குழந்தைகள் பாதுகாப்பு இன்று தமிழகத்தின் மிகப் பெரிய மனித உரிமைச் சவாலாக மாறியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வேண்டிய சமூகமே அவர்களுக்கு அச்சமூட்டும் இடமாக மாறியிருப்பது பெரும் அவலம்.
இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 39% பங்குள்ள குழந்தைகள், ‘நாட்டின் எதிர்காலம்’ என்று போற்றப்பட்டாலும், பாதுகாப்பிலும் உரிமைகளிலும் புறக்கணிக்கப்படுவது மிகப் பெரிய கொடுமை.
உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.
உலக அளவில் 5 பெண் குழந்தைகளில் ஒருவரும், 13 ஆண் குழந்தைகளில் ஒருவரும் பாலியல் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
94.6% பாலியல் குற்றங்கள் குடும்பத்தினர், உறவினர், அண்டை வீட்டினர், ஆசிரியர் போன்ற நம்பிக்கைக்கு உரியவர்களாலேயே நிகழ்கின்றன.
குடும்ப மரியாதை, அச்சம், சமூக அவப்பெயர் காரணமாகப் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கே வராமல் மறைக்கப்படுகின்றன.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் மக்களவையில் 22.05.2012 அன்று நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குழந்தைகளின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பது வேதனையளிக்கிறது.
‘குழந்தைகளின் அன்பால் மலர்ந்த வெற்றி’ என்று பெருமிதம் கொள்ளும் தமிழகத்தின் புதிய அரசு, அந்த அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.
அந்த நன்றிக் கடன், குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, நலன், உரிமைகளை ஆட்சியின் முதன்மைப் பொறுப்பாக மாற்றும்போதுதான் நிறைவேறும்.
குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் அரசே உண்மையான குழந்தை நேய அரசாகும்.
- கா.கணேசன், வழக்கறிஞர், குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர்.