பெரியார், அண்ணா கொள்கைகள் தோற்றுவிட்டதா?

க. திருநாவுக்கரசு

சமீபத்தில் திராவிட இயக்கங்கள் பற்றியும், அண்ணா, பெரியார் பற்றியும் எழுந்துள்ள பல விமர்சனங்களுக்குப் பதிலளிக்கிறார் திராவிட இயக்கச் சிந்தனையாளரும், சங்கொலி இதழின் பொறுப்பாசிரியருமான க. திருநாவுக்கரசு.

அண்மைக் காலமாக மீண்டும் திராவிட இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரசாரமாக அறிவார்ந்தவர்களின் மட்டத்தில் ஒரு விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. திராவிட இயக்கத்துக்கு இவ்விமர்சனங்கள் ஒன்றும் புதியன அல்ல.

நீதிக் கட்சிக் காலத்தில், நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றாக இயங்கிய காலத்தில், இரண்டும் இணைந்து திராவிடர் கழகமாக இயங்கிய காலத்தில், அறிஞர் அண்ணா தி.மு.க.வைத் தோற்றுவித்த காலத்தில்.

இன்றைய தினம் மறுமலர்ச்சி தி.மு.க அரசியல் களத்தில் போராடுகின்ற காலகட்டம் வரையிலும் விமரிசனங்கள் செய்யப்பட்டே வருகின்றன.

இந்தப் பட்டியலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைக்கவில்லை.

திராவிட இயக்கத்தில் கருத்தியல் கோட்பாட்டை எம்.ஜி.ஆர் முழுவதுமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டார் என்று சொல்லுவதற்கில்லை.

அவர் மற்ற திராவிடக் கட்சிகளைக் காட்டிலும் அவரது சொந்த உணர்ச்சிகளுக்கே மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆகவே அவரது கட்சியில் கருத்தியல் கோட்பாடு பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் நான் அ.இ.அ.தி.மு.க.வை திராவிட இயக்கக் கட்சிகளில் ஒன்றாகப் பார்க்கவில்லை.

திராவிட இயக்கம் அதன் எதிரிகளால் தாக்கப்படும்போது அவர்கள் பல வினாக்களைத் தொடுக்கிறார்கள். இன்றைய தினம் திராவிட இயக்கக் கட்சிகள் இரு பிரிவுகளாக இயங்கி வருகின்றன.

ம.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் மூலம் மக்களைச் சந்தித்து அதிகாரத்தின் வழி திராவிட இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றப் போராடி வருகின்றன. இவர்கள் ஒரு பிரிவினர்.

மற்றொரு பிரிவினரான திராவிடக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்பினர் தேர்தலில் போட்டியிடாமல் திராவிட இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றப் போராடி வருகின்றனர்.

இவ்விரு பிரிவினரும் திராவிட இயக்கத்தினரே. இவர்களைத் திராவிட இயக்கங்கள் என்று சொல்லுவதைவிட திராவிட இயக்கமென்றே சொல்ல வேண்டும். திராவிட இயக்கக் கட்சிகளின் கொள்கை என்ன?

– என்று கேட்போர்க்குச் சுருக்கமாக, ‘வர்ணாசிரமம் நீங்கிய சாதிகளற்ற பகுத்தறிவோடு கூடிய சமதர்ம சமுதாயம் காணப் பாடுபடுவது’ என்று கூறலாம்.

இக்கொள்கைச் சூத்திரத்தில் தமிழ்த் தேசிய சிந்தனைகள், சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பெரியார், அண்ணாவின் அத்தனைக் கொள்கைகளும் நடைமுறைகளும் உள்ளடக்கமானவையாகும்.

“திராவிட இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் நிறைவேறிவிட்டன. திராவிட இயக்கம் இனித் தேவையில்லை” என்று சொல்லக்கூடியவர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.

