பரவும் தொற்றுக்களில் கவனமாக இருப்போம்!

எல்-நினோ தட்பவெப்பத்தின் எதிர்வினையாக இன்னும் கடுமையான வெயிலும் அடிக்கின்றது, அதேசமயம் விட்டுவிட்டு கடுமையான மழையும் பெய்கிறது.
 
இந்த இரண்டு விதமான தட்பவெப்ப நிலை மாற்றத்தை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம்.
 
இதை மனதளவில் நாம் ஏற்றுக்கொண்டாலும் கூட, நமது உடல் இத்தகைய தட்பவெப்ப நிலையில் நிகழும் மாற்றத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது?
 
சற்றென்று மாறும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நமது உடலும் அதே வேகத்தில் மாறுகிறதா என்று கேள்வி எழுப்பினால், அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 
தற்போது தீபாவளியொட்டி தமிழகத்தில் உள்ள பல நகர, கிராமப் பகுதிகளில் மழை பரவலாக பெய்ததைக் காண முடிந்தது.
 
அதேசமயம் மக்கள் பெருந்திரளாக பல்வேறு ஊர்களுக்கு போய் வந்தபடி இருந்தார்கள். திரையரங்குகளில் அதிகப்படியான கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.
 
அதேசமயம் மருத்துவமனைகளிலும் அதிகப்படியான கூட்டத்தைக் காண முடிந்தது.
 
மருத்துவமனைகளில் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளான பலர் வந்தபடியே இருந்தனர்.
 
இவர்களில் சிலருக்கு தொடர்ச்சியான காய்ச்சல். காய்ச்சல் என்றால் சாதாரண வைரல் காய்ச்சல் போல இல்லாமல், ஏறத்தாழ 10 நாட்கள் வரை கடுமையான உடல்வலி, தலைவலி இவற்றுடன் கூடிய கடுமையான காய்ச்சல் தென்பட்ட நிலையில் பலரைப் பார்க்க முடிந்தது.
 
இத்தகைய பாதிப்புகளுக்கு குழந்தைகளும் ஆளாகி இருப்பதுதான், ஒரு பெருஞ்சிக்கல்.
 
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய ஒரு நீண்ட நாள் காய்ச்சல் பரவலாக இருப்பது பல மருத்துவர்களுக்கு தெரிய வந்தாலும், தமிழகத்தில் உள்ள சுகாதாரத்துறை இது குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.
 
இவ்வளவு போக்குவரத்து அதிகப்பட்ட நேரத்திலும் கூட மக்கள் எப்படிப்பட்ட பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை அரசு வலியுறுத்தவில்லை.
 
ஆனாலும், இன்றுவரை இத்தகைய தொற்றுக்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் எதார்த்தம்.
 
இந்த நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதே விதமான பெரும் தொற்று சம்பந்தமான ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
 
அண்மையில் ரஷ்யாவில் பிளேக் நோய் குறித்தும் நோய்க்கிருமிகள் குறித்தும் ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த ஒரு ஆய்வாளரான பெண்மணி, கிருமிகள் அடங்கிய குடுவை கீழே விழுந்து உடைந்ததையடுத்து 28 வயதான அந்தப் பெண்மணி உடனே இறந்திருக்கிறார்.
 
அந்த ஆய்வுக்கூடமே பரபரப்புக்கு உள்ளாக இருக்கிறது.
 
அங்கிருந்த ஏறத்தாழ 200 பேருக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அதற்கான மருத்துவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்தவிதமான பிளேக் நோய் உலக நாடுகளில் முன்பு பரவலாகப் பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
 
இப்படி அடுத்தடுத்து பெரிய அளவில் பிளேக் நோய் தாக்கப்பட்ட நிகழ்வு இந்தியாவிலும் நடந்தபோது, இங்கும் அத்தகைய பெரும் பாதிப்பு உருவாகி பெரும் உயிரிழப்பும் நடந்திருக்கிறது.
 
தற்போது மீண்டும் ரஷ்யாவில், இத்தகைய பிளேக் நோய்க்கான ஆய்வுக் கூடத்தில் ஒருவர் இறந்து பலர் பாதிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளில் உள்ள மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
 
மீண்டும் இத்தகைய பிளேக் நோய் பரவ ஆரம்பித்தால், என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறது.
 
ஏற்கனவே வெவ்வேறு கொரோனா பெருந்தொற்றை சந்தித்து நாம் பலரை இழக்க வேண்டி இருந்தது.
 
உலக நாடுகளும் அதேவிதமான உயிரிழப்புகளை சந்தித்தன. தற்போது மீண்டும் பிளேக் நோய் என்ற பெரும் தொற்று ரஷ்யாவில் உருவாகி அதன் பாதிப்பு துவங்கி இருப்பது ஒரு எச்சரிக்கைதான்.
 
இத்தகைய எச்சரிக்கைதான் ரஷ்யாவில் நடந்த அந்த சம்பவம் மீண்டும் ரஷ்யாவிலும் மற்ற நாடுகளுக்கும் பரவாத ஒரு சூழ்நிலையை பல நாடுகளில் உள்ள சுகாதாரத்துறைதான் தகுந்த அளவில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
 
ஏற்கனவே ஒரு தடவை நாம் கொரோனாவை அனுபவங்களை கற்றுக் கொடுத்த பாடங்களே நமக்கு போதும்.
 
– யூகி
You might also like