மனிதனுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆகப்பெரும் பரிசுகளில் முதன்மையானது சிரிப்பு.
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக விளங்கும் இச்சிரிப்பின்றி வாழ்க்கைச் சக்கரம் சுழல்வது என்பது சாத்தியமில்லை.
பிற உயிர்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவதும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும் சிரிப்பு, துன்பங்களுக்கு மத்தியிலும் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும் உற்ற தோழனாக உள்ளது.
வாழ்வின் சவால்களை ஒரு சின்ன சிரிப்புடன் எதிர்கொள்ளும் பொழுது, அதனைக் கடப்பது சுலபமாகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய ஒற்றுமை மற்றும் அமைதியை பேணுவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
சிரிப்பு யோகா இயக்கத்தின் நிறுவனரான டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் மும்பையில் 1995-ம் ஆண்டு இந்த தினம் தொடங்கப்பட்டது.
இவர் உலகெங்கிலும் உள்ள பெரு நிறுவனங்களால் தேடப்படும் முக்கிய ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆவார்.
சிரிப்பின் பயன்கள் குறித்த புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். சிரிப்பதனால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆய்வு செய்த பிறகு இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் விளைவே இந்த தினம் உருவாக காரணமாக அமைந்தது. சிரிப்பு, மனிதர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துகிறது.
மழலையின் சிரிப்பு: மனதை ஆட்கொள்கிறது. முதியோரின் சிரிப்பு – அனுபவங்களைப் பகிர்கிறது.
துன்பங்கள் இடையே சிரிப்பு – தொடர்ந்து பயணிக்க உத்வேகம் அளிக்கிறது.
தோல்வியில் சிரிப்பு: வெற்றியை துரத்தி பிடிக்க உதவுகிறது.
இயலாமையில் சிரிப்பு – சவால்களை எதிர்நோக்கும் துணிவை தருகிறது. இயற்கையின் சிரிப்பு – இன்புற்று வாழ வழி சொல்கிறது.
ஆழ்ந்த சிரிப்பானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மூளையில் endorphin எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரக்க பெரிதும் துணை புரிகிறது. இதனால் மன அழுத்தம் உடனடியாக குறைந்து உடல் நலம் மேம்படுகிறது.
சிரிப்பின் குரு என்று வர்ணிக்கப்படும் டாக்டர் கட்டாரியாவால் ஒரு பூங்காவில் 5 பேருடன் தொடங்கப்பட்ட இந்த மகிழ்ச்சி இயக்கம், இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிரிப்பு கழகங்களாகவும் குழுக்களாகவும் வளர்ந்துள்ளது.
மற்றவர்களுடன் பழகும் போது உண்டாகும் சிரிப்பு, நட்புறவை மேம்படுத்தி சமூக தொடர்பை அளிக்கிறது.
நரம்பியல் நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் தனியாக இருப்பதைவிட பிறருடன் சேர்ந்திருக்கும் போது பன்மடங்கு அதிகமாக சிரிக்கிறோம் என்கின்றனர்.
கவலை, வலி மற்றும் இறுக்கமான சூழ்நிலைகளை மறக்கவும் எதிர்கொள்ளவும் சிரிப்பு ஒரு தற்காப்பு கருவியாக பயன்படுகிறது.
இது மூளைக்கு சுறுசுறுப்பை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
சிரிப்பு கலை பயிற்றுனரான டாக்டர் கட்டாரியாவால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த முயற்சி, மக்களை ஆரோக்கிய பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரு பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
“சிரிப்பு – ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உலக அமைதிக்கான வழி” என்ற கருப்பொருளுடன் இவ்வருடத்தின் நிகழ்வுகள் அமைய உள்ளன.
இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள சிரிப்பு குழுக்களை சேர்ந்தவர்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடி யோகா பயிற்சிகள், போட்டிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
இது மக்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை வளர்கிறது.
ஜாதி, மதம், மொழி கடந்து சிரிப்பு மனிதர்களை ஒன்றிணைக்கிறது.
இந்த உலக சிரிப்பு தினத்தில் நாம் அனைவரும் கவலைகளை மறந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
மே 3 – உலக சிரிப்பு தினம்
S. வாணி