திராவிட இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் நிறைவேறிவிட்டதாகச் சொல்ல முடியாது. அது ஒரு தோற்றம். ஆகவேதான், ‘பெரியார் தேவைப்படுகிறார்’ என்று எழுதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது இன்றும் பேசுகிறார்கள்.

இது திராவிட இயக்கத்தின் தேவையை உணர்த்துவதாகும். என்று ‘சனாதனம்’ வீழ்கிறதோ.! என்று ‘வர்ணாசிரமம் வீழ்கிறதோ, இவைசார்ந்த ‘தர்மம்’ என்றுதொலைகிறதோ அன்றுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை நிறைவேறியதாகப் பொருள்.

இப்படி ‘நிலைமை’ இருக்கிறபோது திராவிட இயக்கக் கொள்கை நீர்த்துப் போய்விட்டது என்று எப்படிச்சொல்ல முடியும்? திராவிட இயக்க எதிரிகள் செய்யும் பிரச்சாரம் அது. இன்று ‘வர்ணாசிரமம்’ எங்கே இருக்கிறது? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

1970-களில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், உச்சநீதிமன்றம் ‘வர்ணாசிரமம் இந்தியாவில் இருப்பதைக் குறிப்பிட்டுருக்கிறது. மேலும் பெரியார், அண்ணா கொள்கைகள் தோற்றுப் போய்விட்டன என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு கொள்கை வெல்லாதபோது தோற்பது எங்கே? போராட்டமே முடிவுறாதபோது முடிவை எப்படிக் கூறுகிறார்கள்? வியப்பாக இருக்கிறது.

சமூகநீதி 69% இன்று செயலில் இருக்கிறதா? என்று கேட்பார்கள். 12% முதல் 69% வரை சமூக நீதியைப் பெறுவதற்கு நடந்த போராட்டத்தைப் பற்றி வினாவும், விமர்சனமும் தொகுப்பவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சமூகநீதிப் போராட்டம் என்பது இன்றைய தினம் நாடாளுமன்றம் முடிவு எடுப்பதைவிட அந்தந்த மாநிலச் சட்டமன்றங்கள் விகிதாச்சாரத்தை முடிவு செய்துகொள்ளச் சட்டத் திருத்தம் கொண்டுவரப் பட வேண்டும்.

சமூக நீதி, வேலைவாய்ப்புச் சலுகை மட்டுமல்ல. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பகிர்வு ஆகிய இடஒதுக்கீடுகள் தனிமனிதனுக்குச் சமூகத்தில் ஒரு ‘உயர்வை’ உண்டாக்கித் தருகின்றன.

சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறபோது ‘உபசாதிகளை’ அதைச் சார்ந்த ‘மேல்சாதி’ விழுங்கத் தொடங்குகிறது. இவை மண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு ஒரு கட்டத்தில் சமுதாயத்தில் சாதியற்ற அமைப்பு உருவாகும். இது உடனடியாக நிகழக்கூடியதல்ல. சமூக நீதி என்பது ‘முள்ளைக் கொண்டு முள்ளை எடுக்கும் ஓர் உபாயமாகும்.

திராவிட இயக்கம் சாதி ஒழிப்பில் அக்கறை செலுத்தவில்லை என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். அம்முனையிலும் இந்த இயக்கம் தோல்வியையே தழுவி இருக்கிறது என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

சாதி ஒழிப்பை – சமூகநீதி, கலப்புத் திருமணம் ஆகியன மூலமாக திராவிட இயக்கம் அகற்றவே பாடுபட்டு கொண்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் சாதி அமைப்பை மிக எளிதாகக் கிள்ளி எறிந்துவிட முடியாது.

திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்கள், ‘போகிற போக்கில்’ குற்றம் சொல்லுபவர்கள் இச்சமுதாயத்திற்குச் செய்த பணிகள்தான் என்ன?

