காஞ்சியில் மாதந்தோறும் ஒரு இலக்கியக் கூடுகை!

காஞ்சிபுரத்தில் மாதந்தோறும் ஒருநாள், மாலை மூன்று மணி நேரம், ‘வாசிப்பு வட்டம்’ என்னும் இலக்கியக் கூடுகை நிகழ்ந்து வருகிறது.

தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்கும் தோழர்கள் கதை, கவிதை, கட்டுரைக் குறிப்புகள், வரலாறு, வாழ்வியல், இயக்கம் சார்ந்த பதிவுகள், பாடல்கள் எனப் பல்வேறு தளங்களில் தங்களின் வாசிப்பையும் வாசிப்பு அனுபவங்களையும் அவரவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் பகிர்ந்துகொள்கின்றனர்.

ஒவ்வொரு கூடுகையிலும் புதிதாக ஒருவரேனும் அறிமுகமாகி, தமது முதல் வாசிப்பைப் பகிர்ந்துகொள்வதும் இந்நிகழ்வின் தனித்துவமான அம்சம் எனலாம்.

”வாசிப்பை நேசிப்போம்”, ”கைபேசி விடு – புத்தகம் எடு” என்னும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் இவ்வாசிப்பு வட்டத்தின் நவம்பர் மாதக் கூடுகை,

பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் சமூகச் சிந்தனைகளையும் முன்னிறுத்தி உற்சாகமாக நவம்பர் 22 ஞாயிறு மாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரிலுள்ள, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்றைய வாசிப்பு வட்ட நிகழ்வின் தொடக்கத்தில் தோழர்களின் வருகைத் தாமதத்தால் சற்றே தொய்ந்தாலும் மாலை 5.30 மணியளவில் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் நிகழ்ச்சி களைகட்டியது.

பல்வேறு இலக்கியப் படைப்புகள், சமூகப் பார்வைகள், வாழ்க்கை அனுபவங்கள் எனப் பன்முகத் தளங்களில் நிகழ்ந்த வாசிப்பும் பகிர்வும் நிகழ்வைச் செறிவானதாக்கின.

இன்றைய நிகழ்வைத் முதல் வாசிப்பாரான தோழமை காஞ்சி அமுதன் வரவேற்று – தனது வாசிப்பு பகுதியையும் பகிர்ந்துகொண்டார்.

அவர் பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களின் சாதிய வன்மத்தால் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சிறுவன் குறித்த பதிவை செய்து ஊடகத்திலிருந்து வாசித்தார்.

இத்தகைய துயரச் சம்பவங்களுக்குப் பின்னால் இயங்கும் நுண்ணரசியலைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து ஐயா து. தனசேகரன் ஒரு குறும்படத்தின் கதை சொல்லும் உத்தியில் அமைந்த கதையைப் பகிர்ந்துகொண்டார்.

“அதிகாரத்தின் துணைகொண்டு தனது தவறுகளை வீட்டில் பணிபுரிபவர்கள் மீது சுமத்தும் ஒருவரால் பாதிக்கப்பட்ட பெரியவர், அதேபோன்றதொரு பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைத் தானே செய்ததாக ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்லும் கதை”யை விவரித்தார்.

தன்னுடைய குடும்பத்தினரால் ஏற்கெனவே கைவிடப்பட்ட அந்தப் பெரியவர், சிறையில் இருந்தாலாவது தன்னைப் பார்க்க அவர்கள் வரக்கூடும் என்ற ஏக்கத்தையும் கதைக்குள் நுட்பமாகப் பொருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாகத் தோழர் அ.வெ.முரளி அண்மையில் வெளியிடப்பட்ட தோழர் காஞ்சி கதிரவன் அவர்களின் ”புதுக்கதிர்கள்” நூலிலிருந்து மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுயமரியாதைக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதையொன்றை வாசித்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர் கோபாலகிருஷ்ணன் தமிழறிஞரும் ஆய்வாளருமான இரா.இளங்குமரனார் குறித்த வாழ்க்கைக் குறிப்புகளை ஆய்வாளர் இளங்கோவன் எழுதிய நூலிலிருந்து வாசித்தளித்தார்.

தமிழுக்காக இரா.இளங்குமரனார் ஆற்றிய அரும்பணிகளையும், என்றும் நினைவுகூரத்தக்க அவரது தமிழ்ப் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

அடுத்ததாகத் தமிழாசிரியர் வே.ஆ.செந்தாமரை ”டேல் அசர்பைசான் கார்னகி”யின் ஆங்கில நூலொன்றின் மொழிபெயர்ப்பை வாசித்த அனுபவத்தைச் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார்.

”சமநிலையான மனநிலையைப் பேணுவதன் மூலமும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவதன் மூலமும் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகள்” குறித்து அந்நூல் சுட்டிக்காட்டும் கருத்துகளை எடுத்துரைத்தார்.

அடுத்து, கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவு நாளையொட்டி (நவம்பர் 22) இரா.கவிதா ”சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்” எனும் லிமரைக்கூ கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை அங்கதச் சுவையுடன் வாசித்தார்.

அவரது வாசிப்பு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டியது.

