நூலகத்துறை குளறுபடிகளுக்கு யார் காரணம்?

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெருமளவில் பரப்பப்பட்டு கொண்டிருக்கும் ஒரு விஷயம் கோவை மாநகரில் பெரியார் அறிவுலகம் என்கிற பெயரில் உருவான நூலகம் தொடர்பான பிரச்சனைதான்.
 
அந்த நூலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களின் தரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதிர்ச்சியடைந்த எழுத்தாளரான பெருமாள் முருகன் அது பற்றி ஒரு பதிவை வெளியிட்ட பிறகு அந்த பிரச்சனை பெருமளவில் ஊடகங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
 
இதில், இந்த நூலகத்தைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய் மீது திமுக விமர்சனத்தை வைத்தாலும், மிகச் சாதாரண ஒரு புரிதலுள்ள எந்த நபருக்கும் இதில் திமுக அரசின் பங்கு எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது தெரியும்.
 
தற்போது கைதாகியிருக்கிற முன்னாள் கல்வித்துறை அமைச்சரான பொய்யாமொழி அவர்கள் பொறுப்பில்தான் நூலகத்துறை இருந்தது, அப்போதுதான் இப்போது பரவலாக சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிற பல்வேறு முறைகேடுகள் நடந்தேறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இந்த நூலகத்திலும், அண்ணா உள்ளிட்ட மற்ற தலைவர்களின் பெயரிலும் உருவாக்கப்பட்ட சிறப்பு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட நூல்களின் தரம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைப் போல எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய நிகழ்வு அமைந்திருக்கிறது.
 
தமிழகத்தில் எவ்வளவோ பதிப்பகங்கள் இருக்கையில் அவர்கள் வெளியிட்ட சுமார் லட்சக்கணக்கான நூல்கள் இருக்கையில் இந்த குறிப்பிட்ட பிரச்சனையில் ஏஐ தொழில்நுட்பத்தில் அரைகுறையாக, போதுமான ஆதாரங்கள் இன்றி மொன்னைத் தனமான நூல்கள் உருவாக்க வேண்டிய அவசியம் எதனால் உருவானது?
 
ஏன் பொதுவெளியில் பெரியார் நூலகத்தில் வைக்கத்தக்க தரமான நூல்கள் இல்லையா? என்கின்ற கேள்வி எழுகிறது.
 
கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பழந்தமிழ் சங்க நூல்கள் துவங்கி இலக்கியம், சமூகம், மருத்துவம் அறிவியல் என்று பல்வேறு துறை சம்பந்தமான நூல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
 
இதற்கு சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்படும் புத்தகக் காட்சிகளில் ஒரு உதாரணம் அத்தகைய புத்தகக் காட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, கோடிக் கணக்கான மதிப்பில் விற்பனை ஆகின்றன என்பதையும் நாம் கண்கூடாகப் பார்த்து கொண்டிருக்கிறோம்.
 
இவ்வளவு நூல்கள் இருக்கையில், இவ்வளவு பதிப்பகங்கள் இருக்கையில் தமிழகத்தில் பல்வேறு துறை சார்ந்து எழுதக்கூடிய தகுதியான எழுத்தாளர்கள் இருக்கையில் இவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் ஏஐ என்கின்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வசதியை அரைகுறையாகப் பயன்படுத்தி பல நூல்களை முறைகேடாக உருவாக்கி, அதை பெரியார் பெயரில் அமைந்திருக்கின்ற ஒரு நூலகத்திற்குள் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?
 
அதுவும் மிகவும் தரமில்லாத இந்த நூல்கள் கூடுதலான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த நூலகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
 
இவற்றை மேற்பார்வை இடுவதற்கும் எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கொண்ட ஒரு குழு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
 
இப்படிப்பட்ட தரமற்ற நூல்களைத் தேர்வு செய்வதற்காக இந்த அறிஞர்கள் குழு நியமிக்கப்பட்டது அப்படி என்றால், அந்தக் குழுவில் இருந்த எழுத்தாளர்களும் தமிழறிஞர்களும் எந்த நூல்களை பரிசீலித்து நூலகத்திற்கு பரிந்துரை செய்தார்கள்.
 
அப்படி உரிய அளவில் அவர்கள் பரிந்துரை செய்திருக்கும் பட்சத்தில் இப்படிப்பட்ட விமர்சிக்கத்தக்க முறைகேடான நூல்கள் நூலகத்திற்குள் நுழைந்திருக்குமா என்பது அடிப்படையான கேள்வி.
 
அப்படி என்றால் பெயரளவுக்கு ஒரு குழுவினரை சேர்த்துவிட்டு அந்தக் குழுவினர் பரிந்துரைத்த நூல்களை நூலக ஆணைக்குக் குழு தொடர்பானவர்கள் தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டார்களா அல்லது அவர்களுடைய பரிந்துரைகள் ஏற்கப்படவில்லையா?
 
அப்படி என்றால் ஒரு டம்மியான அளவில் மட்டும்தான் அந்தக் குழு செயல்பட்டிருக்கிறதா? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
 
முழுக்க ஊழலை மையமாகக் கொண்ட இத்தகைய நூல் கொடுக்கல் வாங்கல் நூல்களை நூலகங்களுக்கு அளித்திருப்பதில் இவ்வளவு முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்றால் லஞ்சமும் ஊழலும் நூலகத்துறை உள்ளிட்ட எவ்வளவு துறைகளில் கிருமிபோல பரவி இருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
 
இதற்கு காரணமான அதிகாரிகள் யார்? இதற்கு பின்னிருந்து ஆதாயம் பெற்ற அரசியல் அரசியல்வாதிகள் யார்?
 
இதற்கு உடந்தையாக இருந்த அல்லது இத்தகைய முறைகேடுகளுக்கு துணை போன எழுத்தாளர்கள் அல்லது தமிழறிஞர்கள் யார்? என்ற கேள்வி தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு வாசகர்கள் மத்தியில் எழுப்பப்படக்கூடிய கேள்வியாக இருக்கிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நூலக வரியைக் கட்டுகிறார்கள். அப்படி நூலக வரியைக் கட்டுகிறபோது தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களில் தரமான புத்தகங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகிறது.
 
அப்படிப்பட்ட உரிமையோடு தான் இப்போதும் கேட்கப்பட்டிருக்கிறது.
 
மக்கள் வரிப்பணத்தில் உருவான நூலகத்துறையில் ஏன் இப்படிப்பட்ட அவலமான முறைகேடுகள் நிகழ்வதற்கு அனுமதித்தார்கள்.
 
அப்படி அனுமதித்தவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் தமிழகத்தில் உள்ள தரத்தை விரும்பும் ஒவ்வொரு வாசகனும் எதிர்பார்க்கிறான்.
 
அத்தகைய நடவடிக்கையை அரசு எடுப்பதோடு இனிமேல் நூலகத்துறையில் இத்தகைய முறைகேடுகள் நடப்பதைத் தடுத்து நிறுத்தும் விதத்தில் உறுதியான ஒரு செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.
 
பெரியார் பெயரிலோ, அண்ணா பெயரிலோ அமைந்த நூலகங்களில் இப்படிப்பட்ட முறைகேடுகளை நிகழ்த்தி அந்தத் தலைவர்களை தரம் குறைக்க வைக்கும் வேலைகளை யாரும் செய்ய வேண்டாம்.
 
– லியோ
You might also like