“இந்தி எதிர்ப்பில் திராவிட இயக்கம் தோற்றுவிட்டது- பின்வாங்கிவிட்டது. இந்தி எதிர்ப்பு எடுபடவில்லை” என்றெல்லாம் பேசக் கூடியவர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘இந்தியை கற்றுக் கொள்ளக்கூடாது. அம்மொழியை பேசக் கூடாது, அம்மொழியை அறிந்து கொள்ளக் கூடாது என்பது திராவிட இயக்கத்தின் நோக்கமன்று.

இந்தியைத் திராவிட இயக்கம் எதிர்த்ததற்கு இரண்டுவித நோக்கங்கள் இருந்தன. ஒன்று, மதம் சார்ந்தது. இரண்டு அரசியல் சார்ந்தது.

மதம் சார்ந்தது என்பது இந்தியின் மூலம் ‘இந்து’ என்பதை நிலைநாட்டப் பார்ப்பது. அரசியல் சார்ந்தது என்பது இந்தியை ஆட்சிமொழியாக்க நினைத்தது; ஆக்கியது;

பல மதங்கள், மொழிகள் உள்ள நாட்டில் இவை இரண்டும் சாத்தியமில்லை. இப்போக்கு சமஸ்கிருதம் சார்ந்த வைதீக மதத்தைத் தூக்கிப் பிடிக்கவும், இந்திய அரசை ‘ஒரு சார்பு’ அரசாகவே காட்டவும் உதவும்.

இப்படி அமைகிற அரசு – அமைந்து செயல்படுகிற அரசு – திராவிட இயக்கம் ஏற்றுக் கொள்கிற அரசாக எப்படி இருக்க முடியும்? ஆகவேதான், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் திராவிட இயக்கம் பல கட்டங்களில் நடத்தி வந்தது.

இன்றும் இந்தி ஆட்சி மொழியாக இருப்பதைத் திராவிட இயக்கம் எதிர்க்கவே செய்கிறது.

அறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் ‘இந்தியாவின் தேசிய மொழிகள் பதினான்கும் ஆட்சிமொழி ஆகவேண்டும்’ என்றார்.

இன்று 8-ஆவது அட்டவணையில் கடந்த 2003 டிசம்பர் மாதம், 23-ம் தேதி 110-ஆவது திருத்த மசோதாவின்படி மேலும் 4 மொழிகள் சேர்க்கப்பட்டு 22 மொழிகள் தேசிய மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன.

இவை அத்தனையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக வேண்டும்.

அதற்குரிய வகையில் குழு அமைக்கப்பட வேண்டும் எனத் திராவிட இயக்கம் வாதாடி வருகிறது. வாஜ்பாய் அரசிலேயே இக்குழு குறித்துப் பேசப்பட்டு கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் குழு அமைக்கப்படவில்லை.

இன்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 8-ஆவது அட்டவணையில் உள்ள தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்க குழு அமைக்கவிருக்கிறது.

அக்குழுவின் பரிந்துரைப்படி எல்லா தேசிய மொழிகளும் இந்தியாவின் ஆட்சிமொழிகளானால் ‘இந்தி’யின் இடம் என்ன? – என்பதை யோசியுங்கள்.

திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெற்றியை நோக்கித்தான் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

திராவிட இயக்கம் என்பது நாத்திகப் பகுத்தறிவு, பகுத்தறிவு, கடவுள் கவலை அற்றிருக்கிற நிலை, கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என அனைவரையும் கொண்டதே.

ஆனால் பகுத்தறிவு நாத்திகம், பகுத்தறிவு, கடவுள் கவலை அற்று இருக்கிற நிலையில் உள்ளவர்களே திராவிட இயக்கக் கட்சிகளின் முதனிலை தலைவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலைகளை சாதாரணக் சுட்சி உறுப்பினர்களிடத்திலே கருத்தரங்குகள், பாசறை ஏடுகள் வாயிலாகப் பயிற்சித் தந்து வளர்த்து வருகிறார்கள்.

