“நல்ல காலம் பிறக்கப்போகுது” என்று கிராமப் புறங்களில் குடுகுடுப்பை அடித்து குறிசொல்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
அவர்களும் “ஜெய் ஜக்கம்மா…” என்று அழைத்தபடி ஒவ்வொருவர் வீட்டிற்கும் முன் நின்று அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி வேகமாக குடுகுடுப்பைச் சத்தம் ஒலிக்கச் சொல்வார்கள்.
ஜோதிடர்களும் எதிர்காலத்தைப் பற்றி பொதுவாகச் சொல்லக் கூடியவர்களாக நம்பப்பட்டு வந்திருக்கிறார்கள்.
மன்னர்கள் காலத்திலேயே அரசவையின் முக்கியமான அங்கமாக ஜோதிடர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
ஒரு போரைத் துவக்குவதற்கு முன்பு கூட அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறும் மரபும் இங்கிருந்திருக்கிறது.
பொதுவாக ஆட்சியாளர்களுக்கு எந்த நேரத்தில் இதைத் துவக்கலாம் எப்படிச் செயல்படலாம் என்பது மட்டுமல்ல, ஒருவர் என்ன உடை அணியலாம் என்பதுகூட ஆட்சியாளர்களுக்கு அருகில் இருக்கிற ஜோதிடர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.
சுதந்திரத்திற்கு பின்பு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முக்கியத் தலைவர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜோதிடர்கள் சொன்னதை பொருட்படுத்தி இயங்கி இருக்கிறார்கள்.
அவர்கள் குறித்துத் தந்த நேரத்தில் அரசாங்க செயல்பாடுகளைத் துவக்கியிருக்கிறார்கள்.
மிகவும் நவீனமாக ஏவப்படும் ராக்கெட் போன்றவை இயக்கப்படும் நேரத்தைக் கணிப்பதில் கூட ஜோதிடர்களின் செல்வாக்கு பின்னணியில் இருந்திருக்கிறது.
நமது அண்டை மாநிலத்தில் முதல்வராக இருந்த ஒருவருக்கு நெருக்கமாக இருந்த ஒரு ஜோதிடர், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள விசித்திரமான ஒரு யோசனையைச் சொல்லி இருக்கிறார்.
கன்னி கழியாத ஒரு சிறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று சொல்ல, அதன்படியே ஒரு சிறு பெண்ணைத் தேர்வு செய்து, அதிகம் வெளியே தெரியவராமல் ரகசிய திருமணமும் நடந்தேறி இருக்கிறது.
தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தலைவர்களுக்கு வெவ்வேறு விசித்திரமான யோசனைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள அரசியல் தலைவருக்கும் அண்டை மாநிலத்தில் சொல்லப்பட்டது மாதிரியில்லாமல் சற்றே மாற்றி, இன்னொரு முறை தாலி கட்டுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னதன் பேரில், பெருநகரம் ஒன்றிற்கு அருகில் உள்ள கோயிலில் கருவறைக்கு முன்னால், மனைவிக்கு மீண்டும் ஒருமுறை தாலி கட்டினார் அந்தத் தலைவர்.
அதைப் போலவே கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட ஒரு சிலையை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லி, அதன்படி வேறு இடத்திற்கு அந்த சிலை மாற்றப்பட்டதும் இங்கு நடந்திருக்கின்றன.
இதைப் போலவே காவிரி டெல்டா பகுதியில் உள்ள இரு கோயில்களுக்கும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரு தலைவரை போகச் சொல்லி ஜோதிடர்கள் சொல்ல, அதன்படி அவர்கள் சென்றதும் நடந்திருக்கிறது.
இதேபோல் ஆட்சித் தலைமைக்கு நீதிமன்றத்தால் எந்தப் பிரச்சனையும் வராது என்று ஜோதிடர் தரப்பில் சொல்ல, அதற்கு நேர் எதிரான தீர்ப்பு வர, குறிப்பிட்ட அந்த ஜோதிடருக்கு ‘டோஸ்’ விழும் சந்தர்ப்பங்களும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன.
தமிழகத்தில் இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்களோ, கட்சித் தலைவர்களோ மறைமுகமாகச் செய்ததை விஜய் வெளிப்படையாகச் செய்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
மிக அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளிக்க வந்த ஒரு ஜோதிடர், தமிழகத்தில் உள்ள பல முன்னணி அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சொல்லி அனைவரும் என்னிடம் வரும் கஸ்டமர்கள் தான் என்று, தன் பங்கிற்கு ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை பலப்படுத்தி இருக்கிறார்.
மக்கள் வாக்களிக்கும் வரை அவர்களை நம்பும் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்களித்து முடிந்ததும் ஜோதிடர்களை அதிகமாக ஏன் நம்பத் துவங்குகிறார்கள் என்கிற கேள்வி விடை தெரியாத அளவில்தான் இங்கு நீடித்துக் கொண்டிருக்கிறது.
ஜோதிடத்தின்படி, அவர்கள் சொன்னது பலிக்கிறதா என்பதைவிட, ஜோதிடம் சொல்கிறவர்களை நோக்கி ஏகப்பட்ட பேர் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.
நல்ல காலம் யாருக்குப் பிறக்கிறதோ இல்லையோ, ஜோதிடர்களுக்கு நல்ல காலம் நடந்துகொண்டிருக்கிறது.
– லியோ
