எனது கிரிக்கெட் பயணம் மிக நீண்டது!

100-வது டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த நிலையில் பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், “100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம். என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நீண்ட நேரம் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். இது போன்ற விஷயங்கள் உங்கள் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் .

ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் வரவேற்பு மிகுந்ததாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட்” என்று அந்த வீடியோ பதிவில் விராட் கோலி கூறியுள்ளார்.

03.03.2022  4 : 30 P.M

You might also like