ஒருவரால் ஒன்பது உயிர்களைக் காப்பாற்ற முடியும்!

இவ்வுலகில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவும் உன்னத செயல்பாட்டையே தானம் என்கிறோம்.

தமிழர் பண்பாட்டிலும் உலகின் அனைத்து சமயங்களிலும் தானத்திற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை பசியைப் போக்கும் அன்னதானத்தைக் காட்டிலும் தற்காலிக தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள் தானத்தைக் காட்டிலும் மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, மறுபிறவியையே பரிசாக அளிக்கும் உடல் உறுப்பு தானம் பன்மடங்கு உயர்ந்தது.

சுயநலமற்ற மனிதநேயத்தின் உச்சகட்ட வெளிப்பாடான உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை இதில் அறிந்து கொள்வோம்.

ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போதோ அல்லது மறைந்தபிறகோ பழுதடைந்த உறுப்புகளால் அவதிப்படும் மற்றவருக்கு தனது ஆரோக்கியமான உறுப்புகளை தானமாக வழங்குவதே உடல் உறுப்பு தானம் எனப்படுகிறது.

இதில் இரண்டு வகைகள் உள்ளன.

முதலாவது, உயிரோடு இருக்கும் நபர் தனது உடல் உறுப்பை தானமாக வழங்குதல்.

தனது ஒரு சிறுநீரகம், கல்லீரல், கணையம், சிறுகுடல், நுரையீரல் ஆகியவற்றின் ஒரு பகுதியைப் பிறருக்கு கொடுக்க முடியும்.

தாய், தந்தை, உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு தானம் செய்ய இதற்கென்றே பிரத்தியேக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தானம் செய்பவருக்கும் பெறுபவருக்குமான உறவை ஆவணங்கள் மூலம் உறுதி செய்தால் போதுமானது. தேவைப்பட்டால் DNA பரிசோதனை செய்யப்படும்.

ஆனால், ரத்த தொடர்பில்லாத பிறருக்கு வழங்குவதில் சட்ட விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

குடும்ப நண்பர்கள், ஒன்றாக படித்த தோழர்கள், தூரத்து உறவினர்கள், வேலையில் உடன் பணியாற்றுபவர்கள், விரும்பும் பிரபலங்கள் என இத்தகையோருக்கு தானம் செய்ய முற்படும்போது நம் நிலையினை தெளிவுபடுத்த வேண்டும்.

தானம் செய்பவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான நீண்ட கால பழக்கம் மற்றும் பாசத்தை நிரூபிக்க பழைய புகைப்படங்கள், சாட்சியங்கள் மற்றும் இருவரின் நிதி நிலை குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, மாநில அங்கீகார குழுவானது தானம் செய்பவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நேர்காணல் நடத்தி, தானம் முழு மனதுடன் வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்த பின்பே அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குகிறது.

உயிருடன் இருக்கும்போது உறுப்பு தானம் செய்பவர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் சுயமாக முடிவெடுக்கும் திறன் பெற்றவராகவும் இருத்தல் அவசியம்.

இரண்டாவது வகையில், விபத்தில் அடிபட்டு மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் செய்தல்.

இதற்கு குடும்பத்தினரின் ஒப்புதல் மிகவும் முக்கியமாகிறது. மூளையானது பழுதாகிவிட்ட நிலையில், இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற உறுப்புகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பிறருக்கு அளிக்க முடியும்.

நோயாளிகளின் முன்னுரிமை அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபர் தேர்வு செய்யப்படுவர்.

தானம் வழங்குபவரின் வயதை பொறுத்து யாருக்கு என்ன உறுப்புகள் தேவைப்படுகின்றன என ஆய்வு செய்யப்பட்டு அந்த வயதை ஒத்தவர்களுக்கே மாற்று உறுப்பு பொருத்தப்படுகிறது.

இதயம், இரண்டு நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கணையம், சிறுகுடல், தோல், எலும்பு, கண்கள் ஆகியவற்றை தானமாக பெற முடியும்.

மரணித்த ஒருவரின் உறுப்பு தானம் மூலம் குறைந்தது ஒன்பது உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

இதனைப் போன்றே உடலில் உள்ள திசுக்களை தானம் செய்வதன் மூலம் பலரின் பார்வையையும் நடமாட்டத்தையும் மீட்டெடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உறுப்பு பற்றாக்குறையால் உயிரிழக்கின்றனர்.

ஆனால், தேவைப்படும் உறுப்புகளில் மிக குறைந்த சதவீதமே நோயாளிகளுக்கு கிடைக்கிறது. இதற்கு உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்கள் மக்கள் மத்தியில் நிலவுவதே காரணமாகும்.

பலருக்கு, மரணத்திற்கு பின் உடல் சிதைக்கப்படக்கூடாது என்று எண்ணம் உள்ளது.

ஆனால், அனைத்து மதங்களும் உயிரை காப்பாற்றுவதையே உயர்ந்த அறமாக போற்றுகின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், வயதாகி விட்டதால் தானம் செய்ய முடியாது என்ற தவறான புரிதலும் உள்ளது. ஆரோக்கியமான எந்த ஒரு வயதினரும் உறுப்புகளை தானம் செய்ய தகுதி உடையவர்களே ஆவர்.

இவை தவிர, உறுப்பு தானம் செய்ய சம்மதித்தால் விபத்து அல்லது சிகிச்சையின் போது மருத்துவர்கள் உயிரை காப்பாற்ற முயற்சி செய்ய மாட்டார்கள் என்பன போன்ற அச்சமும் முற்றிலும் தவறானது.

நோயாளிகளின் உயிரை காப்பதே மருத்துவரின் முதல் கடமை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்திய உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம், உன்னத தானம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் இதற்கான உறுதிமொழியை ஏற்க முன் வர வேண்டும்.

S. வாணி

You might also like