தமிழகத் தேர்தல் வரலாற்றில் உச்சபட்ச சாதனை!

85.15 சதவீத வாக்குப்பதிவு!

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (23.04.2026) ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நீடித்தது.

வெயிலை தவிர்க்கும் வகையில் காலை 7 மணிக்கே முதியோர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளைச் செலுத்தினர்.

சக்கர நாற்காலி மூலம் முதியோர், மாற்றுத் திறனாளிகளை அழைத்துவர தன்னார்வலர்கள் உதவினர். 

நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

‘சுதந்தரம் பெற்ற நாளில் இருந்து இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக  85.15 சதவீத  வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இதற்கு முன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் அதிக பட்சமாக 78.29 % ஓட்டுகள் பதிவாகி இருந்தன” என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

விஐபி தொகுதிகள் நிலவரம்:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

தொகுதிகள் என்று எடுத்துக்கொண்டால், வீரபாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 93. 11 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக பாளையங்கோட்டையில் 68.97 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

காரணம் என்ன? 

அதிக பட்சமாக ஓட்டுகள் பதிவானதற்கு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றன.

‘’எங்களது 5 ஆண்டுகால ஆட்சியின் திட்டங்களால் வாக்காளர்கள் ஈர்க்கப்பட்டு அமோக ஆதரவு அளித்துள்ளனர்” என திமுக பெருமிதம் கொள்கிறது.

“ 5 ஆண்டுகால அரசின் அவலத்துக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து ஓட்டுப்போட்டுள்ளனர்” எனச் சொல்கிறது அதிமுக.

தவெகவின் கருத்து இது:

‘இந்தத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், தன்னெழுச்சியாக வாக்களித்துள்ளனர். இது புதிய ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி” என்பது விஜய் கட்சியினரின் நம்பிக்கை.

மேற்குவங்கத்தில் 92 . 03 %

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதின்படி முதல் கட்டமாக 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்குவங்க முதல் கட்ட தேர்தலில் 92.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட 5 மாநிலங்களிலும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை  நடக்கிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like