கனவுகளை நோக்கிய பயணம் வெற்றியைத் தேடி தருகிறது. இலக்குகளை கண்முன் காட்சிப்படுத்த கனவுகள் உதவி புரிகின்றன.
இத்தகைய ஒரு பெரும் கனவை சுமந்து அதை நனவாக்கியவர் தான் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தை நிறுவிய சொய்ச்சிரோ ஹோண்டா.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக கருதப்படும் இவர் 1906 ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்தார்.
சிறுவயதிலேயே இயந்திரங்கள் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருந்ததால் கல்வியைத் தொடராமல் ஜப்பானிய பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் மெக்கானிக்காக தனது பணியை தொடங்கினார்.
அங்கு கார்களைப் பழுது பார்த்து அவற்றை பந்தயங்களில் தகுதி பெறச் செய்வார். இதனால் தந்தையின் வெறுப்புக்கு ஆளானார்.
எனினும் மோட்டார் வாகன இன்ஜினில் உள்ள பிஸ்டனின் வடிவமைப்பில் அதீத ஆர்வம் ஏற்பட்டதால் ஒரு வருட காலம் அயராது உழைத்து டொயோட்டா நிறுவனத்திற்கு தனது புதிய வடிவமைப்பை அனுப்பி வைத்தார்.
எதிர்பார்க்கப்பட்ட தரம் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்தது நிறுவனம்.
இதற்கிடையே இவரின் நண்பர்கள் எல்லோரும் நல்ல வேலையில் அமர்ந்திருந்த நிலையில், தன் மகன் மட்டும் இவ்வாறு இருப்பது கண்டு வேதனையுற்ற தந்தை அங்கிருந்து அவரை வெளிவரும் படி கூறினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சொய்ச்சிரோ ஹோண்டா மறுபடியும் பிஸ்டன் வடிவமைப்பைத் தொடங்கினார்.
இம்முறை அதனை அங்கீகரித்த டொயோட்டா நிறுவனம், இந்த வகை பிஸ்டனை பெருமளவில் உருவாக்கித் தர சொய்ச்சிரோவுக்கு ஆர்டர் கொடுத்தது.
அதனை ஏற்றுக் கொண்டவர் உற்பத்திக்காக தொழிற்சாலையை நிறுவ எண்ணினார்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலமாதலால் சிமெண்டுக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டது. எனினும் கிடைத்தவற்றை கொண்டே தனது தொழிற்சாலையைக் கட்டி முடித்தார்.
அந்தப் போரில் ஜப்பானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழிந்தது அமெரிக்கா.
கொடுக்கப்பட்ட ஆர்டரை முடிக்கும் நிலையில் இருந்த இவரது தொழிற்சாலையும் தாக்குதலுக்கு உள்ளானதில் பெரும் பகுதி இடங்கள் அழிந்து போயின.
ஆனால், சொய்ச்சிரோ இதனைக் கண்டு துவண்டு விடாமல் தனது பணியாளர்களிடம் அமெரிக்க விமானங்கள் எரிபொருள் நிரப்பி விட்டு கீழே போடும் மெட்டல் கலன்களை சேமித்து வைக்குமாறு அறிவுரை வழங்கினார்.
மீண்டும் அதே தொழிற்சாலையை மறு கட்டமைப்பு செய்து பணியை தொடங்கினார்.
ஆனால், இம்முறை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது.
இந்நிலையில் ஜப்பானில் பொருளாதாரம் பெருமளவு சரிந்தது. எரிபொருள் பற்றாக்குறையினால் மக்கள் அனைவரும் நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ செல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சொய்ச்சிரோ தனது பிஸ்டனுக்கான திட்டக் குறிப்புகள் காப்புரிமையை டொயோட்டாவிற்கு விற்றார்.
அப்பொழுது அவரது மனதில் புதிய திட்டம் உருவானது.
புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரை சைக்கிளில் இணைத்து மோட்டார் சைக்கிளை உருவாக்கி தனது ஊர் முழுவதும் சுற்றி வந்தார்.
மக்கள் இதைக் கண்டு தங்களுக்கும் இதேபோல் வேண்டும் என்று கேட்கவே இதை வணிகமாக மாற்றினார் சொய்ச்சிரோ.
ஜப்பான் முழுவதும் 18,000 மிதிவண்டியகங்களின் உரிமையாளர்களையும் அழைத்து பங்குதாரர்களாக சேர்த்தார். இதனால் அவரது முதல் ஹோண்டா காப் என்று பெயரிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சந்தைக்கு வந்தன.
இவ்வாறு ஹோண்டா கம்பெனி 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே வளர்ச்சி பெற்று 1964 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் என பெயர் பெற்றார்.
தற்போது ஹோண்டா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 32 பில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் சுமார் முப்பது லட்சம் கோடி ரூபாய்). இன்றும் உலக சந்தையில் இருசக்கர மோட்டார் வாகன உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது ஹோண்டா தான்.
மூச்சு விடுபவன் மட்டுமே மனிதன் அல்ல, தொடர்ந்து முயற்சிப்பவனே மனிதன் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் சொய்ச்சிரோ ஹோண்டா.
S. வாணி