பெருந்தலைவர் காமராஜரைப் போலவே எளிமையான தலைவர் கக்கன். காமராஜர் அமைச்சரவையில் உள்துறை, பொதுப்பணித்துறை போன்ற வளமான இலாகாக்களை வைத்திருந்தார். ஆனால் அவர் வளமாக வாழவில்லை.
அவரது வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம்.
கக்கன் டைரியில் இருந்து சில குறிப்புகள்:
அப்போது கக்கன் உள்துறை அமைச்சர். அவரது உடன் பிறந்த தம்பி விசுவநாதன் தலைச் சிறந்த தடகள வீரர். தகுதியின் அடிப்படையில் அவருக்கு போலீஸ் துறையில் பணி கிடைத்தது.
காவல்துறை என்பது, உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும். கக்கன் பொறப்பில் அப்போது காவல்துறை இருந்தது.
அண்ணனைப் பார்த்து, விசுவநாதன் ‘அண்ணா.. நான் காவல்துறையில் சேர்ந்துவிட்டேன் – எனது திறமையின் பேரில் இந்த வேலை கிடைத்துள்ளது” என்று குஷியாகச் சொன்னார்.
ஆனால் கக்கன் மகிழ்ச்சி அடையவில்லை.
“தம்பி.. நீ தகுதியின் அடிப்படையில்தான் இந்த வேலையில் சேர்ந்துள்ளாய்.. நீ நேர்மையாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும்,, நான் பரிந்துரை செய்து நீ, போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டதாகப் பேசுவார்கள்.. எனவே வேறு வேலைக்கு முயற்சி செய்” என்று சொல்ல, விசுவநாதன் அழுதே விட்டார்.
கக்கன் அத்துடன் நிற்கவில்லை.
அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக (இப்போது உள்ள டிஜிபி பதவிக்கு நிகரானது) இருந்த அருளிடம் ‘இந்தத் தகவலைச் சொல்லி, விசுவ நாதனுக்கான பணி உத்தரவை ரத்து செய்ய வைத்தார், தியாக சீலர் கக்கன்.
வசித்தது, வாடகை வீடு..
இப்போது சாதாரண கவுன்சிலர்களே, ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் கார், பங்களா, வங்கியில் கோடிகளில் இருப்பு என உயர்ந்து விடுகிறார்கள்.
ஆனால் கக்கன்?
1962-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கக்கன், தனது சொந்த தொகுதியான மேலூரில் (மதுரை மாவட்டம்) போட்டியிட்டார்.
திமுக வேட்பாளரிடம் அவர் தோற்றுப்போனார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். சாமான்ய மக்களுடன் பேருந்துகளில் தான் பயணித்தார்.
10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் சொந்த வீடு கட்டவில்லை. பதவி இழந்த நிலையில் வாடகை வீட்டில்தான் வசித்தார். இது குறித்த செய்திகள் வந்தபோது மக்கள் அதிர்ந்து போனார்கள்.
கக்கன் மீது நேசம் கொண்ட சில நல்ல உள்ளங்கள் அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன் வந்தனர்.
‘வீடு தேவை இல்லை.. எனது வசதிக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்து கொள்கிறேன் ‘இதில் எனக்கொன்றும் கஷ்டமோ, துன்பமோ இல்லை’ என சொல்லி கடந்து போனார், நேர்மையின் ஊற்றுக்கண்.
கக்கனை பார்த்து கண்ணீர் விட்ட எம்.ஜி.ஆர்..,,
1980 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள். அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மதுரையில் நடந்த மே தின விழாவுக்கு வந்திருந்தார்.
அந்த நேரத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை முன்னாள் மேயர் முத்து, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
அவரைப் பார்த்துவிட்டு திரும்பிய எம்.ஜி.ஆரிடம், அமைச்சராக இருந்த காளிமுத்து ஒரு செய்தியைச் சொன்னார்.
எம்.ஜி.ஆர். உறைந்து போனார். மஞ்சள்முகம் கறுத்துப் போனது.
“அண்ணே.. முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாதமாக இங்கேதான் அட்மிட் ஆகி சிகிச்சையில் இருக்கார்” என்பதே காளிமுத்து சொன்ன செய்தி.
‘’இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? எந்த வார்டில் ஐயா இருக்கிறார்?” என கேட்க, யாருக்கும் தெரியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு பதில் சொல்ல தெரியாமல் உடன் இருந்தோர் விழி பிதுங்கி நின்றனர். அப்போது அங்கு வந்த மருத்துவமனை துப்புரவு தொழிலாளி, “ஐயா.. அவர் 24 ஆம் வார்டில் இருக்கிறார்” என கக்கன் சிகிச்சை பெறும் வார்டை காட்டினார்.
அங்கு சென்ற எம்.ஜி.ஆருக்கு பெரும் அதிர்ச்சி.
10 ஆண்டு காலம் அதிகார நாற்காலியில் இருந்து கோலோச்சிய கக்கன், சாதாரண பொது வார்டில், சின்ன அறையில், தரையில் படுத்திருந்தார்.
அந்த கோலத்தைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு கண்கள் பொங்கின. வந்திருப்பது முதல்மைச்சர் என்பதை உணர்ந்து கொள்ள கக்கனுக்கு சில நொடிகள் ஆனது.
கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டார், எம்.ஜி.ஆர். அப்போது கக்கனும் கண் கலங்கினார்.
“உங்களுக்கு என்ன வேண்டும்?” – இது எம்.ஜி.ஆர்.
“ஒன்றும் வேண்டாம்“ நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி. – இது கக்கன்.
கக்கன் வாய் விட்டு கேட்கவில்லை என்றாலும் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த இடத்திலேயே முடிவு செய்துவிட்டார், எம்.ஜி.ஆர்.
சென்னை திரும்பியதும் ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் – பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்’ என கக்கனை மனதில் வைத்து அதிரடி ஆணைகளைப் பிறப்பித்தார், புரட்சித்தலைவர்.
கூடவே கக்கனுக்கு சிறப்பு ஓய்வு ஊதியம் வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன்பின் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய படுக்கை ஒன்றையும் வழங்கினார், எம்.ஜி.ஆர்.
அனைத்து சிகிச்சைகள் அளித்தாலும், நினைவு திரும்பாமலேயே கக்கன் 1981-ம் ஆண்டு டிசம்பர் 23- ம் தேதி இயற்கை எய்தினார்
– பாப்பாங்குளம் பாரதி.
