புதிய மற்றும் தனித்துவமான யோசனைகளுடன் தொடங்கப்பட்டு வரும் ஸ்டார்ட் அப் தொழில்கள் தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
நல்வாய்ப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இதற்கு ஆக்கபூர்வமான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பம், உற்பத்தி, சேவை என பல்வேறு துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தவிர மூத்த தொழில் முனைவோர் பலரும், முனைப்போடு வரும் இளைஞர்களுக்கு கரம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
சில காலம் முன்பு வரை பணம் மட்டுமே தொழில் தொடங்க முதல் தேவையாக இருந்து வந்தது.
ஆனால், இன்றோ வித்தியாசமான களங்களில் புதிய சிந்தனைகளுடன் பயணிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு வங்கிகள் உதவி புரிகின்றன.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் குறைவாக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 15,000-த்தை தாண்டி உள்ளது.
கார்ப்பரேட் இளைஞர்கள் பலரும் பாரம்பரியத்தை முன்னிறுத்தி தொழில் துவங்குவது என்பது ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய ஒரு சிறு முயற்சியாக தொடங்கப்பட்டு பெரும் கிளை பரப்பி இருக்கும் நிறுவனம்தான் டிவைன் ஃபுட்ஸ் (Divine Foods).
இதன் நிறுவனரான கிரு மெய்க்காபிள்ளை சேலம் அருகில் உள்ள தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர்.
விவசாயக் குடும்பம் என்பதால் அதனைச் சார்ந்த தொழில் செய்ய வேண்டும் என்பது அவரது சிறுவயது கனவாக இருந்து வந்தது.

ஆனால், பொறியியல் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலையில் அமர்ந்தார்.
அங்கு வால்மார்ட் காஸ்ட் கோ மாதிரியான சூப்பர் மார்க்கெட்டுகளில் பாரம்பரிய பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதைக் கண்டார்.
மேலும் நியூசிலாந்து நாட்டின் பிரத்தியேக தேனும் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய சாஸ் வகையும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதைப் போன்று நம் நாட்டிலும் அந்தந்த பிராந்திய பெயரோடு விளங்கும் உணவு பொருட்களை இப்படி கொண்டு வரலாம் என்ற எண்ணம் தோன்றவே, செய்து வந்த வேலையை விட்டு, தொழில் சார்ந்த மேலாண்மை படிப்பை கற்க தொடங்கினார்.
பின்பு ஊர் தோறும் சென்று அந்தந்த ஊர்களின் சிறப்பு வேளாண் பொருட்கள் குறித்து விவரங்கள் சேகரித்தார்.
இதில் பாரம்பரிய சமையலில் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளான மஞ்சளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் சேலம், ஈரோடு, ராஜஸ்தான், மேகாலயா ஆகிய பகுதிகளில் தான் மஞ்சள் சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள்தான் அதனுடைய நிறம், மணம், திடம் போன்ற அனைத்திற்கும் மூல காரணமாக உள்ளது.
மருத்துவ குணம் மிக்க இந்த குர்குமின் மிகுதியாக உள்ளது, நம் தமிழகத்தில் விளையும் மஞ்சளில்தான். ஆகையால் இதனை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
பொதுவாக விவசாயிகளுக்கு மஞ்சள் சாகுபடியில் உடனடியாக லாபம் கிடைப்பதில்லை.
பல மாத காத்திருப்பதற்குப் பின்னரே பணம் வரும். ஆதலால் கூடுதல் விலை கொடுத்து அவர்களிடமிருந்து மஞ்சளை கொள்முதல் செய்தார்.
சாதாரண மஞ்சளைவிட இது இரண்டு மடங்கு விலை வைத்து சந்தை படுத்தப்பட்டது.
ஆனால், குர்குமின் அதிகம் உள்ள காரணமாக இதனை குறைந்த அளவே உபயோகிப்பது போதும் என்பதால் அதிக விற்பனையை இது எட்டவில்லை.
இதனை மறு ஆய்வு செய்த கிரு மெய்க்காபிள்ளை மிளகு மற்றும் பனங்கற்கண்டுடன் மஞ்சளை இணைத்து மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனையை துவக்கினார்.
சில மாதங்களிலேயே அதிக வாடிகையாளர்களை பெற்று அமேசான் தளத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியது இவரின் விற்பனை.
இன்று ஈரோடு மஞ்சள், பண்ருட்டி பலா, கரூர் முருங்கை, தூத்துக்குடி பனை, பொள்ளாச்சி தேங்காய், ஏற்காடு நெல்லி ஆகியவற்றிலிருந்து 35 விதமான பொருட்களைத் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்கிறது இவரின் நிறுவனம்.

சுமார் 3 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளராக உள்ளார் பிரபல திரைக் கலைஞர் நயன்தாரா.
இந்தியா தாண்டி சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா என உலகின் பிற இடங்களிலும் தன் கிளை பரப்பி வரும் டிவைன் ஃபுட்சின் நிறுவனர் கிரு மெய்க்காபிள்ளை, வளர்ந்து வரும் பிற தொழில் முனைவோருக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறார்.
S. வாணி