உலகின் மிகப்பெரிய மருத்துவ முறையை அறிந்துகொள்வோம்!

ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி தினம்

உலகில் எண்ணற்ற மருத்துவங்கள் நோய் தீர்ப்பதற்கு கையாளப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகால பாரம்பரியமிக்க பலவித மருத்துவ முறைகள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளன.

இம்முறைகள் பெரும்பாலும் இயற்கை மூலிகைகள், உணவு முறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நோய்களை குணப்படுத்துகின்றன. இத்தகைய ஒன்றுதான் ஹோமியோபதி மருத்துவம்.

குறைந்த அளவு மருந்துகளைப் பயன்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குணப்படுத்தும் முறையாக உலகெங்கிலும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

நோயின் தன்மைக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் நோயாளியின் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு, நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்தும் முறையாக இது அறியப்படுகிறது.

இம்மருத்துவத்தின் சிறப்புகளை அனைவருக்கும் அறிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் பத்தாம் தேதி அன்று இம்முறையை உருவாக்கிய டாக்டர் கிறிஸ்டியன் ஃபிரட்ரிக் சாமுவேல் ஹனிமனின் பிறந்தநாளையொட்டி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் ஹோமியோபதியின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பான சிகிச்சை முறை மற்றும் நவீன மருத்துவத்தில் அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்மருந்துகள் பொதுவாக பாதுகாப்பானவை மற்றும் பக்க விளைவுகள் அற்றவையாக அறியப்படுகின்றன.

இனிப்பு சுவையில் எளிதாக சுவைத்து சாப்பிடும் விதத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும்படியான மருத்துவ முறையாக விளங்குகிறது.

நீண்ட காலம் மருந்துகள் உட்கொள்ள வேண்டிய நோய்களுக்கு இது மிகவும் ஏற்புடையதாகும்.

திட மற்றும் திரவ வடிவில், நோயின் தன்மைக்கு ஏற்ப இவை வழங்கப்படுகின்றன. 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஹோமியோபதி வேகமாக பரவியது.

அதே காலகட்டத்தில் டாக்டர் ஜான் மார்ட்டின் என்பவரால் இந்தியாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்று, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவ முறையாக இது கருதப்படுகிறது.

மருந்துகள், மிக அதிக அளவில் நீர்க்கப்பட்டு தயாரிப்பதால் நச்சுத்தன்மையற்றவையாகவும் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துபவயாகவும் உள்ளது.

குறிப்பாக பெண்கள் நலம் சார்ந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வை அளிக்கும்படியான ஒரு மருத்துவ முறையாக திகழ்கிறது. கர்ப்ப காலங்களிலும் இதனை உட்கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த தினத்தில் ஹோமியோபதி மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து கருத்தரங்குகள், இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இந்த மாற்று மருத்துவ முறையின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.

ஹோமியோபதியை சுகாதார அமைப்பில் ஒருங்கிணைத்து மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவான சிகிச்சை முறையை உறுதி செய்வது இந்த தினத்தின் முக்கிய செயல்பாடாகும்.

“கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி; கூட்டு மருத்துவ முறை” என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டின் நிகழ்வுகள் அமைய உள்ளன.

இது அங்கீகரிக்கப்பட்ட இயற்கை மருத்துவம் என்ற போதிலும் இது ஒரு மாற்று மருத்துவ முறை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும் முன்பும், தகுதியான ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

– எஸ். வாணி

You might also like