குழந்தைகளைக் குழந்தைகளாக ஏன் பார்க்க மறுக்கிறோம்?

முன்பு இருந்ததைவிடவும் அண்மைக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். மிக இளம் வயதிலேயே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

வெவ்வேறு ஊடகங்களில் இவற்றைத் தொடர்ந்து செய்திகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஹேமா என்கிற 7 வயது சிறுமி காணாமல் போய், ஒரு மாதத்தைக் கடந்த நிலையில் இப்போதும் காவல் துறை குற்றவாளிகளைத் தேடிக்கொண்டே இருக்கிறது.

இதைப் போலவே தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

சில பகுதிகளில் வீட்டிற்கு அருகிலேயே சென்று கொண்டிருந்த குழந்தையை ஆட்டோவில் கடத்த முயன்றவர்கள் பிடிபட்டிருக்கிறார்கள்.

இதில், இரண்டு வயதுக் குழந்தையைக் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு இறையாக்கி இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அவலம்.

இது எங்கோ ஓரத்தில் நடக்கும் பிரச்சனையல்ல. இந்தியா முழுக்க ஏறத்தாழ 85,000 குழந்தைகளுக்கு மேல் காணாமல் போயிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதில், 65 சதவிகித அளவுக்கே குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 35 சதவிகித குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் ஏன் இப்படிக் கடத்தப்பட வேண்டும்? 

இப்படிக் காணாமல் போகும் குழந்தைகளில் சிறுவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் கூட, சிறுமிகளின் எண்ணிக்கையே இதில் அதிகமாக இருக்கிறது.

கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலிருந்தும் கடத்திச் செல்லப்படுகிற குழந்தைகளை எந்தவிதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நோக்கி நகரும்போது பெரும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் வார இதழ் ஒன்றிற்காக சென்னையில் காணாமல் போகும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்கப் போகும்போது கிடைத்த தகவல்கள் அதிர வைத்தன.

சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னல் நிறுத்தங்களில் குழந்தைகளுடன் கையேந்தி பிச்சை எடுக்கும் அண்டை மாநிலத்துப் பெண்களைப் போலீசார் பிடித்து விசாரித்தார்கள்.

அவர்கள் கையில் ஒரு வயதிலிருந்து ஒன்றரை வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தன.

அந்தக் குழந்தைகளை தோளில் சாய்த்தோ, மடியில் சாய்த்தவரோ அந்தப் பெண்கள் பிச்சை எடுக்கும்போது அந்த குழந்தையைப் பார்க்கிறவர்கள் கருணையுடன் கொடுக்கும் பணம் தான் அவர்களை இப்படியெல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்பது தெரியவந்தது.

உண்மைதான். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறு குழந்தைகளுக்கு மிகவும் கடுமையான தூக்க மருந்துகளோ, போதை மருந்துகளோ கொடுக்கப்பட்டிருந்தன.

அதன்மூலம் அந்தக் குழந்தைகள் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் கத்தாமல், எந்த தொந்தரவும் செய்யாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.

நோகாமல் அவர்களை வைத்து பிச்சை எடுப்பது வேகமாக நடக்கும்.

தொடர்ந்து மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டு நிர்பந்தமாக தூங்க வைக்கப்படுகிற அந்தக் குழந்தைகளின் உடல்நிலை எந்தளவுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும்? 

இப்படிப்பட்ட நிலையில் வளர்கிற குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி வளர்ச்சி அடைவார்கள்?

இதைவிடக் கொடுமையாக, தென்தமிழத்தில் உள்ள ஒரு நகரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஒரு ஆணை அழைத்துக் கொண்டு விடுதிக்குள் செல்லும்போது, சந்தேகத்திற்கு ஆளாகக் கூடாது என கையில் ஒரு குழந்தையுடன் போயிருக்கிறார்கள்.

அந்தக் குழந்தையும் தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருந்தது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அப்படி அந்தக் குழந்தைகள் வைக்கப்பட்டிருப்பது பிறகு தெரியவந்தது.

எங்காவது ஓரிடத்தில் இருந்து குழந்தைகளைக் கடத்தி வந்து இம்மாதிரி மயக்க நிலைக்கு ஆளாக்கப்படுகிற குழந்தைகளை, தினக் கூலிக்கு வாடகைக்கு விடவும் சிலர் ஏஜெண்டுகளாக செயல்பட்டதெல்லாம் தெரியவந்தது.

அதன்பிறகு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது வெகுவாக குறைந்திருக்கிறது.

சிறு குழந்தைகளின் மீது கருணை வைத்து நாம் கொடுக்கும் பணம் கூட எவ்வளவு பெரிய கடத்தலுக்கு உதவி இருப்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பதைபதைப்பாக இருக்கிறது.