அரசியல் கட்சியாக இருக்கிற திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடு இது. தேர்தலில் ஈடுபடாத கிராவிடக் கட்சிகள் பகுத்தறிவு நாத்திகக் கருத்தை வளர்த்தெடுப்பதில் முழு பலத்தோடு செயல்படுகின்றன.

அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குத் தேர்தலில் ஈடுபடும் திராவிடக் கட்சிகள் பங்கேற்கின்றன.

இப்பங்கேற்பு திராவிட இயக்க அரசியல் கட்சிகளிடையே ஓர் ஒருங்கிணைப்பையும் கொள்கைத் தாக்கத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

நாட்டில் நிகழ்கின்ற மூடநம்பிக்கைகள் அத்தனையும் ஒழியவில்லை என்பற்குத் திராவிட இயக்கக் கட்சிகளை மட்டும் குறைசொல்லுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

மொழிந்த வரலாற்றுக் காலத்திலிருந்து இன்றுவரை மூடநம்பிக்கைகளை எதிர்த்தே நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் போராடி வந்திருக்கிறார்கள். வருகிறார்கள்.

இந்நிலையிலும் வளர்ச்சி விகிதாச்சாரம் வளர்ந்தே வந்திருக்கிறது. இதற்கும் திராவிட இயக்கத்தைத் தொடர்புப்படுத்திக் குறை கூறுவதும் சரியானது என்று சொல்வதற்கில்லை.

மேலும் அரசியல் கட்சிகளாக இருக்கிற திராவிடக்கட்சிகளின் அரசு ‘நாத்திக அரசாக பிரகடனப்படுத்திக் கொண்டு ஆண்டுவிட முடியாது. பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மையையே பின்பற்றப்படாமல் ‘அரசுகள்’ தவிப்பதை நம்மால் காணமுடிகிறது.

அதுமட்டுமன்று, ‘செக்குலர் என்கிற பதத்திற்கு ஐரோப்பிய அரசியல் அகராதியில் வேறு பொருள் என்றும், இந்திய அரசியல் அகராதியில் வேறு பொருள் என்றும் கூறுகிறார்கள்.

ஓர் அரசு மதத்திலிருந்து விலகி ஆட்சி செய்வதே ‘செக்குலர் ஸ்டேட்’ என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இங்கோ எல்லா மதங்களையும் ‘அரசு’ சமமாக நடத்துவதைத்தான் ‘செக்குலர் ஸ்டேட்’ என்று சொல்கிறார்கள். ‘செக்குலர்’ கதியே இப்படி என்றால் ‘நாத்திக அரசு’ எனப் பிரகடனப்படுத்தினால் என்னவாகும்? – மற்ற மக்களின் ஒப்புதல் அரசுக்கு எப்படிக் கிடைக்கும்?

ஆகவே, திராவிட இயக்க அரசியல் கட்சிகள் தம்மை நாத்திக அரசியல் கட்சிகள் என்று முழுமையாகச் சொல்லிக்கொள்ள இயலாது, மேலும் உலகிலேயே எங்கும் நாத்திகர்களின் அரசு என்று நடத்தப்படவில்லை.

எனவே பகுத்தறிவு மற்றும் நாத்திகக் கொள்கைகளை உறுப்பினர்களிடத்தில் வளத்தெடுப்பதில் இக்கட்சிகள் முனைந்திருக்கின்றன.

கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களாக வருகிறவர்கள் பகுத்தறிவுவாதிகளாகவே இருப்பர். இந்நிலையை அவர்கள் இதுவரையும் கடைபிடித்து வருகின்றனர்.

பார்ப்பன எதிர்ப்பு – பார்ப்பனீய எதிர்ப்பு இரண்டும் ஒன்றுதான். பார்ப்பனர் தாம் இரு பிறப்பாளர் என்பதற்கு அடையாளமாக ‘பூணுால்’ அணிந்தால். ‘பார்ப்பனீயத்தைச்’ செயல்படுத்தப்பட வேண்டியவராகிறார்.