அவரைத் தொடர்ந்து அனைவரின் எதிர்பார்ப்புக்குரிய இளம் வாசிப்பாளரான யாழினியன் (நான்காம் வகுப்பு மாணவர்) பாவலர் அறிவுமதி எழுதிய ”தாய்ப்பால்” கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளைத் தனது மழலை மொழியில் வாசித்ததோடு,

அமுதா பொற்கொடி எழுதிய “ஆச்சி சொன்ன கதைகள்” எனும் நூலிலிருந்து “அறிவிழந்த ஆமை” எனும் சிறார் இலக்கியக் கதையொன்றையும் வாசித்தார். நிகழ்வின் இனிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது அவரது பங்கேற்பு.

அடுத்ததாக ஐயா இரா.தே.பவணந்தி ‘மொழித்தூய்மை முயற்சி’ என்னும் தலைப்பில் ”முனைவர் மலையமான்” எழுதிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் தொடர்பான கட்டுரையை தென்மொழி (நவம்பர் 2026) இதழிலிருந்து வாசித்தார்.

மொழி, ஊர்ப்பெயர்கள், அவற்றின் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை ஆர்வத்துடன் உள்வாங்கும் வகையில் அவரது வாசிப்பு அமைந்தது.

அவரைத் தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் நினைவு நாளையொட்டி “ஜென் விளக்கப் படைப்புகள்” எனும் கட்டுரைப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளை முன்வைத்து மைத்திரி அன்பு தனது பங்களிப்பை வழங்கினார்.

ஜென் மனநிலையின் வெளிப்பாடாக அமைந்த ஹைக்கூ கவிதைகளின் தன்மைகளையும் அவற்றின் சிந்தனைப் பரப்பையும் தமிழன்பன் மொழியுடன் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய நிகழ்வின் இறுதிப் பங்கேற்பாளராகக் கவிஞர் அமுதகீதன் “இலஞ்சம் வாங்கும் அதிகார மனநிலையையும், தங்களின் நியாயமான தேவைகளுக்காக இலஞ்சம் தர மறுக்கும் சாமானிய மக்களின் நிலைப்பாட்டையும் மையப்படுத்திய தனது இசைமொழிக் கவிதையை,

“பணத்தைத் தேடிப் பேயாய் அலைந்து லஞ்சம் வாங்காதே!
பட்டினி கிடந்து செத்தாலும் நீ லஞ்சம் வாங்காதே!

இன்றைக்குப் பகட்டாய் இருந்திடலாம் – அது
என்றைக்கும் நிலைத்திடாது!
குன்றாய்க் கரைந்து குலத்தையே அழிக்கும்;
திருந்தவே முடியாது!

உண்மையாய் உழைப்போம், ஒன்றாய் இருப்போம்;
உயர்வுகள் கண்டிடுவோம்!
கண்இமை போலப் பண்பினைக் காப்போம்;
காறி உமிழ்ந்திடுவோம் – லஞ்சத்தைக்
காறி உமிழ்ந்திடுவோம்!
0

எந்தத் துன்பம் வந்தபோதும் லஞ்சம் கொடுக்காதே!
பந்திக்கு முந்தும் பழக்கத்தை மாற்று; லஞ்சம் கொடுக்காதே!
அரசு சொல்வதைக் கேட்டு லஞ்சம் கொடுக்காதே!
லஞ்சம் கேட்கும் கயவனை அரசிடம் காட்டிக் கொடுக்க மறக்காதே!”
எனும் பாடலை இசைத்தார்.

அவரது இசை அனைவரையும் தாளகதிக்குள் இணைத்தது.

இறுதியாக ஐயா பவணந்தி நன்றியுரை வழங்க நிகழ்வு நிறைவுற்றது.

சமூக அக்கறை, சாதிய எதிர்ப்பு, மனிதநேயம், சுயமரியாதை, வரலாற்று ஆய்வு, மொழியியல், மொழிபெயர்ப்பு, கவிதை, சிறார் இலக்கியம், ஜென் சிந்தனை, இசை எனப் பல்வேறு தளங்களில் நிகழ்ந்த வாசிப்புகளும் கருத்துப் பகிர்வுகளும் இன்றைய சந்திப்பைச் செறிவான இலக்கிய நிகழ்வாக மாற்றின.

ஒவ்வொருவரும் தமக்கான வாசிப்பையும் பார்வையையும் பகிர்ந்துகொண்டதோடு, பிறரது வாசிப்பின் வழியாகப் புதிய தகவல்களையும் சிந்தனைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் இந்நிகழ்வு வழங்கியது.

தொடக்கத்தில் நிலவிய தொய்வு, பங்கேற்பாளர்களின் ஆர்வத்தால் மாலையில் உற்சாகமான இலக்கிய உரையாடலாக மாறியது மகிழ்ச்சியளித்தது.

வாசிப்பு என்பது தனிமனித அறிவை விரிவுபடுத்துவதோடு நின்றுவிடாமல், சமூகத்தைப் புரிந்துகொள்ளவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் உதவும் பண்பாட்டுச் செயல்பாடாகும்.

அந்த நோக்கில், இத்தகைய கூடுகைகள் வெறும் நிகழ்வுகளாகச் சுருங்கிவிடாமல், தொடர்ச்சியான வாசிப்பு இயக்கமாக மலர வேண்டும். மலரும் மணம் செழிக்கும் என நம்பலாம்.

– மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.

You might also like