வழிகாட்டட்டும் குடிபெயர் தொழிலாளர்களுக்கான ஆய்வுகள்!
மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்குத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது நீண்ட காலமாக நிலவக்கூடிய யதார்த்தம் தான்.
இருந்தாலும் அண்மைக் காலங்களில் இந்தியாவின் சில மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஓராண்டில் மட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம் பெயர்கிறார்கள்.
கிராமங்களிலிருந்து வேலை வாய்ப்பில்லாமல் பெரு நகரங்களுக்கு இனம் பெயர்வதைப் போல, இந்த இடப் பெயர்வைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள் இதே குடிபெயர் தொழிலாளர்கள்.
கொரோனாக் காலத்தில் இந்த இடப்பெயர்வு முகத்தில் அறைந்த மாதிரி வெளிப்பட்டது. பலர் திரும்பவும் தங்கள் மாநிலங்களுக்கு வேறு வழியில்லாமல் சிக்கித் தவித்துப் போனார்கள். நடந்து பயணப்பட்டார்கள். பலர் உயிரிழந்து போனார்கள்.
நாடு முழுக்க விவாதப் பொருளானார்கள் பல மாநிலம் சார்ந்த தொழிலாளர்கள். இதைத் தான் “உள்நாட்டு அகதிகள்” என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறது இந்த நூல்.
மூன்று மாநிலங்களில் வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வுகளை விட, தனித்துவமும், நம்பகத்தன்மையும் கொண்டதாக அமைந்திருக்கின்றன இந்த ஆய்வுகள். அரசின் எந்தத்துறையும் இத்தகைய ஆய்வைச் செய்துவிட முடியாது. செய்யவும் விரும்ப மாட்டர்கள் என்பது வேறு விஷயம்.
இந்த நூலைத் தொகுத்துக் கொண்டு வெளிக்கொண்டு வந்திருக்கிற நண்பரான எம்.எஸ்.செல்வராஜ் முப்பதாண்டுகளுக்கு மேலான நண்பர். மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள், மலைவாழ் மக்கள் குறித்துத் தொடர்ந்த செயல்பாட்டில் இருப்பவர்.
இந்தியா முழுக்கவும், வெளிநாடுகளிலும் உள்ள செயல்பாட்டாளர்களுடன் தொடர்ந்து இயங்கி வருபவர். முன்பே சில ஆய்வு நூல்களை வெளிக்கொண்டு வந்திருப்பவர். களச் செயல்பாட்டுக்காகத் தேசிய அளவில் விருதையும் பெற்றிருப்பவர்.
அவர் முன்னின்று தொகுத்திருக்கிற ஆய்விலும், அவர் எழுதியிருக்கிற முன்னுரையிலும் மாநிலம் கடந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் அபாயகரமான இருத்தலும், நிராதரவான வாழ்வியலும் வெளிப்பட்டிருக்கின்றன.
அதிலும் கொரோனா காலகட்டத்தில் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருந்து சரியான பயண வசதியில்லாமல் அவரவர் மாநிலங்களுக்குச் செல்ல அவர்கள் பட்டபாடு என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.
நன்கு உழைக்கத் தெரிந்த அவர்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. பாதுகாப்பாக உணரவும் முடியவில்லை. அவர்களுடைய உழைப்பை மலிவான கூலிக்கு உறிஞ்சத் தெரிந்தவர்களால் நிர்கதியான கொரோனா காலத்தில் அவர்களைக் காப்பாற்றத் தெரியவில்லை.
இது தான் வாழ்வியல் சார்ந்த முரண்.
எங்கோ இருந்து வந்து தங்களுடைய ஆலைகளில், தொழில் நிறுவனங்களில், கட்டுமானப் பணிகளில், எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டிய பணிகளில் கால நேரம் பார்க்காமல் உயிருள்ள இயந்திரங்களைப் போல வேலை பார்க்க வடமாநிலத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
அவர்களை வரவழைத்துப் பணியாற்ற வைக்க அதற்காகத் தனித்தரகர்கள் இருக்கிறார்கள். வறுமையும், இயலாமையும், சாதிய அணுகுமுறைகளும் அவர்களைச் சொந்த மாநிலங்களிலிருந்து வெளியேற வைத்திருக்கின்றன என்பதே கண்கூடான உண்மை.

சென்னையில் சாலைக் கட்டுமானப் பணி நடக்கும்போது விபத்து ஏற்பட்டுச் சில தொழிலாளர்கள் உயிரிழந்தபோது, ஊடகங்களில் அந்த நிகழ்வு ஒரு நாள் செய்தி மட்டுமே. அதற்கு மேல் அந்தத் தொழிலாளர்களுக்கு வாழ்வு சார்ந்த பாதுகாப்பில்லை. கடல் கடந்து வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் கூடச் சில சிக்கல்கள் ஏற்பட்டால், அங்குள்ள தூதரகங்களில் முறையிட முடிகிறது. அங்குள்ள ஊடகங்களில் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடிகிறது.
ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் கடந்து வந்து பணியாற்றுகிறவர்களுக்கு அந்தக் குறைந்தபட்சப் பாதுகாப்பு கூட இல்லை. தொழிலாளர்கள் நலச்சட்டங்கள் அவர்களை முறையாகப் பாதுகாக்கவில்லை. தொழிற்சங்கம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் அவர்கள் மேற்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட முயற்சி நடப்பது தெரிந்தாலே, அவர்கள் நிறுவனத்திலிருந்து அல்லது குறிப்பிட்ட வேலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள்.
நண்பர் செல்வராஜ் தலைப்பில் சொல்லியிருப்பது மாதிரி இவர்களை உள்நாட்டு அகதிகள் என்றும் சொல்லலாம். வெளிப்படையாக அறிவிக்கப்படாத கொத்தடிமைகள் என்றும் சொல்லலாம். நிச்சயமற்ற வேலைகளில் தற்காலிகமாக அமர்த்தப்பட்டிருக்கிறவர்கள் என்றும் சொல்லலாம்.
வெளிப்படையாக இவர்கள் மீது நடக்கிற அத்துமீறல்கள் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் நன்றாகவே தெரியும். கொரோனா காலத்தில் கர்நாடகத்திலிருந்து வெளியேற முயன்ற குடிபெயர் தொழிலாளர்களை நகரவிடாமல் மாநில அரசே சில தொழில் நிறுவனங்களுக்காகத் தடுத்து நிறுத்தியது அண்மைக் காலத்திய உதாரணம்.
இவர்களில் மிக மிகக் குறைந்த சதவிகிதம் பேர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற காரணத்தால் அதன் பழியை ஒட்டுமொத்தமான புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ஊடகங்களும், சமூகமும் பொருத்த முயற்சிப்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்தப் பொதுப்புத்தியால் தான் பல நிறுவனங்கள் அவர்களைக் கேள்வி கேட்பாரற்று மலிவாகச் சுரண்ட முடிகிறது. பெண் தொழிலாளர்களிடமும் அத்துமீற முடிகிறது.
தங்கள் மீதான நிர்பந்தங்களை எதிர்க்கிற தொழிலாளர்களின் குரலை எதிரொலிக்க இங்கு ஊடகங்களும் இல்லை. புகார் செய்வதற்கான நிறுவனங்களும் இல்லை.
இன்னொரு விதத்தில் சொன்னால் மனித வளம் எந்த அளவுக்கு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு நம் கண்ணுக்கு முன்னால் வாழும் உதாரணங்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியிலும், வலுவான காண்ட்ராக்டர்கள் பின்னணியிலும், தனியார் நிறுவனங்கள் துவங்கிச் சில்லரைக் கடைகள், உணவகங்கள், முடிதிருத்தக் கடைகள் வரை எங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பரவியிருக்கிற அளவுக்கு அவர்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டங்கள் இங்கு விரிவாக்கப்படவில்லை.
இந்த நூலில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, மிக அதிகமான உழைப்பினால் பிழியப்பட்ட சக்கைகள் போலாகி விரைவில் கூடுதலான நோய்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இதே தொழிலாளர்கள் மாறிப் போகிறார்கள்.
சென்ற நூற்றாண்டுகளுக்கு முன்பும் கடல் கடந்து பிழைக்கப் போன இந்தியர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழர்கள் உலகம் முழுக்கப் பல நாடுகளுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த இனப்படுகொலை உலகம் முழுக்கத் தமிழர்களைப் பரவலாகச் சென்று குடியேறும் சூழலை உருவாக்கியிருக்கிறது.

இந்தியா எங்கும் சென்று குடியேறிய தமிழர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அண்மைக் காலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் மாநிலம் விட்டு மாநிலம் கடந்து செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, உள்ளூர் விவசாயம், உற்பத்தி, தொழில் போன்றவை அடிபட்டுப் போனதின் இன்னொரு அடையாளமாகவும் நாம் சொல்ல வாய்ப்பிருக்கிறது. பல்வேறு சமூகம், அரசியல் குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிய படியே இருக்கின்றன இந்தப் புலம் பெயர்தல்கள்.
இந்தக் கேள்வியை மேலும் உயிர்ப்புள்ளதாக மாற்றியிருக்கிறது இந்த ஆய்வுநூல். புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, பணி உத்திரவாதம் போன்ற செயல்பாடுகளை நோக்கிய நகர்வுக்கு இத்தகைய ஆய்வுகள் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
-மணா
-‘உள்நாட்டு அகதிகள்’ நூலுக்கான அணிந்துரையில் இருந்து.
03.03.2021