தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து, இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
ஏறத்தாழ தமிழகத்தில் 63 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போவது யார்? இந்தக் கேள்வியையொட்டி பலதரப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் சில கருத்துக்களை முன்வைத்திருந்தாலும், ‘ஆக்சஸ் இந்தியா’ என்கின்ற ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டும், தான் எடுத்த ‘எக்ஸிட் போலில்’ தவெக தான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை முன்வைத்திருந்தது.
அதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி வாதங்களில் அப்படி ஒரு எக்ஸிட் போல் வாக்கு முடிவை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில் இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் திமுகவுக்கு சற்று முன்னிலையில் இருந்தது.
ஆனால், அடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தின் முதல் சுற்று எண்ண ஆரம்பத்திலிருந்தே தவெக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள பல தொகுதிகளில் யாரும் எதிர்பாராத அளவுக்கு தவெக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதோடு, இதுவரை பலமுறை அமைச்சராக இருந்தவருடைய தொகுதிகளில் கூட அவர்கள் தற்போது பின்னடைவைச் சந்தித்திருக்கிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி கொளத்தூரில் போட்டியிடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட தமிழகம் முழுக்க வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்ற திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்கள்.
காலை 10 மணி நிலவரப்படி தவெக ஏறத்தாழ 104 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு அடுத்த அளவில் அதிமுக 70 இடங்களிலும் அதற்கு அடுத்த அளவில் திமுக 52 இடங்களிலும் தற்போதைக்கு முன்னிலையில் இருக்கின்றன.
இன்னும் இறுதிக்கட்ட சுற்று நிறைவடைந்த பிறகுதான் யார் கணிசமான எண்ணிக்கையில் பெற்று கணிசமான தொகுதிகளைப் பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்பதெல்லாம் தெரியவரும்.
ஆனாலும், தற்போதைய அளவில் முதற்கட்ட ஓட்டத்தில் முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது தவெக என்பதுதான் யாரும் இதுவரை எதிர்பாராத எதார்த்தம்.