முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், அவரது பெயரில் நலத்திட்டங்களைச் செய்வது, அவரது நினைவாக மரக்கன்றுகளை நடுவது என வாழ்ந்து வந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு நடிகர் விவேக்கின் மனைவி திருமதி. அருள்செல்வி அந்தப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாளையொட்டி (15.10.2026), சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்ட மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் திருமதி. அருள்செல்வி விவேக் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பசுமை விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மறைந்த பிரபல நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டாக்டர் விவேக் அவர்களின் வழியில், மொத்தம் 500 மரக்கன்றுகள் நட்டப்பட்டன.
நடப்பட்ட 500 மரக்கன்றுகளையும் முறையாக பராமரித்து, அவை முழுமையாக வளர்வதை உறுதிசெய்ய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நோயாளிகளுக்கு தூய்மையான காற்றும், அமைதியான சூழலும் கிடைக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் பங்கேற்றனர்.
அதோடு, எம்.ஜி.ஆர் நகர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர்.
இவ்விழா பலதரப்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்போடு நடைபெற்றது.
கிரீன் கலாம் அமைப்பு :
திருமதி. அருள்செல்வி விவேக் தலைமையில், தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற விவேக் அவர்களின் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி (GCC): நகர்ப்புற பசுமையை அதிகரிக்கும் நோக்கில் தேவையான அனைத்து கள உதவிகளையும் வழங்கியது.
நிகழ்வின்போது திருமதி. அருள்செல்வி விவேக் பேசியவை:
“டாக்டர் கலாம் ஐயா அவர்களின் பசுமைப் புரட்சியைத் தன் மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர் என் கணவர் விவேக்.
இளைஞர்களும் மாணவர்களும் மரங்கள் நடுவதன் மூலமே நாட்டின் சுற்றுச்சூழல் வளம் பெறும்.
இன்று அரசுப் பள்ளி மாணவர்களுடனும், மருத்துவர்களுடனும் இணைந்து 500 மரக்கன்றுகளை நட்டதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
