சம்பிரதாயா இதழில் 1989-ல் எடுக்கப்பட்ட நேர்காணல் :
சங்கீதம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
சங்கீத கலாநிதி எம்.எல்.வசந்தகுமாரி பதில் :
எனக்குச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஏனெனில், சொல்லிக் கொடுக்கும்போது நான் செழுமையடைகிறேன்.
சொல்லிக் கொடுக்கும் போது நமக்கும நாமே அங்கு குருவாகிறோம்.
ஒரு சங்கதியை சொல்லிக்கொடுக்கும் போதுதான் அது சரியாக இருக்கிறதா, ராகத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க முடிகிறது.
நாமே குருவாகவும், சிஷ்யனாகவும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
உண்மையாய் நாம் சொல்லிக் கொடுக்கும்போது, தவறைத்தான் முதலில் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதை விலக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். அதைச் செய்தோமெனில், நல்லவை தானாக வந்துவிடும்.
லட்சியம், லட்சணம் – இரண்டும் சேரும் போதுதான் பூர்ணத்துவத்தை நோக்கிப் போக முடியும்.
சங்கீதத்தில் பூர்ணத்துவம் என்பதை அடையவே முடியாது என்பது வேறு விஷயம். அது பெரிய கடல்.
எல்லையை நோக்கிப் போகிறோம். எல்லையை அடையாவிட்டாலும் நம் உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ப நமக்கு சில சிப்பிகள் கிடைக்கின்றன.
கிடைக்கும் முத்துகளில் சிலது சிறியதாக இருக்கலாம். சிலது பெரியதாக இருக்கலாம். சிலவற்றில் ஒன்றுமே இல்லாமல்கூடப் போகலாம்.
அது அவரவருக்கு விதித்தது. ’சீதாவர சங்கீத ஞானமு – தாத வ்ராயவலெரா’ என்று தியாகராஜர் சொன்னது போலத்தான்.
ஒரு கீர்த்தனையை குருமுகமாகப் பாடம் செய்தால், அதை முடிந்தவரை மாற்றாமல் பாட வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குப் புதியதாகச் செய்ய எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன.
கீர்த்தனையை மாற்றித்தான் என் சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டுமென்று இல்லை.
அப்படி மாற்றாமல் இருப்பது ஒருவிதத்தில் குருவின் மேலுள்ள மதிப்பில் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
இந்த வித்தைக்கு நிச்சயம் குருவருள் தேவை. ஒவ்வொரு நாளும் கச்சேரியில் தவறு வர எத்தனையோ சாத்தியங்கள் உண்டு.
நாம் ஒன்று நினைப்போம். பாட்டில் வெளிவருவது முற்றிலும் வெறொன்றாக இருந்துவிடக்கூடும்.
இன்று எவ்வளவோ வசதிகள் வந்திருக்கலாம். அன்றைய நாள் போல குருகுலவாசம் செய்வதென்பது முடியாமல் போகலாம்.
ஆனாலும் ஒரு குருமுகமாகக் கற்பது என்பது மிகவும் அவசியம். உதாரணமாக கர்நாடிக் காலேஜை எடுத்துக் கொள்வோம்.
அங்கும் டி.எம்.டி, கே.வி.என் போன்ற பெரிய கலைஞர்கள்தான் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.
கல்லூரியில் போய் ஒரு பெரிய வித்வானின் மேற்பார்வையில் பட்டயம் வாங்கினாலும், ஒரு மருத்துவர் படிப்புக்குப் பின் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்ப்பது போலவோ,
வக்கீலுக்குப் படித்தவுடன் ஜூனியராக வேலை பார்ப்பது போலவோ, தங்கள் மனதுக்குப்படித்த, தங்கள் சங்கீதத்துக்கு ஒத்து வரும்படியான குருவைத் தேடி அவரிடமும் தனிப்பட்ட முறையில் கற்பது மிகவும் அவசியம்.
