செய்தி:
இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை வீச்சு!
ஹார்முஸ் நீரிணையை திறப்பதுப் பற்றி 35 நாடுகள் ஆலோசனை.
கோவிந்த் கமெண்ட்:
முதலில் ஈரானுக்குள் உள் நுழைந்து அங்கு தலைமை பொறுப்பு வகித்தவர்களைக் கொன்று, பள்ளிக் கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணை வீச வேண்டிய ஒரு கட்டாயம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது.
ஈரானும் அமெரிக்க ராணுவ முகாம் அமைத்திருக்கிற நாடுகளின் மீது ட்ரோன்களையும் வெவ்வேறு ஏவுகணைகளையும் வீசி தாக்க ஆரம்பித்து எண்ணெய் கிடங்குகள், ஹார்முஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டு, எண்ணெய்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டு, உலக நாடுகள் இன்றுவரை பல்வேறு விதமான விலையேற்றங்களையும், பொருளாதார தடுமாற்றங்களையும் பல நாடுகள் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், பிரச்சனை உருவான ஹார்முஸ் நீரிணைக்குத் தன் பெயரைச் சூட்டச் சொல்லி, டிரம்ப் சொன்னதாகவும் ஒரு தகவல் பரவியது.
இப்படி சர்வதேச அளவில் மேற்காசியப் போர் தீவிரமடைந்த நிலையிலும், அதற்கு எதிரான உலக நாடுகளின் எதிர்வினையைப் பார்த்தால், அவ்வளவு வலுவானதாக இதுவரை இல்லை.
இதையொட்டியே அமெரிக்காவிலேயே டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிரான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. சர்வதேச அளவிலும் கேட்கின்றன.
இவை போர்ச் சூழலை குறைக்குமா என்பதுதான் உலக நாடுகளில் இருக்கிற மக்களின் கேள்வி.