிய நீதிபதிகளை வரவேற்று அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினார்கள்.
இந்த இரு நியமனங்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 58 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. மேலும் 17 காலியிடங்கள் உள்ளன.