மாணவர்கள் எப்படிக் குரலை வளப்படுத்துவது, எந்த ஸ்ருதியில் பாடுவது என்பது பற்றி சொல்ல முடியுமா?
எம்.எல்.வி பதில் :
குரல் என்பது அவரவர்க்கு அமைந்துதான். அனாலும் பாடும் போது விகாரமாக இல்லாமல் வாயைத் திறந்து பாட வேண்டும். தொண்டையிலிருந்து குரல் கொடுத்துப் பாடிப் பழக வேண்டும்.
அதற்காக சக்திக்கு மீறி கத்த வேண்டும் என்றுமில்லை. குரலை அழுத்திக் கொள்ளாமல், இயற்கையாகப் பாட வேண்டும்.
ஸ்ருதியும் அப்படித்தான். மற்றவர்கள் குறைவாக நினைப்பார்களே என்பதற்காக ஸ்ருதியை எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
அதற்காக ரொம்பவும் குறைத்துக் கொள்ளவும் வேண்டாம். பெண்களுக்கு நாலு/நாலரைக்கு குறைவாக ஸ்ருதி இருந்தால் நன்றாக இருக்காது. ஆறு கட்டைக்கு மேல் பாடினால் பக்கவாத்தியக்காரர்களுக்கு சிரமம்.
ஹிந்துஸ்தானி கலைஞர்கள் ஆறரை ஏழு என்று கூட வைத்துக் கொள்ளலாம். பொதுவாகவே அவர்களுக்கு கட்டுப்பாடுகள் குறைவு.
“இந்துஸ்தானியில் இரண்டு தம்புராவை சேர்த்துக் கொண்டு ஸ்ருதியில் சேர்வது போல ஏன் நம்மால் சேர முடிவதில்லை?” என்று என் பாட்டைக் குறிப்பிட்டு சமீபத்தில் எழுதியிருந்தார்கள்.
நான் விரிபோணி வர்ணம் பாடுவதற்கு முன்னால் அரை மணி நேரம் மந்திர ஸ்தாயியில் பைரவி ராகம் பாடினால் இந்த விமர்சகர்கள் ஒப்புக்கொள்வார்களா? ஹிந்துஸ்தானியில் அப்படித்தானே பாடுகிறார்கள்?
ஸ்ருதி சுத்தம் வர மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
எம்.எல்.வி பதில் :
நம் இசையில் கமகங்களுக்கு முக்கிய இடமுண்டு என்றாலும் சுத்த ஸ்வர சாதகம் மிகவும் அவசியம்.
மூச்சை அடக்குவதற்கும், சாரீரத்தில் நடுக்கமில்லாமல் இருப்பதற்கும் சுத்த ஸ்வர சாதகம்தான் உதவும்.
அகார சாதகமும் மிகவும் அவசியம். ராகம் பாடும் போது பெரும்பாலும் அகாரத்தில்தான் பாட வேண்டும்.
இகாரம், உகாரம் எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாமே தவிர அதையே பிரதானமாகக் கொள்ளக்கூடாது.
அதைத்தான் ராமானுஜ ஐயங்கார் செய்தார். அவர்பாட்டில் எந்தவிதமான அசிங்கமோ, அநாவசியமே இருக்காது. இதயெல்லாம்தான் நாம் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
வாய்ப்பாட்டு பாடுபவர்கள் வேறெதாவது வாத்தியமும் கற்றுக் கொண்டால் அது அவர்கள் பாட்டுக்கு உதவியாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?
எம்.எல்.வி பதில் :
எனக்கு சிறு வயதிலிருந்தே கச்சேரி செய்ய வேண்டிய சூழலிருந்ததால் அப்படி எந்த வாத்தியமும் கற்க முடியவில்லை. அப்படி கற்றால் உபயோகமாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது.
பாட்டு கற்றுக் கொள்ள வேண்டுமென்று யார் வந்தாலும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
அல்லது அவர்களை பரிட்சை செய்து பார்த்து, அவர்களுக்கு பாட வருமென்று தெரிந்தபின் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
வராது என்று தெரிந்த பின்னும், என்னிடமும் நிறைய சிஷ்யர்கள் இருக்கிறார்கள் என்று காண்பிப்பதற்காக நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுப்பதில் அர்த்தமில்லை.