முதற்கட்டத்திலேயே ‘உப நயத்தை மறுத்துவிட்டால் பூணுால் அணிவதைத் தூக்கியெறிந்தால் அத்தகைய பார்ப்பனரை திராவிட இயக்கம் இணைத்துக் கொள்ளலாம். பூணுால் என்கிற அடையாளம் இல்லை என்றாலே ‘வைதீகம்’, ”ஆராதனம்’, அது சார்ந்த ‘தருமம்’ இல்லாமல் ஆகி விடுகின்றன.

அப்போது அவர் நம்ம ஆள் ஆகிவிடுகின்றார். ஆகவே, பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் என்கிற வேறுபாட்டிற்கிடையே உள்ள உண்மை இது.

ஆனால் அரசியல் ரீதியாக பார்ப்பனர், பார்ப்பனார் அல்லாதர் எனும் பகுப்பு நம்  திராவிட இயக்கம் ஏற்படுத்தியது அல்ல. பிரிட்டிஷார் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட பகுப்பாகும்.

திராவிட இயக்கம் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டமைப்பாகும்.

இதுவின்றி பார்பனரல்லாதாரில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற மதத்தினரும் அடங்குவர் என்பதாக பிரிட்டிஷார் வகுத்தளித்த முறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது.

பார்ப்பனர் அல்லாதாரில் யார் யார் அடங்குவர் எனும் விவாதம் 1920-களில் சென்னை இராஜதானி சட்ட அவையில் எழுந்தபோது, திராவிட இயக்கத் தந்தை டாக்டர். சி. நடேசனார் மேற்சொன்ன சமயத்தோடு ‘பார்ப்பனர்’ அல்லாதாரும் இத்தொகுப்பில் அடங்குவர் என ஒரு மசோதாவில் திருத்தம் செய்து சட்ட அவையில் சமர்ப்பித்தார். (அப்போதெல்லாம் Madras Legislative Council மட்டுமே இருந்தது).

பொதுவாகவே இந்திய அரசியலில் – சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் எனப் பேசப்படுவது தொடர்ந்து இருந்தே வந்திருக்கிறது. இப்போதும் இருந்து வருகிறது.

ஆனால் அது பழைய சென்னை மாகாணத்தில் – தென்னிந்தியாவில் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் என்றும், வடமாநிலங்களில் இந்து-முஸ்லிம் என்னும் அரசியல் நடைபெற்று வந்தது.

இப்போதும் இதே அரசியல்தான் தொடருகிறது. வடமாநிலங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் பற்றிப் பேசுவது இங்கிருப்பதுபோல் அவ்வளவு வெளிப்படையாக இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்மைக் காலமாக இன்னொரு போக்கு திராவிட இயக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, திராவிட இயக்கம் தலித்துகளுக்கான இயக்கமில்லை – என்று பேசப்பட்டு வருகிறது.

இந்திய சமூக அமைப்பின் ஏற்பாட்டின்படி பாதிக்கப்படுகிறவர்கள் 97/100 பேராகத்தான் இருக்கின்றோம்.

நாம் எதிர்பார்க்கின்ற பலன் அரசியல் அமைப்பிலிருந்து பெற வேண்டுமானால் கல்வி கற்ற மக்களின் எண்ணிக்கையிலிருந்தும் பட்டறிவு பெற்றவர்களிடமிருந்தும்தான் தெரிந்து எடுக்கப்பட்டு கல்வி, அரசுப் பதவிகள், ஆட்சியதிகார மய்யங்களில் இடங்களைப் பெறமுடியும்.

அந்த அடிப்படையில் பகிர்வுப் பணிகள் நடந்தே வந்திருக்கின்றன. அதற்காகத்தான் ஒவ்வொரு வகுப்பாரும் கல்வியைக் கற்கவேண்டும் என்கிற நியாயப்பாட்டை மேற்கொண்டார்.

