மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு டூப் போட்ட ஒருவர் தன்னுடைய அனுபவம் ஒன்றை இப்படிப் பகிர்ந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் நான் டூப்பாக பணியாற்றி இருக்கிறேன். ஒரு சமயம் சென்னைக்கு அருகில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்க அட்வான்ஸாக ஒரு தொகையைக் கொடுத்திருந்தேன்.
மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்கச் சொல்லி அந்த நிலத்துக்குச் சொந்தக்கார பெண்மணி வற்புறுத்தி வந்தார்.
குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நான் கொடுக்கவில்லை என்றால், அட்வான்ஸ் பணமும் திருப்பி அளிக்கப்படாது என்றும் எச்சரித்திருந்தார்.
மீதமுள்ள பணத்தைக் கட்டுவதற்காக திரைத்துறையில் இருந்த பல்வேறு நபர்களிடம் கேட்டுப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை.
சிலர் என்னை, நான் டூப் போட்டிருக்கிற மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் சொன்னார்கள்.
சென்னையில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் அவரது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
அங்கு போனபோது அவருடைய உதவியாளர் என்னைப் பார்த்து வரவேற்று எம்.ஜி.ஆர் அவர்களுக்கு முன்பு கொண்டுபோய் நிறுத்தினார்.
என்னவென்று விசாரித்த எம்.ஜி.ஆரிடம் எனது பிரச்சனையைச் சொல்லி பணம் கொடுக்க வேண்டிய அவசியத்தைச் சொன்னேன்.
தன்னுடைய உதவியாளரை அழைத்து, பெட்டியை எடுத்துவரச் சொன்னார்.
அந்தப் பெட்டியில் இருந்த நூறு ரூபாய் நோட்டுக் கட்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை பிரித்தெடுத்து, என் கையில் கொடுத்து, நிலத்தை முடிக்கச் சொன்னார்.
சைக்கிளில் அங்கு சென்றிருந்த நான் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மிச்சமுள்ள பணத்தையும் சேகரித்து அந்த நிலத்தை முடித்து, நிலப்பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் காண்பிக்க அதே படப்பிடிப்புத் தளத்திற்கு போனேன்.
போனதும் என்னை விசாரித்த எம்.ஜி.ஆர் நிலப்பத்திரத்தைப் பார்த்ததும் பாராட்டி அனுப்பி வைத்தார்.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் எனக்குக் கொடுத்த தொகை எனக்குக் கிடைத்தபோது அதை வைத்துக் கொண்டு மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்கப் போனேன்.
அவரிடம்போய் பணத்தைக் கொடுத்ததும் அதை வாங்க மறுத்து சத்தம்போட்ட எம்.ஜி.ஆர், என்னுடைய இரு பெண்களுக்கும் நகைகளை வாங்கும்படி சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன்.
அப்படியே அவர் காலில் விழுந்தபோது, எழுப்பி என்னை நிற்க வைத்துப் பேசி மதிப்புடன் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
தன்னுடைய டூப்பாக நடித்த ஒரு நடிகருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கொடுத்த மதிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கிறது பாருங்கள்.”
#எம்ஜிஆர் #மக்கள்திலகம் #எம்ஜிஆர்மனிதநேயம் #எம்ஜிஆர்வள்ளல் #டூப்நடிகர் #எம்ஜிஆர்வாழ்க்கை #தமிழ்சினிமா #மனிதநேயம் #MGR #MGRStories #MGRKindness #MGRBiography #PuratchiThalaivar #MakkalThilagam #TamilCinema #TamilFilmHistory #GoldenHeart #InspiringStories #Kindness #LegendaryActor