சமீபத்தில் எனக்கு ஒரு சங்கடம் வந்துவிட்டது. மலேஷிய அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் எனக்கு ஒரு தொகையைக் கொடுத்து ஒரு பெண்ணிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்கள்.
நான் சிங்கப்பூர் போயிருந்த போது அந்தப் பெண்ணை பாடச் சொன்னேன்.
அன்று ஒரு கீர்த்தனையை நன்றாகப்பாடிவிட்டாள். அதை நம்பி நானும் சொல்லித்தர ஒப்புக்கொண்டுவிட்டேன்.
இப்போது பார்த்தால் ‘ஸா-பா’ கூட அவளுக்குப் புரியவில்லை. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் பொதுவாக சொல்லிக் கொடுப்பதற்கு பணம் வாங்கிக் கொள்வது கிடையாது. அவர்கள் புடவை மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுத்தாலும், நானும் அவர்களுக்கு பதிலுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவேன்.
கூடப் பாடுவதற்கு அவர்களை வெளியூருக்கு அழைத்துச் சென்றால் அவர்களுக்கு சேர்த்து சன்மானம் வாங்கிக் கொடுத்துவிடுவேன்.
அப்படிச் செய்தால் கூடப்பாட அவர்களுக்கும் ஆர்வமாகவும் இருக்கும். பொதுமக்களுக்கும் இப்படி ஒரு பாடகி தயாராகிறார் என்றும் தெரிய வருமில்லையா?
ஓரளவுக்கு கீர்த்தனைகளெல்லாம் புரிந்து பாடக்கூடிய அளவில் இருந்தால்தான் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது ஆழ்ந்த தேர்ச்சிக்குப் பொருந்தும். ஆரம்ப பாடத்துக்கு வரும் குழந்தைகளுக்கு என்ன செய்வது?
எம்.எல்.வி பதில் :
அவர்களுக்கும் ஓரளவு பார்க்கலாம். பொதுவான பாட்டுகள் பல இருக்கின்றனவே.
சினிமா பாடல்கள் கூட பாடச் சொல்லிக் கேட்டு, அதிலிருந்து அந்தக் குழந்தைக்கு வருமா என்று ஓரளவு நிர்ணயிக்கலாம்.
இயற்கையில் பாட்டு வராது என்கிற குழந்தையை வைத்துக் கட்டாயமாய் சொல்லித்தர வேண்டியதில்லை.
பணத்துக்காக செய்தால் அது மாதிரி சமரசங்கள் செய்ய நேர்ந்துவிடும். அதனால்தான் நான் சொல்லிக்கொடுக்க பணம் வாங்குவதில்லை.
லய சம்பந்தமான விஷயங்களை எப்படிச் சொல்லிக் கொடுப்பது?
எம்.எல்.வி பதில் :
சிலருக்கு இயற்கையாகவே அது அமைந்துவிடுகிறது. மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மாதிரி கலைஞர்களை அந்த வகையில் சேர்க்கலாம்.
எல்லாம் எவ்வளவு பெரிய லய விற்பன்னரை பக்கவாத்தியமாகப் போட்டாலும் அவனை அசைக்க முடியாது.
என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் அனுபவத்தினால் கற்றுக் கொண்டவர்கள். ஆரம்ப நாட்களில் தாளம் எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
நாளடையில் என் பலவீனத்தை உணர்ந்து அதை சரி செய்துவிட்டேன். இப்போது பரவாயில்லை. இத்தனை வருஷம் பாடி சரி செய்வதில் என்ன பிரமாதம்?
நமக்கு இது வரவில்லை என்கிற புரிதலாவது இருக்க வேண்டும்.
****
நேர்காணல் எடுத்தவர்: விதுஷி பத்மாசினி (28 Aug 1989)
