உலகின் காலநிலையை நிர்ணயிப்பதில் கடல்களும் வளிமண்டலமும் மிக முக்கியமான பங்காற்றுகின்றன.
குறிப்பாக பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் சிறிய வெப்பநிலை மாற்றங்களே உலகின் பல நாடுகளில் மழை, வறட்சி, வெள்ளம் மற்றும் புயல்களை தீர்மானிக்கின்றன.
இந்த மாற்றங்களின் முக்கிய வடிவங்களே எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) ஆகும்.
இவை இரண்டும் சேர்ந்து ENSO (El Niño Southern Oscillation) எனப்படும் காலநிலை சுழற்சியின் பகுதிகளாகும்.
எல் நினோ என்றால் என்ன?
“El Niño” என்பது ஸ்பானிஷ் மொழியில் “சிறுவன்” என்று பொருள்படும். பெரு நாட்டின் மீனவர்கள் முதன்முதலில் இந்த நிகழ்வைக் கவனித்தனர்.
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக பூமத்திய ரேகை அருகே, கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக சூடாகும்போது எல் நினோ உருவாகிறது.
பொதுவாக பசிபிக் பெருங்கடலில் வீசும் வர்த்தகக் காற்றுகள் (trade wind) சூடான நீரை மேற்குப் பகுதிகளை நோக்கி தள்ளிச் செலுத்துகின்றன.
ஆனால், இந்தக் காற்றுகள் பலவீனமடையும் போது, சூடான நீர் கிழக்குப் பசிபிக் பகுதியில் குவியத் தொடங்குகிறது.
இதனால் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்து, அதன் மேலிருக்கும் காற்றும் வெப்பமடைகிறது.
சூடான காற்று அதிக ஈரப்பதத்தை தாங்குவதால் அது மேலே எழுந்து மேகங்களாக மாறி கனமழையை உருவாக்குகிறது.
இதன் காரணமாக பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது
எல் நினோவின் தாக்கங்கள்
எல் நினோ உலகின் பல பகுதிகளில் காலநிலையை மாற்றுகிறது. தென் அமெரிக்காவில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வறட்சி நிலவுகிறது. நீர்வளங்கள் குறைவதுடன், விவசாயமும் பாதிக்கப்படுகிறது
வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்களும் அதிகரிக்கலாம்.
சில நேரங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும்.
1997–98 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வு மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த நிகழ்வு உலகளாவிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.
லா நினா என்றால் என்ன?
“La Niña” என்பது ஸ்பானிஷ் மொழியில் “சிறுமி” என்று பொருள். இது எல் நினோவின் எதிர்மறையான நிலையாகும். பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் கடல் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிர்ச்சியடையும் போது லா நினா உருவாகிறது.
இந்த நேரத்தில் வர்த்தகக் காற்றுகள் இயல்பை விட வலிமையாக வீசுகின்றன. இதனால் குளிர்ந்த நீர் கடலின் ஆழத்திலிருந்து மேலே வருகிறது. குளிர்ந்த கடல் நீர் மேலிருக்கும் காற்றையும் குளிர்விக்கிறது.
கிழக்கு பசிபிக் பகுதியில் குளிர்ந்த கடல் நீர் மேலே வருவதால் அப்பகுதியின் காற்று குளிர்ந்து கீழிறங்குகிறது.
இதனால் மேக உருவாக்கம் குறைந்து பெரு மற்றும் ஈக்வடார் பகுதிகளில் மழை குறையலாம். அதே நேரத்தில் மேற்குப் பசிபிக் பகுதிகளில் அதிக மழை பெய்யும் சூழல் உருவாகிறது.
லா நினாவின் தாக்கங்கள்
லா நினா காலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைகளில் மீன்பிடித் தொழில் வளர்ச்சி பெறுகிறது. சில பகுதிகளில் குளிர்காலம் இயல்பை விட அதிக குளிர்ச்சியாக இருக்கலாம்.
2010 ஆம் ஆண்டு லா நினா காரணமாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவானது.
எல் நினோ மற்றும் லா நினாவின் சுழற்சி
இந்த இரண்டு நிகழ்வுகளும் நிரந்தரமாக ஏற்படுவதில்லை. பொதுவாக மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை தோன்றுகின்றன.
பல நேரங்களில் ஒரு எல் நினோ நிகழ்விற்குப் பிறகு லா நினா உருவாகலாம்.
வர்த்தகக் காற்றுகள் பலவீனமடையும் போது எல் நினோ உருவாகிறது. அதே காற்றுகள் வலுப்பெறும் போது லா நினா உருவாகிறது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் பொதுவாக டிசம்பர் மாதத்தில் உச்சநிலையை அடைகின்றன.
இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள்
இந்தியாவின் பருவமழை அமைப்பில் எல் நினோ மற்றும் லா நினா முக்கிய பங்கு வகிக்கின்றன.

எல் நினோ காலங்களில் தென்மேற்கு பருவமழை பலவீனமடையலாம். இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. விவசாய உற்பத்தியும் பாதிக்கப்படலாம்.
லா நினா காலங்களில் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக வடமேற்கு இந்தியா மற்றும் வங்கதேசப் பகுதிகளில் அதிக மழை பதிவாகலாம்.
இந்திய விவசாயத்திற்கு இது பல நேரங்களில் சாதகமாக அமைகிறது.
சில சமயங்களில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் குளிர் அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எல் நினோ மற்றும் லா நினா ஆகியவை வெறும் கடல் வெப்பநிலை மாற்றங்கள் மட்டுமல்ல.
அவை கடல், காற்று மற்றும் மழை ஆகியவற்றை இணைக்கும் உலகளாவிய காலநிலை அமைப்பின் முக்கிய அங்கங்களாகும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் சில டிகிரி வெப்பநிலை மாற்றங்களே உலகின் பல நாடுகளில் மழை, வறட்சி, வெள்ளம் மற்றும் விவசாயத்தை பாதிக்கக்கூடியவை.
எனவே, இந்த நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுகள் எதிர்கால காலநிலை மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கவும் மிகவும் அவசியமானவை என்பது குறிப்பிடத்தக்கது
– சங்கீதா