ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கடந்த 17ம் தேதி ஞாயிறன்று சென்னையில் நண்பரும் எழுத்தாளரும் மனநல ஆலோசருமான முனைவர் ராஜ்மோகனின் ‘நெஞ்சொடு கிளத்தல்’ நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த பல்வேறு மனநல ஆலோசகர்களும் எழுத்தாளர்களும் பங்கேற்ற இந்த விழாவில், நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள என்னை அழைத்திருந்தார்கள்.
நானும் மேடைக்குப் போய் நூலைப் பெற்றுக்கொண்டேன்.
நெஞ்சொடு கிளத்தல் – மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.
நூலாசிரியரான ராஜ்மோகன் திருநெல்வேலிப் பகுதியில் தான் நேரடியாகப் பார்த்த சில சம்பவங்களை நினைவுகூர்ந்து மிக இயல்பாக பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தற்போதைய நிலையில், மனநலம் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்கு சதவிகித அளவில் இருக்கிறது என்றும் மனநலம் குன்றியிருந்தாலும் கூட ஒரு சிறு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருவது பற்றி பேசினார்.
அடுத்து அந்த நாவலை வெளியிட்ட பதிப்பாளரான வேடியப்பன் சில வார்த்தைகளைப் பேச, அந்த நூலைப் பற்றிய விமர்சன ரீதியான கட்டுரையை வாசித்து சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார் தமிழ்பாலன்.
தொடர்ந்து பெண் எழுத்தாளர்கள் அந்த நாவல் குறித்து விரிவாகவே பேசினார்கள். விமர்சித்தும் பேசினார்கள்.
எழுத்தாளரான ஜா. தீபா பேசும்போது சிறு பெண்ணின் மனப்பிறழ்வு பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிற இந்த நாவல் தனக்கு பிடித்திருக்கிறது என்றும் அந்த நாவலில் இடம்பெற்றிருக்கிற பல நிகழ்வுகள் குறித்தும் விரிவாகவே பேசினார்.
மகாபாரத்தை நினைவூட்டும் விதத்தில் குந்தி என்கின்ற மனநலம் குன்றிய ஒரு சிறுமிக்கு நடந்த பாலியல் அத்துமீறலை மையப்படுத்தியிருக்கும் இந்த நாவலை ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் கதையின் மையத்துடன் ஒப்பிட்டுப் பேசினார் இன்னொரு பெண் எழுத்தாளர்.
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கும் ‘நெஞ்சோடு கிளத்தல்’ நாவலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். அப்படி வாசித்தால் மனச்சிதைவுக்கு ஆளானவர்களின் வலியையும் புரிந்துகொள்ள முடியும்.
– மணா