நீதிக்கட்சி உருவானபோது அதன் அமைப்புக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். நீதிக்கட்சி அமைச்சரவையில் ‘தலித்’ அமைச்சராக இருந்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது. டாக்டர்.சி. நடசேனார் தமிழகத்தின் பூர்வக் குடிகள் தாழ்த்தப்பட்டோர்தான் என்பதை உறுதிசெய்ய ‘ஆதி திராவிடர்கள்’ என அவர்களை அழைத்தார்.

பிறரைத் ‘திராவிடர்கள்’ என்றனர் அதேபோல சுயமரியாதை இயக்கம் பெரும் பங்காற்றியிருக்கிறது. ஆதி திராவிடர்களின் பல மாநாடுகளில் பெரியார் பேசியிருக்கிறார்.

ஆதி திராவிட அமைப்புகள் ஆற்றிய பணிகள் பற்றியச் செய்திகளையெல்லாம் பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ் வெளியிட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு பெரியார் பெரும் அரணாக இருந்தார் என்பதற்கு ஒரே சான்று போதுமானது.

காந்தியடிகளுக்கும் -அம்பேத்கருக்கும் ஏற்பட்ட ‘புனே ஒப்பந்தத்’தின்போது குடி அரசு எழுதிய எழுத்துகளைப் புரட்டிப் பாருங்கள். அது ஒன்றே பெரியாரில் திராவிட இயக்கத்தின் தாழ்த்தப்பட்டோருக்கான பணியின் சிறப்பை விளக்கச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மேலும் திராவிடக் கட்சிகளில் கீழ் அமைப்பிலிருந்து மத்தி அமைப்புகள் வரை தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் இன்று வழங்கப்பட்டு வருகிறது.

பெரியாரின் திராவிட இயக்கம், தலித்துகளுக்கான இயக்கம் இல்லை என்று சொல்லுபவர்கள் தங்களது வளர்ச்சியை வெளிப்படுத்தி கொள்ள, அக்குற்றச்சாட்டை ஒரு கருவியாகக் கொள்ளலாமே ஒழிய-திராவிட இயக்கம் தலித்துகளுக்கான இயக்கமில்லை என்று சொல்லிவிட முடியாது.

அதன்பணி மிகவும் பரந்தது, கமை மிக்கது, ஆழமானது என்பதை உண்மையிலேயே புரிந்துகொண்டால் இத்தகையக் குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லை.

குற்றம் சுமத்துபவர்கள் பெரும்பாலும் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களது வெளிச்சத்தை வெளியில் காட்டுவதற்காகப் பெரியாரை ஒரு சிந்தனையாளரே இல்லை என்று சாதிக்கிறார்கள்.

அவர் மறைந்தும் பேசப்படுகிறவராக இருக்கிறார். அவரது கருத்துகள், பணிகள், இயக்கம் பற்றிய மதிப்பீடுகள் இன்றைய தினம் விவாதிக்கப்படுகின்றன என்பதுவே அவர் ஒரு சிந்தனையாளர் என்பனை மெய்ப்பிக்கின்றன.

ஆகவே இவர்களின் முத்திரை அவருக்குத் தேவையில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே நாம் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

திராவிடத் தேசியம் தமிழ்த் தேசியம் பற்றிய சர்ச்சை நீறுபூத்த நெருப்பாக நம்மிடையே உலவ விடுவது நல்லதன்று. திராவிடத் தேசியமும் – தமிழ்த் தேசியமு ஒன்றே அவை வெவ்வேறானவை அன்று.

பழந்தமிழகம் பிரிட்டிஷார் ஆட்சியில் ‘சென்னை இராஜதானியாக’ உருவெடுத்தது. அந்நிலப்பகுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுகிற மக்கள் வாழ்ந்தனர்.

