பொருளாதாரத்தை உலகத்தரத்துக்கு உயர்த்தும் ஸ்டார்ட் அப் தமிழர்கள்!

இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வரைபடத்தில் தமிழ்நாடு மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.

விவசாயம், உற்பத்தி துறை மற்றும் சேவைத் துறை ஆகிய மூன்றிலும் சமமான வளர்ச்சியை பெற்றுள்ள தமிழகத்தின் இந்த வெற்றிக்கு இம்மாநிலத்தைச் சேர்ந்த தொழில் முனைவோரின் அசாத்திய உழைப்பும் புதுமையை புகட்டும் சிந்தனையும் முக்கிய காரணமாக உள்ளது.

நல்வாய்ப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில் ஸ்டார்ட் அப்-களுக்கு ஆக்கபூர்வமான ஆதரவு வரத் தொடங்கி இருக்கிறது.

தவிர முதலீட்டாளர்கள் பலரும் முனைப்புடன் வருகிற இளைஞர்களுக்கு கரம் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர் பலர் தனித்துவமான தகுதிகளுடன் உலகளவில் முத்திரை பதித்து வருகின்றனர்.

இத்தகைய ஒருவர்தான் Raptee நிறுவன அதிபர் தினேஷ். ஹை வோல்டேஜ் மோட்டார் பைக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது இவரின் நிறுவனம்.

பொறியியல் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவர், சிறுவயதில் இருந்தே தொழில் தொடங்குவதை இலக்காகக் கொண்டிருந்தார்.

பள்ளியில் பயிலும் போதே யோக கலையை பயிற்றுவிக்கும் அகாடமியை ஆரம்பித்தவர் பின்பு நிறுவனங்களுக்காக கணிப்பொறி விற்பனையிலும் ஈடுபட்டார்.

தொடர்ந்து தன் தாத்தா நிர்வகித்து வந்த லேத் பட்டறையை நவீன மயமாக்கி புரோச்சிங் இந்தியா என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.

யமஹா, ஹூண்டாய் மாதிரியான பல பெரு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் செய்து தந்தது இந்த நிறுவனம்.

ஆனாலும், பொறியியல் தொடர்புடைய ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற தன் எண்ணத்தால் நிறுவனத்தை கைமாற்றி விட்டு தயாரிப்பு பணிகளை கற்க வெளிநாடு சென்றார்.

அமெரிக்காவின் டெஸ்லாவில் கிடைத்த வேலையை உதறிவிட்டு தெளிவான திட்டமிடலுடன் தன் இலக்கு நோக்கிய பயணத்தைத் துவக்கினார்.

மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் புழக்கத்தில் இருந்ததைப் போல மின்சார பைக்கையும் தயாரிக்க திட்டமிட்டார்.

இதற்கு அடிப்படையான பேட்டரி உருவாக்குவதில் மிகுந்த சிக்கல் இருந்தது. மேலும், இன்று வரையிலும் இருசக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.

வீட்டில் சார்ஜ் செய்வதற்கு ஆறு முதல் 8 மணி நேரங்கள் தேவைப்பட்டன.

இதற்கு தீர்வு கண்டுபிடிக்கும் வகையில் அதிக வோல்டேஜில் இயங்கக்கூடிய மின்சார மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் பணியினைத் தொடங்கினார்.

தன்னுடைய கல்லூரியில் உடன்படித்த நண்பர்களுடன் இணைந்து அனைத்து வேலைகளையும் மேற்கொண்டார்.

பழைய இரும்புக் கடைகளில் இருந்து வாகனங்களின் உதிரி பாகங்கள் சேகரிக்கப்பட்டன. வெல்டிங் வேலைகளுக்கு தாத்தாவின் லேத் பட்டறை உபயோகப்பட்டது.

மூன்று மாதத்தில் 120 வோல்ட் பேட்டரியில் செயல்படும் 300 கிலோ எடை கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள் உருப்பெற்றது.

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்குபேட்டரில் இணைந்தனர்.

உற்பத்தி செய்த வாகனத்தை சந்தைப்படுத்துவதற்கும் ஊக்கத்தொகை பெறுவதற்கும் என பலவற்றிற்கும் அவர்களின் வழிகாட்டுதல் உதவியது. இதன் மூலம் நிறைய முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் முதலீடு செய்தனர்.

மேலும் வடிவமைப்பு, ஆய்வுக்கூடம், தொழிற்சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிய நிறுவனமாக இதனை மாற்றினர்.

இதற்கு ஸ்டார்ட் தமிழ்நாடு மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவை பெரும் அளவில் ஆதரவு அளித்தன.

வெளிநாடுகளுக்கும் இவர்களை அனுப்பி, தொடர்ந்து செயல்பாடுகளை கண்காணித்து அடுத்த கட்ட வளர்ச்சியை அடையவும் இவை உதவின.

இன்று இந்த நிறுவனத்தின் 32 மோட்டார் சைக்கிள்கள் சென்னை சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பிற தயாரிப்பு நிறுவனங்கள் பல லட்சம் ரூபாயில் விற்கும் வண்டிகளை, குறைந்த விலை மற்றும் நிறைந்த தரத்தில் இவர்களிடம் பெற முடியும்.

முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இவற்றை, பெட்ரோல் வண்டியை விட வேகமாகவும் உற்சாகமாகவும் ஓட்ட முடியும்.

ஒரு முறை வாங்கினால் 12 வருடங்கள் வரை பராமரிப்பு எதுவும் தேவைப்படாது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

நண்பர்கள் குழுவாக இணைந்து பலப்பல சிகரங்களை தொட்டு வருகின்றனர். சென்னையில் இயங்கி வரும் இவர்களின் உற்பத்தி மையத்தில் 140-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தற்போது இருவகை மோட்டார் சைக்கிள்களை சந்தைப்படுத்துகின்றனர்.

அடுத்த கட்டமாக மாதம் 30 ஆயிரம் வண்டிகள் என்ற இலக்குடன் நகர்ந்து கொண்டிருக்கிறது இவர்களின் நிறுவனம்.

“தொழில் தொடங்க வாருங்கள் – தோள் கொடுக்க நாங்கள்” என்ற தொலைநோக்கு பார்வையோடு தமிழகத்தின் தொழில் சூழல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

வேலை தேடும் இளைஞர்களாக மட்டுமே இருந்தவர்கள் இன்று வேலை வழங்கும் விற்பன்னர்களாக உருவெடுத்து வருவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உலக தரத்திற்கு உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

S. வாணி

vels
You might also like