சேலத்தில் மாலை தினசரியில் வேலை பார்த்தபோது, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை அடிக்கடி பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
திருமண விழா, பொதுக்கூட்டம் என நான்கு மாதத்துக்கு ஒருமுறை அவர் சேலம் வந்து விடுவார்.
‘சேலத்து சிங்கம்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட வீரபாண்டியார் (வீரபாண்டி ஆறுமுகம்) அப்போது சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்தார்.
கருணாநிதியின் முரட்டு பக்தர். அவரது பேச்சை தட்டமுடியாமல் கருணாநிதி, சேலம் நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக தேதிகள் ஒதுக்கி விடுவார்.
சென்னையில் இருந்து பெரும்பாலும் புளுமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் கலைஞரின் சேலம் பயணம் இருக்கும்.
அவரது வருகையைப் பத்திரிகையில் பதிவு செய்ய, சூரமங்கலம் ரயில் நிலையத்துக்கு காலை 5 மணிக்கெல்லாம் நான் ஆஜராகி விடுவேன்.
அப்போது கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவர். ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோகுலம் ஓட்டலில்தான் அவர் தங்குவது வழக்கம்.
அவரது வருகையை அலுலகத்தில் எழுதிக் கொடுத்து விட்டு, காலை 10 மணிக்கு கோகுலம் ஓட்டலுக்குப் போய் விடுவேன்.
குளித்து முடித்து செய்தியாளர் சந்திப்புக்குத் தயாராகி விடுவார் கருணாநிதி.
நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் முன்பாக அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதை சேலத்தில் வழக்கமாக வைத்திருந்தார்.
அப்போது காட்சி ஊடகங்கள் கிடையாது. அச்சு ஊடகங்கள் மட்டுமே. பெரும்பாலான பத்திரிகை நிருபர்கள் அவரது பேட்டிக்கு வருவதில்லை.
முரசொலி நிருபர் பஷீர் கருணாநிதியுடன் வந்திருப்பார். திமுக ஆதரவு பத்திரிகைகளில் இருந்து 2 பேர் மற்றும் நான் ஆகிய நான்கு பேர் மட்டுமே கருணாநிதியின் பத்திரிகையாளர் பங்கேற்கும் ‘நிரந்தர ’ ஆட்கள்.
எப்போதாவது ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் நிருபர் வருவார்.
முரசொலி நிருபரோ, திமுக ஆதரவு தினசரிகளின் நிருபர்களோ, அவரிடம் கேள்வி கேட்பதில்லை. நான் ஒருத்தன் மட்டுமே கேள்வி கேட்பதுண்டு.
பேட்டியைப் பத்திரிகையாளர்கள் எழுதுவதற்கு வசதியாக அவர், நிதானமாக, இடைவெளி விட்டு பதில் சொல்வார் என சொல்வதுண்டு.
அதில் ஒரு சூட்சுமம் இருந்தது.
தனது பேட்டியை முரசொலி நிருபர் முழுமையாக எழுதி விட்டாரா? என பார்த்து, அந்த நிருபர் எழுதி முடித்த பின்னரே பதில்களை கருணாநிதி தொடர்வார்.
திமுகவுக்கு சாதகமான கேள்விகளைக் கேட்டால் மட்டுமே அவரிடம் இருந்து மளமளவென பதில்கள் கொட்டும். சுவாரஸ்யம் இருக்கும்.
கருணாநிதியின் ‘பிரஸ்மீட்’டுக்கு வழக்கமாக வராத மூத்த செய்தியாளர் ஒரு நாள், வந்திருந்தார். ஓட்டலின் வரவேற்பு அறையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.
சொற்பமான நிருபர்கள் மட்டுமே வருவதால் பல நேரங்களில் கருணாநிதி தங்கி இருக்கும் அறையிலேயே பேட்டி அளிப்பார்.
‘உங்களைப் பற்றி ஜெயலலிதா இப்படி விமர்சனம் செய்திருக்காங்களே?’ என மூத்த நிருபர் கேட்டதும், கலைஞருக்கு கடும் கோபம்.
ஜெயலலிதா அப்போது, அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். பேட்டி ஆரம்பித்து ஓரிரு நிமிடங்கள் மட்டுமே ஆகி இருந்தன.
துண்டை உதறித் தோளில் போட்டுவிட்டு, தனது அறையை நோக்கி நடையைக் கட்டினார் கலைஞர்.
ஜெயலலிதாவின் விமர்சனத்துக்கு அப்போது பதில் அளிக்க விரும்பாத கலைஞர், தனது வாழ்நாளின் கடைசி காலங்களில் அவரோடுதான் அரசியல் நடத்த வேண்டியிருந்தது என்பது காலத்தின் கோலம் போலும்.
நான்கு நிருபர்களுக்கு நான்கு சுவற்றுக்குள் பேட்டி அளித்த கலைஞர், அடுத்த 15 -20 ஆண்டுகளில் நாற்பது, ஐம்பது நிருபர்கள் புடைசூழ பேட்டி அளித்ததை நினைத்து பார்க்கிறேன்.
செய்திகளை அறிவதற்கான பிரதான களமாக காட்சி ஊடகங்கள் மாறிய பின், காட்சிகளும் மாறிவிட்டன.
நான் முதன் முதலாக கருணாநிதியின் உரையைக் கேட்ட நிகழ்வுடன் கட்டுரையை முடிக்கிறேன்.
அப்போது நான் அம்பை கலைக் கல்லூரி மாணவன். கலைஞர் அம்பை பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தார்.
மாடிக் கட்டிடங்களில் நின்று அவரது பேச்சை சிலர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து, “உயரமான இடத்தில் உள்ளோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – உங்களை மட்டுமல்ல – நாட்டில் உயரமான இடத்தில் இருப்போருக்கும் சேர்த்தே இந்த அறிவுரை” என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது.
– பாப்பாங்குளம் பாரதி.