தமிழைத் தவிர இதர மொழிகள் தமிழிலிருந்து கிளைத்தவை. ஆதலால் அவர்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு’ கோரப்பட்டது. டாகடர் டி.எம். ராயரின் காலத்திலேயே ‘ஜஸ்டிஸ் ஏட்டில் ‘திராவிட நாடு குறித்து அவர் எழுதினார்.

ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் தனித் தேசிய மொழிகளாக அதற்கொன்று ஒரு நிலப்பகுதியோடு பிரிய நேரிட்டதால் பழந்தமிழ்நாடு போல சிறுத்துப் போயிற்று. சிறுத்துப் போயிற்று.

தமிழ் நாட்டைப்போல திராவிட நாடு திராவிடருக்கே என்று திராவிட இயக்கம் மற்ற மூன்று நிலப்பகுதிகளில் பணியாற்றவில்லை.

ஆனால் தமிழகப் பகுதியில் பணியாற்றிய திராவிட இயக்கம் தமிழ் இயக்கமாகவே செயல்பட்டது.

‘திராவிட’ என்கிற சொல்லைக் குமாரியப் பட்டர் எனும் சமஸ்கிருத ஆசிரியர் தமிழ் மற்றும் தென்னக மொழிகளைக் குறிக்க கி.பி.7.-ம் நூற்றாண்டில் முதன் முதலாக பயன்படுத்துகின்றார். அது முதல் தமிழைத் தனித்துக் குறிக்கவும் அச்சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

19-ம் நூற்றாண்டில் மொழியியல் ஆராய்ச்சிகள் நடந்தன. திராவிட மொழிக் குடும்பம் என்றும், ஆரிய மொழிக்குடும்பம் என்றும் பாகுபடுத்தி ஆய்வுகள் தொடர்ந்தன. இன்றும் தொடர்கிறது.

இந்தியாவில் இருவேறு சிந்தனை நெறிகள் வரலாற்று அடிப்படையில் இருந்து வருகின்றன.

அவை திராவிடச் சிந்தனை நெறி, ஆரியச் சிந்தனை என்பவையே. மேலும் இவை இன அடிப்பயிைல் (Race) நோக்கத் தக்கவையாக இருக்கின்றன. Race என்பதும் Nationality என்பதும் வெவ்வெறு பொருள் உடையன.

ஆயினும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நாம் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்.

‘திராவிட’என்பது தமிழையும் குறிக்கும் சொல்லாதலால் தமிழினம் என்றும் கூறுகிறோம். ஆகவே திராவிடத் தேசியம் என்பதும் தமிழ்த்தேசியம் என்பதும் ஒன்றே. திராவிட இயக்கத்தார் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் அல்லர்.

அப்படிப் பிரச்சாரம் செய்யப்படுவதும் சரியானதன்று. (தி.க., தி.மு.க, ம.தி.மு.க ஆகியோரின் களப்பணி தமிழ்த் தேசிய உணர்வுகளையே ஊட்டிவிடுகிறது என்பதை ஓர் ஆய்வுச் சொற்பொழிவின்போது பேரா. கா. சிவத்தம்பி அவர்கள் கூறியுள்ளதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.)

திராவிட இயக்க எழுத்தாளர்களைக் கலை, இலக்கியவாதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை என்று ஒரு சில எழுத்தாளர்கள் பேட்டி எழுதுகிறார்கள். அந்த எழுத்தாளர்களெல்லாம் ஞானவான்களுக்காக எழுதுகிற ஞானவான்கள்’ அவ்வளவுதான்.

அவர்கள் மக்களுக்காக எழுதுவதில்லை. அறிஞர் அண்ணாவின் படைப்புகளையும் அவரது எழுத்துக்களையும்இலக்கியமா? என்றும் அவர் கலை இலக்கியவாதியா? – என்றும் கேட்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

அவரது எழுத்துக்கள் மக்களை ஈர்த்தது. ஈர்த்தது மட்டுமல்ல. அவர் மக்களுக்காக நினைத்ததைச் செய்ய முடிந்தது.

