மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது!

சட்டசபையில் முதலமைச்சர் அதிரடித் தீர்மானம்

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசின் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து பேசினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டசபையில் இன்று (ஜூன் 19) தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறியிருப்பவை:

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமலும்,

கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால்,

கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

காவிரிப் பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும்.

ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை,

பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், மத்திய அரசின் அனுமதி இன்றியும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

விவசாயிகள் நலன்:

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு:

முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விசிக எம்எல்ஏவும் அமைச்சருமான வன்னி அரசு,  பாமக எம்எல்ஏ சௌமியா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

– வைஷ்ணவி பாலு

You might also like