அதோடு மட்டுமல்ல, மிகச் சிறுவயதிலேயே கடத்தப்பட்ட பெண் குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது.

பெண்பாலாக பிறந்த காரணத்தாலே எப்படிப்பட்ட கொடுமையான அனுபவங்களை அவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்தால், பெண் குழந்தைகளை வைத்திருக்கிற எந்தப் பெற்றோரும் பதைபதைத்துப் போவார்கள்.

ஏதோ ஒரு கோபத்தில் பெற்றோரிடமிருந்து விலகி ஓடி வரும் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் தெருக்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, 8 வயதிலேயே பால்வினை நோய்களுக்கு ஆளான நிலைமைக்குப் போயிருப்பதை நேரடியாகவே உணர முடிந்தது. 

இதனுடைய நீட்சியாக கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்தில் இடம்பெற்ற காட்சியை சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமத்திலிருந்து இப்படிக் குழந்தைகள் கடத்தப்பட்டாலும் சங்கிலித் தொடராக, சில நாட்களிலேயே அந்தக் குழந்தை வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடுவது நடக்கிறது.

இவ்வளவு தூரத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவது தெரிந்தும் அது குறித்த பரந்துபட்ட விசாரணை ஏன் இங்கு மேற்கொள்ளப்படவில்லை என்பது மர்மமாகவே இருக்கிறது.

அதோடு, இன்னொன்றையும் சொல்ல வேண்டும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகளைக் கருவிலேயே கண்டுபிடித்துக் கொல்வது இயல்பாக நடந்ததாலேயே அதைத் தடுக்கும் விதமாக கருவில் இருக்கும் குழந்தைகளை ஸ்கேன் செய்வது இங்கு சட்ட ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது.

அப்போது மதுரை, தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெண் குழந்தைகளை எதாவது ஒரு விதத்தில் கொல்வதும் பரபரப்பான செய்திகளாக வெளிவந்து அதற்கு எதிர்வினையாக தொட்டில் குழந்தைகள் திட்டம் போன்றவை நடைமுறைக்கு வந்தன.

இப்போது இந்த நிலை மாறி, பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்தே கடத்துவதும் அதிகரித்திருத்திருக்கிறது.

சற்று வளர்ச்சி அடைந்த பிறகு, பள்ளிக்கோ அல்லது பொதுவெளிக்கோ செல்லும்போது அவர்கள் கடத்தப்படுவதும் அதிகரித்திருக்கிறது.

இத்தகைய கடத்தலைத் தடுக்க கடுமையான பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் மீது போக்சோ சட்டங்கள் பாய்கின்றன.

இதெல்லாம் நடந்தும்கூட பள்ளிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்களில் சிலர், கல்வி பயில வரும் சிறுமிகளிடமே பாலியல் துன்புறுத்தலை செய்து அந்தந்த பள்ளிகளுக்கு முன்னால் பெற்றோர்கள் திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் தமிழத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஃப்ரிகேஜி படிக்கிற மாணவனின் கையைக் கட்டி ஒரு ஆசிரியைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் வெளிவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளில் ஆண்பாலோ, பெண்பாலோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது இத்தகைய வன்மமான எண்ணங்கள் உருவாகி அவர்களைத் துன்புறுத்துவதற்கான அடிப்படைக் காரணம் தான் என்ன?

யார் இம்மாதிரியான வன்மமான மனநிலையை ஊக்குவிக்கிறார்கள் என்று பார்த்தால், இதற்கான ஊற்றுக் கண்களாக, நம் கையில் இருக்கும் செல்போன்களில் வெளிவரும் ரீல்ஸ் காட்சிகளைச் சொல்ல முடியும்.

இவற்றிலிருந்து தூண்டுதல் பெறுகிற மனம் வக்கிரம் பாய்ந்த நிலையில், பொதுவெளியிலும் பள்ளிகளிலும் இத்தகைய அக்கரமங்களை அரங்கேற்றி இருக்கிறது.

இன்றைக்கு மிக இளம் வயதினர்கூட செல்பேசிகளை வைத்திருக்கிற நிலையில், ஆபாசத்தின் ஊற்றுக் கண்கள் பற்றிய கவனமும் அதைத் தடுக்க வேண்டிய செயல்பாட்டையும் காலம் கருதி – குறிப்பாக நிகழ்காலம் கருதி முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மீண்டும் தலைப்புக்கே வருவோம். குழந்தைகளைப் போற்றி குழந்தைகள் தினமெல்லாம் கொண்டாடும் நாம் எப்போது குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கப் போகிறோம்?

மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய அவசியமான கேள்வி இது.

– யூகி

You might also like