மூச்சுக் காற்றின் மகத்துவத்தை உணர்வோம்!

நவம்பர் 12: உலக நுரையீரல் அழற்சி நாள்!

உலகம் முழுவதும் நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12-ம் நாளில், உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நுரையீரல் அழற்சி (Pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது சுவாச நோய். வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் நுரையீரலில் தொற்றுகள் நேரிடுகின்றன.

புகைப்பழக்கம், நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு, மதுபானப் பழக்கம், நாள்பட்ட நுரையீரல் சுவாச நோய், ஆஸ்துமா, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவை நோய் நிலையையும் தீவிரத் தன்மையையும் நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.

பாக்டீரியாவால் ஏற்படும் நுரையீரல் அழற்சிக்கு பாக்டீரியாக்கள் முக்கியக் காரணமாக இருக்கிறது. இது மக்களிடம் தொற்றுவதுடன் பரவவும் செய்கிறது. 50 சதவிகித நுரையீரல் அழற்சிப் பாதிப்புகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்பது பொதுவாக காணப்படுகிறது.

பாரா இன்ஃப்ளூயன்ஸா, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், கொரோனா வைரஸ் மற்றும் ரைனோவைரஸ் ஆகியவற்றின் காரணமாகவும் நுரையீரல் அழற்சி ஏற்படுகிறது.

நுரையீரல் அழற்சி நோயால் உலகளவில் சுமார் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால், நுரையீரல் அழற்சியினால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளன.

இருப்பினும், வளரும் நாடுகளில் மிக இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கும், தீராத நோய்த் தொற்றுள்ளவர்களுக்கும் நுரையீரல் அழற்சியானது மரணத்திற்கான முன்னணிக் காரணியாக இருக்கிறது.

குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சி நோய்களைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. கைகழுவுதல் மற்றும் புகைப்பிடிக்காமை போன்றவை மற்ற தடுப்பு முறைகளாகும்.

நம் உடலின் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமான பணிகளை சிறப்புறச் செய்து கொண்டிருப்பவைகளில் ஒன்று நுரையீரல். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் சக்தியையும் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனை வெளியிலிருந்து உள்ளிழுத்து அனுப்புவதும் அசுத்தக் காற்றை உள்ளிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் வேலையாகும்.

இத்தகைய சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கும் நுரையீரலை நல்ல முறையில் பாதுகாப்பது நமது கடமையாகும். அதற்கு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 8 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தண்ணீர்:

நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துப் பராமரிக்க மிகவும் உதவும். எனவே, தினசரி எட்டு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பது அவசியம்.

2. பழங்கள் மற்றும் காய்கறிகள்:

வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதால் உடலிலுள்ள வீக்கங்கள் குறையும். மேலும், அவை நுரையீரல் திசுக்களைப் பாதுகாக்கவும் உதவும்.

3. வெங்காயம், பூண்டு:

வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டிலும் சல்ஃபர் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் கொண்டது. இவற்றை உட்கொள்வதால் மூச்சுப் பாதை ஆரோக்கியம் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும்.

4. இஞ்சி:

இஞ்சியிலும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. இவை சுவாசப் பாதையில் எரிச்சலுடன் கூடிய வீக்கம் இருந்தால் அவற்றை நல்ல முறையில் குணப்படுத்தி நுரையீரல் இயக்கங்கள் சிரமமின்றி நடைபெற உதவும்.

5. மஞ்சள்:

மஞ்சளில் குர்குமின் என்ற சக்தி வாய்ந்த கூட்டுப்பொருள் உள்ளது. இதிலும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. இவை நுரையீரலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்கும் செயல்பாட்டில் சிறப்பாகப் பங்கேற்று உதவி புரியும்.

6. க்ரீன் டீ:

க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இது நுரையீரல் திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவி புரியும்.

7. கொட்டைகள் மற்றும் விதைகள்:

பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள், பூசணி விதைகள் போன்றவற்றில் வைட்டமின் E அதிகம். மேலும், இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நுரையீரல் செல்கள், தீங்கிழைக்கும் ஃபிரீரேடிக்கல்கள் மூலம் சேதமடையாமல் பாதுகாக்க உதவும்.

8. யோகர்ட் மற்றும் கெஃபிர் (Kefir):

இவற்றில் உள்ள புரோபயோட்டிக்ஸ் செரிமானம் சிறந்த முறையில் நடைபெற உதவும். இதனால் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நுரையீரலில் நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டால், நுரையீரல் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவி புரியும்.

  • நன்றி – கல்கி

#உலகநுரையீரல்அழற்சிநாள் #நிமோனியா #நுரையீரல்ஆரோக்கியம் #நுரையீரல்பாதுகாப்பு #ஆரோக்கியஉணவுகள் #தண்ணீர் #பழங்கள்மற்றும்காய்கறிகள் #வெங்காயம் #பூண்டு #இஞ்சி #மஞ்சள் #க்ரீன்டீ #கொட்டைகள்மற்றும்விதைகள் #யோகர்ட் #WorldPneumoniaDay #Pneumonia #LungHealth #HealthyLungs #HealthyFoods #LungCare #Nutrition #GreenTea #Ginger #Turmeric #Probiotics

 

You might also like