உணவென்பது உள்ளங்களை இணைக்கும் பாலம்!

 

சமையல் என்பது வெறும் வயிறு வளர்க்கும் கலை மட்டுமல்ல; அது மனிதர்களின் உணர்வுகளோடும், பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் இரண்டறக் கலந்த ஒரு உன்னதமான கலையாகும்.

சுவையான உணவை நம் நாவிற்குத் தந்து, நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் சமையல் கலைஞர்களின் (Chefs) உழைப்பையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில்தான் ஆண்டுதோறும் அக்டோபர் 20-ம் தேதி ‘சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

சமையல் கலைஞர்கள் தினத்தின் வரலாறு: 

உலக சமையல் கலைஞர்கள் சங்கங்களின் சங்கம் (World Association of Chefs Societies – WorldChefs) அமைப்பின் முன்னாள் தலைவரான புகழ்பெற்ற செஃப் டாக்டர் கேலகர் என்பவரால் 2004-ஆம் ஆண்டு இந்தச் சிறப்பு நாள் உருவாக்கப்பட்டது.

சமையல் கலை என்பது மிகவும் கடினமான, பொறுமை மிகுந்த மற்றும் படைப்பாற்றல் தேவைப்படும் ஒரு துறையாகும்.

உலகெங்கிலும் உள்ள சமையல் கலைஞர்களின் சேவையை கவுரவிப்பதும், இத்துறையின் பெருமையை இளம் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் இந்ந நாளின் முக்கிய நோக்கமாகும்.

சமையல் கலைஞர்களின் பங்கு:

ஒரு கலைஞர் செய்யும் தியாகம்:

நாம் விடுமுறை நாள்களிலோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ நகரங்களில் பெரும்பாலானோர் வீட்டுச் சமையலுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு உணவகங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

சுவையான உணவை உண்டு மகிழும் நேரத்தில், சமையல் கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியாமல் அடுப்பங்கரையில் வியர்வை சிந்திக் கொண்டிருப்பார்கள்.

• படைப்பாற்றல்:

ஒரு புதிய உணவின் சுவை, நிறம், மணம் மற்றும் அதன் தோற்றம் (Presentation) ஆகியவற்றைத் தரமான முறையில் வடிவமைப்பது எளிதல்ல; அது பல வருட அனுபவமும் கற்பனையும் கலந்த ஒரு கலை ஆகும்.

•சுகாதாரம் மற்றும் தரம்:

உணவின் சுவை மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் சமையல் கலைஞர்களின் பங்கு அளப்பரியது.

• உடல் உழைப்பு:

மணிக்கணக்காக நிற்பது, நெருப்புச் சூட்டில் வேலை செய்வது, கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் சமைப்பது என சமையல் கலை என்பது உடல் உழைப்பும் மன உறுதியும் நிறைந்த வேலை.

ஆரோக்கியமான எதிர்காலமும் சமையல் கலைஞர்களின் பொறுப்பு:

சமீபத்திய ஆண்டுகளில், சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் வெறும் சுவையான உணவுடன் நின்றுவிடாமல், “ஆரோக்கியமான உணவு முறை” (Healthy Eating) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுகளின் அவசியத்தைக் கற்பிக்க உலகெங்கிலும் உள்ள செஃப்கள் பள்ளிகளுக்குச் சென்று சமையல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றனர். 

அதிகம் நெருப்பு, எண்ணெய் இல்லாத சுவையான உணவுகள் தயாரிப்பது எப்படி என கற்றுக் கொடுக்கின்றனர்.

மேலும் அடுப்பே இல்லாமல் சுவையான உணவு, பழக் கலவைகள், காய்கறி சாலட் என கண்ணைக் கவரும் வகையில் ஆரோக்கியத்தை விதைக்கின்றனர். 

இவை அனைத்தும் “உணவு என்பது மனிதர்களை இணைக்கும் பாலம்.” அந்தப் பாலத்தை மிகச் சிறப்பாக அமைத்து தருபவர்கள் சமையல் கலைஞர்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் சிறிய கிராமத்து உணவகங்கள், ரோட்டோரக் கடை வரை, தன் கை மணத்தால் நம்மை மகிழ்விக்கும் அனைத்துச் சமையல் கலைஞர்களுக்கும் நமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

அன்போடு சமைக்கப்பட்ட உணவு, ஆரோக்கியமான உடலையும் மகிழ்ச்சியான மனதையும் தரும்.

– யாழினி

vels
You might also like