தம் இனத்திற்காகவும் மொழிக்காகவும் அவர் தனது உழைப்பை நல்கினார். அவரது படைப்புகள் அனைத்தும் வணிக நோக்கம் கொண்டு பரபரப்புக்காக எழுதப்பட்டவை அல்ல.

அவர் ”சீசன்’ எழுத்தாளரும் அல்ல. தேவையை உணர்ந்து எழுதியவர். திராவிட இயக்க எழுத்தாளர்கள் ஒரு சில குழுவினரால் அங்கீகரிக்கப்படாவிட்டால் என்ன? குடியா மூழ்கிப் போய்விடும்? மக்கள் அவர்களை எப்போதோ அங்கீகரித்துவிட்டார்கள்.

இதை வளர்த்து வானேன்? மக்களைவிட இவர்கள் மேலானவர்களா?

தினமணியில் 4.5.1988-ல் க.நா.சு. கீழ்க்காணும்படி எழுதினார்:

“…இலக்கியங்களைப் பற்றி விரிவுரை நடத்திய பேராசிரியர்களும், சமூக, அரசியல் விஷயங்களை ஜனங்களுக்கு புரிகிற மொழியில் எடுத்துரைத்த அரசியல்வாதிகளும், திராவிடப் பேச்சாளர்களும் வார்த்தைகளை அதிகமாக உபயோகித்து விஷயத்தையும், நடையையும் வேகம் உஷ்ணம் உள்ளதாகப் பண்ணினார்கள்.

ஈ.வெ.ரா.வின் நடையிலும் ஓர் இலக்கியத்தரமான வார்த்தைச் செட்டைக் காணலாம். பாரதியாரைப் போல அவர் பேச்சிலும் துல்லியமாகக் காண முடிந்தது.

மற்றவர்கள் பேச்சில் உள்ளதை மறைக்கும் போக்குதான் காணப்பட்டது. ஈ.வெ.ரா.வின் இலக்கியச் சேவை மிகவும் தரமானது என்று சொல்லவேண்டும்.

இத்தனைக்கும் அவர் இலக்கியச் சேவை செய்ய முன்வந்ததாகச் சொல்லவில்லை. மற்றவர்கள்தான் சொல்லிக் கொண்டார்கள்”

க.நா.சு. சொல்லிவிட்டாரே – எழுதிவிட்டாரே என்பதற்காகப் பெருமைப் பொங்க இந்த எடுத்துக்காட்டை இங்கே நான் சுட்டிக்காட்டவில்லை.

கலை, இலக்கியம் என்பது மக்களுக்குத்தான். ஞானவான்களுக்காக ஞானவான்கள் எழுதிக்கொண்டு ரசிப்பது அல்ல.

திராவிட இயக்கத்தின் பரிமாணங்கள் மிகப் பல. அதன் சமூக, கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டுத் தளம் என்பது மிகப் பரந்தது. விரிந்தது.

ஆழமானது. இன்றைய இந்திய அரசியலில் காங்கிரஸ், இடதுசாரிகள், பா.ஜ.க. ஆகிய முத்தரப்பினர்க்குள் உள்ள பழமையைவிட நீண்ட நெடிய வரலாற்றுப் பழமை உடையது திராவிட இயக்கம்.

அதன் தோற்றம் 1916 ஆக இருக்கலாம். ஆனால் இவ்வியக்கம் தோன்றுவதற்கு முன்பே தனிமனிதர்களாகப் பலர் நடத்திவந்த கருத்துப் போருக்கு இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு.

இப்படிப் பரந்த பின்னணி கொண்ட கருத்தியக்கத்திற்குத் தற்போது எழுந்துள்ள சில இருட்டடிப்புகளையும், வீண்வாதங்களையும் எதிர்கொள்வது ஒன்றும் பிரச்சனையல்ல.

– புதிய பார்வை, அக்டோபர் – 1, 2004

You might also like